குடிமக்கள் செலுத்தும் வருமான வரி உள்பட பல்வேறு வரி இனங்களைக் கொண்டுதான் அரசாங்கம் வளர்ச்சி திட்டப்பணிகளை மேற்கொள்கிறது. ஆண்கள், பெண்கள், மூத்த குடிமக்கள் என ஒவ்வொருவருக்கும் தனித்தனியே வருமான உச்சவரம்பை மத்திய அரசாங்கம் நிர்ணயித்துள்ளது.
அந்த வகையில், தற்போதைய விதிமுறைப்படி, ஆண்களுக்கு ஆண்டு ரூ.1 லட்சத்து 80 ஆயிரமும், பெண்களுக்கு ரூ.1 லட்சத்து 90 ஆயிரமும் மூத்த குடிமக்களுக்கு (60 வயது முதல் 80 வயது வரை) ரூ.2 1/2 லட்சமும் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ரூ.5 லட்சமும் வருமான உச்சவரம்பு ஆகும்.
தங்களுக்கென நிர்ணயிக்கப்பட்டு இருக்கும் வருமான உச்சவரம்புக்கு மேல் வருமானம் ஈட்டினால் ஆண்களும், பெண்களும், மூத்த குடிமக்களுக்கும் அரசுக்கு வருமானவரி செலுத்த வேண்டும்.
வருமான உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும் குறிப்பிட்ட அளவுக்கு வருமான வரிச்சலுகைகளும் பெறலாம். அதன்படி, ஆயுள் காப்பீடு, பொது வருங்கால வைப்புநிதி (பி.பி.எப்.), அஞ்சலக ஆயுள்காப்பீடு (பி.எல்.ஐ.), பொது வைப்புநிதி (ஜி.பி.எப்.), வீட்டுக்கடனுக்கு செலுத்தப்படும் அசல் போன்றவற்றில் ரூ.1 லட்சம் வரை சலுகை பெறலாம்.
இதேபோல், வீட்டுவசதி கடனுக்கு செலுத்தப்படும் வட்டி தொகைக்கு அதிகபட்சமாக ரூ.1 1/2 லட்சம் சலுகை வழங்கப்படுகிறது. இதுமட்டுமின்றி, உள்கட்டமைப்பு பத்திரங்களில் செய்யப்படும் முதலீடுகளுக்கு அதிகபட்சம் ரூ.20 ஆயிரமும், மருத்துவ காப்பீட்டு திட்டங்களுக்கு ரூ.15 ஆயிரம் வரையும், மூத்த குடிமக்களாக இருப்பின் ரூ.20 ஆயிரம் வரையும் சலுகை பெறலாம்.
மிக முக்கியமாக கல்விக்கடனுக்கு செலுத்தப்பட்ட வட்டி முழுவதற்கும் சலுகை வழங்குகிறார்கள். இதற்கு உச்சவரம்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ.5 லட்சத்திற்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ளவர்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யத் தேவையில்லை. இந்த திட்டம் கடந்த 2010-2011-ம் நிதி ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம் மாதச் சம்பளக்காரர்களுக்கு மட்டுமே பொருந்தும். அவர்கள் தாங்கள் பணிபுரியும் நிறுவனங்களில் வழங்கப்படும் பார்ம்-16, வருமானவரி கணக்கு படிவமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
சம்பள வருமானத்துடன் சேமிப்பு வங்கி வட்டி வருமானம் ரூ.10 ஆயிரத்திற்குள் பெறுவோரும் இந்த திட்டத்தின் கீழ் வருவார்கள். எனினும் ஒருவர் ஓராண்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் பணியாற்றி இருந்தாலும், சம்பளத்தை தவிர வேறு இனங்களில் வருமானம் பெற்றிருந்தாலும், பணம் ரீபண்டு வரவேண்டிய சூழல் இருந்தாலும் கண்டிப்பாக வருமானவரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
வருமான வரி உச்சவரம்பு, வரிவிதிப்பு முறை, எந்தெந்த வருமான அளவுக்கு எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? என்னென்ன வழிகளில் வரிச்சலுகைகள் பெறலாம்? வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் படிவத்தை எப்படி பூர்த்தி செய்ய வேண்டும்? அதில் என்னென்ன ஆவணங்களை இணைக்க வேண்டும்? ரீபண்டு பெறும் முறை? என வருமான வரி தொடர்பான அனைத்து விவரங்களையும் வருமான வரித்துறையின் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்
No comments:
Post a Comment