சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி 68,757 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.
இந்தத் தொகுதியில் அதிமுக தொடர்ச்சியாக 5வது முறையாக வெற்றி பெற்று தனது கோட்டையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. அதிமுக வேட்பாளர் முத்துச்செல்விக்கு 94,977 வாக்குகள் கிடைத்தன. 2வது இடத்தைப் பிடித்த திமுகவின் ஜவஹர் சூரியக்குமாருக்கு வெறும் 26,220 வாக்குகளே கிடைத்தன.
3வது இடத்தை மதிமுகவின் சதன் திருமலைக்குமாரும், 4வது இடத்தை தேமுதிகவின் முத்துக்குமாரும் பெற்றனர்.
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் கடந்த 18ம் தேதி நடந்தது. இதில் அதிமுக, திமுக, தேமுதிக, மதிமுக, பாஜக வேட்பாளர்கள் உள்பட 13 பேர் போட்டியிட்டனர். அதிகபட்சமாக 78 சதவீத வாக்குகள் பதிவாகின.
வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கும் எண்ணும் மையமான புளியங்குடியில் உள்ள வீராசாமி செட்டியார் பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டன. அங்கு இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. பதிவான 16 ஓட்டுக்களில் அதிமுகவுக்கு 13 ஓட்டுக்களும், மதிமுகவுக்கு 3 ஓட்டுக்களும் கிடைத்தன.
ஆரம்பத்திலிருந்தே முத்துச்செல்வி முதலிடத்தில் இருந்து வந்தார். அவரை விட வெகுவாக பின்தங்கியிருந்தனர் மற்ற வேட்பாளர்கள்.
கடந்த தேர்தலில் இத்தொகுதியை அதிமுகவின் கருப்பசாமி வென்றார். அவரது மரணத்தைத் தொடர்ந்து இங்கு இடைத் தேர்தல் நடத்தப்பட்டது.
திராணி இருந்தால் சங்கரன்கோவிலில் வெல்லுங்கள் பார்ப்போம் என்று முதல்வர் ஜெயலலிதா, தேமுதிகவுக்கும், பிற கட்சிகளுக்கும் சவால் விட்டிருந்தார். அந்தப் பின்னணியில் தேர்தல் நடந்திருப்பதாலும், மின்வெட்டு, பஸ் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு ஆகியவற்றுக்கு மத்தியில் நடந்ததாலும் இந்தத் தேர்தலின் முடிவு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் முக்கிய கட்சிகள் பெற்ற வாக்கு விவரம்:
முத்துச் செல்வி - அதிமுக - 94,977
ஜவஹர் சூரியக்குமார் - திமுக - 26,220
சதன் திருமலைக்குமார் - மதிமுக -20,678
முத்துக்குமார் - தேமுதிக - 12,144
முருகன்- பாஜக - 1633
No comments:
Post a Comment