அமைச்சர் கருப்பசாமி மரணமடைந்ததை அடுத்து சங்கரன்கோவில் (தனி) தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த 18-ந்தேதி நடந்தது.
அ.தி.மு.க. சார்பில் முத்துச்செல்வி, தி.மு.க. சார்பில் ஜவகர் சூரியகுமார், ம.தி.மு.க. சார்பில் சதன் திருமலைக்குமார், தே.மு.தி.க. சார்பில் முத்துக்குமார், பா.ஜ.க. சார்பில் முருகன் உள்பட 13 பேர் போட்டியிட்டனர்.
242 வாக்குச்சாவடிகளில் நடந்த இந்த தேர்தலில் மொத்தம் 1,59,760 வாக்குகள் பதிவாகின. இது 77.52 சதவீதம் ஆகும். புளியங்குடி வீராச்சாமி செட்டியார் கல்லூரியில் இன்று காலை 8 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.
14 மேஜைகள் போடப்பட்டு, 18 சுற்றுக்களாக ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. சுமார் 200 பேர் வாக்குகள் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். ஓட்டு எண்ணிக்கை முழுமையாக வீடியோ காமிராவில் பதிவு செய்யப்பட்டன. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன.
மொத்தமிருந்த 16 தபால் ஓட்டுக்களில் அ.தி.மு.க.வுக்கு 13 ஓட்டுக்களும், ம.தி.மு.க.வுக்கு 3 ஓட்டுக்களும், கிடைத்தன. தி.மு.க., தே.மு.தி.க.வுக்கு ஒரு தபால் ஓட்டுகூட கிடைக்கவில்லை.
இதையடுத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டன. முதல் சுற்று ஓட்டுக்கள் எண்ணி முடிக்கப்பட்டபோது அ.தி.மு.க. வேட்பாளர் முத்துச்செல்வி 5 ஆயிரத்து 713 ஓட்டுக்கள் பெற்று முன்னிலை பெற்றார். தி.மு.க. வேட்பாளர் ஜவகர் சூரியகுமார் 1917 வாக்குகள், ம.தி.மு.க. வேட்பாளர் சதன் திருமலைக்குமார் 1182 வாக்குகள் பெற்று பின் தங்கினார்கள்.
முதல் சுற்றிலேயே அ.தி.மு.க. 3796 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றது குறிப்பிடத்தக்கது. தே.மு.தி.க. முதல் சுற்றில் 656 வாக்குகளே பெற்றது. அடுத்தடுத்த சுற்றுக்களிலும் அ.தி.மு.க.வுக்கு அதிக வாக்குகள் கிடைத்தது. தி.மு.க., ம.தி.மு.க., தே.மு.தி.க., பா.ஜ.க. உள்ளிட்ட எல்லா கட்சிகளும் பெற்ற ஓட்டுக்களை கூட்டினால் வரும் எண்ணிக்கையைவிட ஒவ்வொரு சுற்றிலும் அ.தி.மு.க. அதிக வாக்குகள் பெற்றபடி முன்னேறியது.
முதல் மூன்று சுற்று முடிவுகளிலேயே அ.தி.மு.க. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வது உறுதியானது. 10 மணி நிலவரப்படி தி.மு.க.வைவிட அ.தி.மு.க. வேட்பாளர் 3 மடங்கு ஓட்டுக்கள் அதிகம் பெற்றிருந்தார்.
இதேநிலை இறுதி வரை நீடித்தது. ஒவ்வொரு சுற்று ஓட்டுக்கள் எண்ணி முடிக்கப்பட்டபோதும் அ.தி.மு.க. வேட்பாளர் முத்துச்செல்வி சராசரியாக 5 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்றார்.
இதனால் தி.மு.க., ம.தி.மு.க., தே.மு.தி.க. வேட்பாளர்களால் அ.தி.மு.க. அருகில்கூட நெருங்க முடியவில்லை. இதன் காரணமாக ஒவ்வொரு சுற்றிலும் அ.தி.மு.க.-தி.மு.க. இடையிலான ஓட்டு வித்தியாசம் ஆயிரக்கணக்கில் அதிகரித்தப்படி இருந்தது.
அ.தி.மு.க.வை பொறுத்தவரை ஒவ்வொரு சுற்றிலும் அது ஜெட் வேகத்தில் ஓட்டுக்களை அள்ளியது. 2-வது சுற்றில் 12,286, 3-வது சுற்றில் 18,863, 4-வது சுற்றில் 24,525, 5-வது சுற்றில் 29,840, 6-வது சுற்றில் 34,832, 7-வது சுற்றில் 40,452, 8-வது சுற்றில் 45,287, 9-வது சுற்றில் 49,458, 10-வது சுற்றில் 54,277 வாக்குகள் பெற்று அ.தி.மு.க. தன்னை யாரும் நெருங்க முடியாதபடி உச்சத்துக்கு சென்றது.
11-வது சுற்றில் 59,521, 12-வது சுற்றில் 64,619, 13-வது சுற்றில் 69,792 ஓட்டுக்களை பெற்று அ.தி.மு.க. பிரமிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து எதிர்க்கட்சிகளில் எந்த கட்சிக்காவது டெபாசிட் கிடைக்குமா கேள்விக்குறி எழுந்தது. ச
ங்கரன்கோவில் தொகுதியில் பதிவான ஓட்டுக்களில் 6-ல் ஒரு பங்கு வாக்கான 26,630 வாக்குகள் பெறும் கட்சிகளே டெபாசிட் தொகையை தக்க வைத்துக்கொள்ள முடியும். எனவே 13-வது சுற்று முடிவிலேயே வைகோவின் ம.தி.மு.க., விஜயகாந்தின் தே.மு.தி.க. மற்றும் பா.ஜ.க. வுக்கு டெபாசிட் கிடைக்காது என்பது உறுதியானது.
14-வது சுற்று வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட போது சங்கரன்கோவில் தொகுதியில் அ.தி.மு.க. புதிய சாதனை ஒன்றை படைத்தது. கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது மறைந்த அ.தி.மு.க. வேட்பாளர் சொ.கருப்பசாமி 72,297 வாக்குகள் பெற்றிருந்தார். ஆனால் இந்த தடவை 14-வது சுற்று முடிவில் அ.தி.மு.க.-75,255 வாக்குகள் பெற்று, கடந்த தேர்தலில் பெற்றதைவிட அதிக வாக்குகள் பெற்று சாதனை படைத்தது.
இதை அறிந்ததும் அ.தி.மு.க. நிர்வாகிகள் மேலும் உற்சாகம் அடைந்தனர். 15-வது சுற்றில் அ.தி.மு.க. வேட்பாளர் 80,474 வாக்குகளும், 16-வது சுற்றில் 86,602 வாக்குகளும் பெற்றார். தி.மு.க. வேட்பாளர் ஜவகர் சூரியகுமார் 15-வது சுற்றில் 23,473 மற்றும் 16-வது சுற்றில் 24,749 ஓட்டுக்கள் பெற்று மிக, மிக பின் தங்கி இருந்தார்.
17-வது சுற்று ஓட்டுக்கள் எண்ணி முடிக்கப்பட்டபோது அ.தி.மு.க. 93,044 ஓட்டுக்களும், தி.மு.க. 25,793 ஓட்டுக்களும் பெற்றது. இதனால் தி.மு.க.வுக்கு டெபாசிட் கிடைக்குமா என்ற சஸ்பென்ஸ் கலந்த பரபரப்பு ஏற்பட்டது.
18-வது சுற்று ஓட்டுக்கள் எண்ணி முடிக்கப்பட்ட போது அ.தி.மு.க. 94,964 ஓட்டுக்கள் பெற்று கம்பீரமான வெற்றியை பெற்றது. தி.மு.க. 26,220 ஓட்டுக்களே பெற்றது. இதனால் தி.மு.க. வேட்பாளர் நூலிழையில் டெபாசிட் தொகையை பறிகொடுத்தார். டெபாசிட் வாங்க வேண்டுமானால் 26,627 ஓட்டுகள் பெற்றிருக்க வேண்டும். தி.மு.க. 407 ஓட்டுக்கள் குறைந்ததால் டெபாசிட்டை இழந்துள்ளது.
சங்கரன்கோவில் தொகுதியில் அ.தி.மு.க. வெற்றி பெற்ற விவரம் மதியம் 1 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 68 ஆயிரத்து 744 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வெற்றியை ருசித்துள்ளது.
இறுதி ஓட்டு விவரம் வருமாறு:-
பதிவான ஓட்டு- 1,59,760
அ.தி.மு.க. - 94,964
தி.மு.க.- 26,220
ம.தி.மு.க.- 20,675
தே.மு.தி.க.- 12,144
பா.ஜ.க.- 1,633
வெற்றி பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் முத்துசெல்விக்கு தேர்தல்அதிகாரி பரமசிவன் வெற்றி சான்றிதழை வழங்கினார். அப்போது அமைச்சர் செந்தூர்பாண்டியன், கழக அமைப்பு செயலாளர் பி.எச்.பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.
இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் சங்கரன்கோவில் தேர்தல் வெற்றியை உற்சாகமாக கொண்டாடினார்கள். சென்னையில் அ.தி.மு.க. தலைமைக் கழகம் உள்பட பல இடங்களில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. இனிப்புகள் வினியோகிக்கப்பட்டன.
எதிர்பார்த்தது தான்.ஆனால் அடக்கு முறை ஆட்சிக்கு மேலும் பலம் கிடைத்ததாக எண்ணி நடந்து கொள்வார்கள்.
ReplyDelete