ஜெனீவா/கொழும்பு/டெல்லி: அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்க ஆதரவைத் திரட்டி வரும் இலங்கை குழுக்கு பெரும் அதிர்ச்சியூட்டும் வகையில், வெறும் 7 நாடுகள் மட்டுமே இதுவரை அந்த நாட்டுக்கு ஆதரவாகப் பேசியுள்ளனவாம். இதனால் பெரும் பீதியடைந்துள்ள ராஜபக்சே, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஏதாவது செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளாராம்.
தற்போதைய நிலையில் சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, கியூபா உள்ளிட்ட 7 நாடுகள் மட்டுமே இலங்கைக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனவாம். ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் மொத்தம் 46 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. அதில் ஒரு தீர்மானம் நிறைவேற 24 உறுப்பு நாடுகளின் ஆதரவு தேவை. அமெரிக்காவின் தீர்மானத்திற்கு இதுவரை 23 நாடுகள் -இந்தியா உள்பட - ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் சில நாடுகளும் ஆதரவு தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே பெரும் சிக்கலில் மாட்டியுள்ளது இலங்கை. தங்களது தரப்பில் ஆதரவு நாடுகளின் எண்ணிக்கை 7 என்ற சிங்கிள் டிஜிட்டுக்குக் குறைந்து போய் விட்டதால் என்ன செய்வது என்று புரியாமல் இலங்கைக் குழு புலம்பிக் கொண்டுள்ளதாம்.
இலங்கைக்கு ஆதரவு திரட்டும் வகையில் இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரீஸ் ஒரு இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் அதை பெரும்பாலான நாடுகளும் புறக்கணித்து விட்டன. இலங்கை போடும் விருந்தை சுவைப்பதற்காக மேற்கண்ட 7 நாடுகளின் பிரதிநிதிகள் மட்டுமே ஆவலோடு வந்திருந்தனராம். இதனால் விருந்தை கசப்புணர்வுடன் இலங்கைத் தரப்பு முடித்ததாம்.
இதற்கிடையே, கடைசி நேர முயற்சியாக, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை ராஜபக்சே தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்தியாவின் நிலையை மாற்றிக் கொள்ளுமாறு கெஞ்சி கேட்டுக் கொண்டாராம்.
பிரதமர் மன்மோகன் சிங்கிடம் எடுத்துச் சொல்லி இந்தியாவின் நிலையை மாற்ற வேண்டும் என்று அவர் பிரணாப்பிடம் கோரினாராம். ஏற்கனவே நேற்று கிருஷ்ணாவை, சந்தித்த பெரீஸ் இதே கோரிக்கையை வலியுறுத்தினார். அதற்கு கிருஷ்ணா, கை விரித்து விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்தே பிரணாப்பைத் தொடர்பு கொண்டார் ராஜபக்சே என்கிறார்கள். ஆனால் பிரணாப் என்ன பதில் சொன்னார் என்பது தெரியவில்லை.
நேரடியாக பிரதமர் மன்மோகன் சிங்கிடமும், சோனியா காந்தியிடமும் கூட ராஜபக்சே பேசி ஆதரவு கோரலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. இருப்பினும் நாடாளுமன்றத்தில் ஆதரிப்போம் என்று சொல்லி விட்டதால் இந்திய அரசு தனது நிலையை இனி மாற்றிக் கொள்ளாது என்றே கருதப்படுகிறது.
No comments:
Post a Comment