விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் மகன் சுடப்பட்டது உள்பட பல கொடுமைகள் இலங்கையில் நடந்துள்ளன. இதனால் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
அவர் அளித்த பேட்டி:
கேள்வி: பிரபாகரனின் மகன் சுடப்பட்டு கிடப்பதை இங்கிலாந்து தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று வெளியிட்டு இருப்பதைப் பற்றி?.
பதில்: இதுபோன்ற பல கொடுமைகள் நடந்துள்ளன. அதனால் தான் இலங்கைக்கு எதிராக, அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டுமென்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். தமிழ்நாட்டிலே உள்ள எல்லா அரசியல் கட்சிகளும் இப்பிரச்சனை குறித்து வைத்துள்ள கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென்று இந்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்.
கேள்வி: இது தொடர்பாக பிரதமரை நீங்கள் சந்திப்பீர்களா?.
பதில்: அவருக்குள்ள வேலைகளை எல்லாம் எண்ணிப் பார்த்துத் தான், இது தொடர்பாக பிரதமரைச் சந்திக்குமாறு நாடாளுமன்ற திமுக தலைவர் டி.ஆர். பாலுவை கேட்டுக் கொண்டேன். அதன்படி அவர் சந்தித்துப் பேசியுள்ளார்.
3வது அணி உருப்படாது:
கேள்வி:- நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகளையொட்டி அகில இந்திய அளவில மூன்றாவது அணி, நான்காவது அணி என்றெல்லாம் வரலாம் என்கிறார்களே?.
பதில்: தொடர்ந்து மூன்றாவது அணி, நான்காவது அணி என பேசப்படுகிறது. "அணி''கள் வருகிறதோ அதனால் "பிணி''கள் வருகிறதோ என்று என்னால் இப்போது சொல்ல முடியாது.
கேள்வி: நெல்லையில் மணல் கடத்தலை தடுத்த ஒருவரை லாரி ஏற்றி கொலை செய்திருக்கிறார்களே?
பதில்: "மண்'' கடத்தல், "பொன்'' கடத்தல் எல்லாமே இந்த ஆட்சியில் சுலபமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
கேள்வி: இந்த மணல் கடத்தலுக்கு அதிமுக கவுன்சிலர் ஒருவர் தான் காரணம் என்று சொல்லப்படுகிறதே?
பதில்: விவரமாக இப்போது அது பற்றி கூற விரும்பவில்லை என்றார்.
கருணாநிதியின் பேச்சைப் பார்த்தால் அவர் மூன்றாவது அணி பக்கம் போக மாட்டார் என்றே தெரிகிறது.
No comments:
Post a Comment