ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்துள்ள போர்க்குற்றம் தொடர்பான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காது என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. இதை இன்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியே மறைமுகமாக உறுதிபடத் தெரிவித்து விட்டார்.
ஒட்டுமொத்த தமிழக அரசியல் கட்சித் தலைவர்களின் கோரிக்கைகளும் இதன் மூலம் தூக்கி குப்பைக் கூடையில் வீசப்பட்டுள்ளன.
இன்று மக்களவை கூடியதும் தமிழக எம்.பிக்கள் எழுந்து இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று கோரி முழக்கமிட்டனர். அப்போது நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி எழுந்து,
ஐக்கிய நாடுகள் சபையில் பொதுவாக எந்த ஒருநாட்டுக்கும் எதிரான தீர்மானத்தையும் இந்திய அரசு ஆதரிப்பதில்லை. இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் கொண்டுவரப்படும் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் அனுப்பியிருந்தார். இது தொடர்பாக அவருக்கு பதில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
உறுப்பினர்கள் இதற்கு மேலும் வலியுறுத்தினால் இவ்விவகாரம் தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சரும் விளக்கம் அளிப்பார் என்றார்.
ஆனால் பிரணாப் முகர்ஜியின் இந்த விளக்கத்தை தமிழக எம்பிக்கள் நிராகரித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். இருப்பினும் அவை நடவடிக்கையை லோக்சபா சபாநாயகர் நிறுத்தவில்லை. தொடர்ந்து மேற்கொண்டார்.
பிரணாபின் இந்த விளக்கம், இந்தியாவின் நிலை என்ன, மன்மோகன் சிங் மனதில் என்ன ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டது. நிச்சயமாக இலங்கைக்கு எதிரான நிலையை இந்தியா எடுக்காது என்பது அம்பலமாகி விட்டது.
முதல்வர் ஜெயலலிதாவும், திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களும் அடுத்து என்ன செய்யப் போகிறார்கள் என்பது பெரும் எதிர்பார்ப்புக்குரியதாக மாறியுள்ளது.
இவ்வளவு அமளிக்கு மத்தியிலும் வழக்கம் போல வாயை மூடிக் கொண்டு அமைதி பொங்கும் முகத்துடன் பிரதமர் வீற்றிருப்பது வியப்பாகவே உள்ளது.
2009 ல் இனப்படுகொலை நடந்து கொண்டிருந்த போது பிரணாப் பேசிய இரக்கமற்ற கொடூரமான பேச்சு நினைவிற்கு வருகிறது.ஈழத் தமிழனுக்கோ தமிழக மீனவனுக்கோ சோனியா காங்கிரஸ் எதுவும் செய்து விடாது. தமிழக தலைவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதே கேள்வி. கடிதமும் அறிக்கையும் போல் கண்ணை மூடிக் கொள்ளப் போகிறார்களா?
ReplyDelete