"அண்ணா நூலகத்தை அகற்றினால் தீக்குளிப்பேன்" என்று ஆவேசமாக பேசினார் திமுக தலைவர் கருணாநிதி.
சங்கரன்கோவில் தி.மு.க. வேட்பாளர் ஜவஹர் சூரியகுமாரை ஆதரித்து சங்கரன்கோவில் வடக்கு ரதவீதி, மேற்கு ரதவீதி சந்திக்கும் இடத்தில் தி.மு.க. சார்பில் தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் நேற்று இரவு நடந்தது.
கூட்டத்துக்கு மத்திய அமைச்சரும், தென்மண்டல அமைப்பு செயலாளருமான மு.க.அழகிரி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வீ.கருப்பசாமி பாண்டியன் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பேச்சு:
சங்ரன்கோவில் இடைத் தேர்தல் பொதுக் கூட்டம் போல் அல்லாமல், ஒரு பிரசார மாநாடு நடைபெறுவது போன்று இந்த பொதுக்கூட்டம் அமைந்து இருக்கிறது. இந்த தேர்தல் பிரசாரத்துக்கு வந்து மேடையில் ஏறிய போது எனது எண்ணம் எல்லாம், ஏற்கனவே இந்த தொகுதியில் அ.தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி மறைந்துவிட்ட தோழர் கருப்பசாமியை பற்றித்தான் நினைத்திருந்தது. அவருக்கு இந்த பொதுக்கூட்டத்திலே எனது இறுதி மரியாதையை, இறுதி அஞ்சலியை உங்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.
சட்டமன்றத்தில் அவர் வேடிக்கையாகவும், விளையாட்டகவும், சில நேரங்களில் வேதனையாகவும் நடந்து கொண்டதை நான் பொருட்படுத்தியது இல்லை.
இந்த தொகுதியில் இடைத்தேர்தல் வந்து இருக்கிறது. ஒருவர் மறைந்து அந்த இடத்தை நிரப்புவதற்காக வந்த தேர்தல் இது. இந்த தேர்தலில் வாக்காளர்களாகிய நீங்கள், யார் இருந்தார், யார் மறைந்துவிட்டார் என்பதையும், இப்போது யார் வரவேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
அண்ணா... திராவிட...
தி.மு.க. ஆட்சி திராவிட கொள்கைகளின் ஆட்சி. ஜெயலலிதா தலைமையில் இருக்கக் கூடியது அண்ணா தி.மு.க. ஆட்சி. அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்பதில், 'அண்ணா' என்பது இயக்கத்தின் பெயர். 'திராவிட' என்பது வைத்துக் கொண்ட பெயர். அதை வைத்துக் கொண்டு தமிழகத்தில் என்னென்ன கூத்துகள் நடைபெறுகின்றன என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் அடித்தட்டு மக்கள், சாதாரண மக்கள், சாமானிய மக்கள், கல்வி வாசனையே அறியாத மக்கள் மற்றும் படிப்பது கூடாது என்று தடுக்கப்பட்ட மக்கள், அவர்களை எல்லாம் வாழ வைக்க திராவிடர் இயக்கம் உருவாகியது. அதை உருவாக்கி வளர்த்த பெரியார், அண்ணா போன்ற தலைவர்கள் இப்போது இல்லை.
ஆனால் நாம் இருக்கிறோம. எவ்வளவு நாட்கள் இருப்போம் என்பது தெரியாது. எவ்வளவு காலத்துக்கு இருப்போமோ அதுவரை திராவிடர் என்ற பெருமையை நிலைநாட்டும் கடைமையை நிறைவேற்றுவோம் என்று சூளுரைத்து இங்கே விளக்கிக் கொண்டிருக்கிறோம்.
சுந்தரனாரும் விவேகானந்தரும்...
திராவிட என்று சொல்ல உச்சரிக்கும் போது அதில் ஈர்க்கப்படுகிறவர்கள் உள்ளார்கள். அந்த சொல்லால் ஈர்க்கப்படுகிறவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல.
இந்த மாவட்டத்தை சேர்ந்த, இதே மாவட்டத்தில் பணியாற்றிய மனோன்மணியம் சுந்தரனார், விவேகானந்தரை சந்தித்தார். விவேகானந்தரிடம் பேசிய போது அவர், "உங்களை நான் ஏற்றுக் கொள்கிறேன. உங்கள் கருத்துக்களை எல்லாம் சிந்திக்கிற வாய்ப்பை நான் பெறுகிறேன். அதே நேரத்தில் நான் திராவிடர் என்ற உரிமையை விட்டுத்தர எப்போதும் முடியாது," என்று சொன்னவர்தான் சுந்தரம்பிள்ளை. அப்படிப்பட்ட எடுத்துக்காட்டாக விளங்குகிற சொல் திராவிடம். அதை முதலாவதாகக் கொண்டு இயங்குகிற கழகம்தான் தி.மு.க.
உண்மையான உணர்வோடு திராவிட என்ற சொல்லை பயன்படுத்தி, இன வரலாற்றை இளைய சமுதாயத்துக்கு உணர்த்தும் இயக்கம் தி.மு.க. அப்படிப்பட்ட தி.மு.க. நடத்தும் இந்த பிரசார பொதுக் கூட்டத்தில் எங்களுக்கு ஆதரவு தாருங்கள் என்று கேட்கிறோம்.
'எடை' போடும் தேர்தல்
இது இடைத்தேர்தல் என்று சொல்லப்படுகிறது. உண்மைதான். இந்த இடைத்தேர்தல். ஒருவர் மறைந்துவிட்டதால் நடத்தப்படுகிற தேர்தல் என்று சொல்லலாம். தற்போது நடைபெறுகிற ஆட்சியை, 9 மாத காலம் நடைபெற்ற ஆட்சியை எடை (இடை) போடுகிற தேர்தல் என்றும் சொல்லலாம்.
1980-ம் ஆண்டு சங்கரன்கோவிலுக்கு வந்தேன். அப்போது விவசாயிகளின் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. 20 ஆயிரம் பேர் அந்த போராட்டத்தில் கைது செய்யப்பட்டார்கள். நாராயணசாமி நாயுடு, அவரது தளபதிகள் மற்றும் விவசாயிகள் சங்கத்தினரை அ.தி.மு.க. ஆட்சியில் கைது செய்து சிறையில் போட்டார்கள். போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் பலர் இறந்தார்கள். அதை கண்டித்து போராட்டம் நடத்தியதுதான் தி.மு.க.தான். அதை இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
7 ஆயிரம் கோடி விவசாய கடன் ரத்து செய்தோம். விவசாயிகளுக்கு, நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கினோம். பயிர் கடனை தள்ளுபடி செய்தோம். தாட்கோ கடனை தள்ளுபடி செய்தோம். உழவர் சந்தைகள் அமைத்தோம்.
ரூ.319 கோடி செலவில் தாமிரபரணி ஆறு, கருமேனி ஆறு, நம்பியாறு நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்தினோம். அப்போது பொதுப்பணித்துறை அமைச்சராக துரைமுருகன் அந்த திட்டத்துக்காக எத்தனை முறை இங்கே வந்தார் என்பது உங்களுக்கே தெரியும்.
சமச்சீர் கல்வி பட்டபாடு
இன்றைய ஜெயலலிதா ஆட்சியில் என்னென்ன செய்தார் என்பதும் உங்களுக்கு தெரியும். ஆட்சிக்கு வந்ததும் வராததுமாக சமச்சீர் கல்வி திட்டத்தை சமாதிக்கு அனுப்ப முயற்சி செய்தார். உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. பெற்ற தீர்ப்புதான், தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வியை அமல்படுத்த முக்கிய காரணமாக அமைந்தது. நாம் உச்சநீதி மன்றத்துக்கு செல்லாமல் இருந்து இருந்தால் இன்று சமச்சீர் கல்வி என்பதே இல்லாமல் போயிருக்கும். உயிர் சாதிக்கு கல்வியும், அடிமட்ட சாதிக்க படிப்பறிவே கிடையாது, வாய்ப்பு குறைவு என்ற சூழ்நிலைதான் வாய்த்திருக்கும்.
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பெயரால் பாவேந்தர் செம்மொழி தமிழாய்வு நூலகத்தை இடித்து, துவைத்து, தரைமட்டமாக்கி, அதில் இருந்த ஆயிரக்கணக்கான புத்தகத்தை எல்லாம் குப்பைக் கிடங்குக்கு அனுப்பி பாரதிதாசன் புகழுக்கே களங்கத்தை ஏற்படுத்திய அரசுதான், ஜெயலலிதா அரசு. தமிழை உயிராக மதித்த பாரதிதாசன், தேவநேயபாவாணர், பாரதியார் படங்களை அகற்றினார்கள்.
ஒரு ஆட்சி மாறி, அல்லது மக்களால் மாற்றப்பட்டு இன்னொரு ஆட்சி வருவது இயற்கை. அப்படி வருகிற போது ஆட்சிக்கட்டிலில் இருப்பவர்கள், முதலில் இருந்த ஆட்சியில் இருந்தவர்களை மதிக்க வேண்டும்.
வெள்ளையர் படங்களை ஏன் அகற்றினோம் என்றால் அவர்களால் நாம் அடிமைப்பட்டோம் என்பதால் அகற்றினோம். புரட்சிக் கவிஞர் என்ன செய்தார்? புரட்சிக் கவிஞர் புத்தகங்களை எல்லாம் குப்பைக்கிடக்குக்கு ஏன் அனுப்ப வேண்டும்? இது நியாயம்தானா?
தீக்குளிப்பேன்...
சென்னையில் அண்ணாவின் பெயரால் அமைக்கப்பட்ட நூற்றாண்டு நூலகத்தை, ஆசியாவிலேயே எங்கும் இல்லாத அளவில் கட்டப்பட்ட நூலகத்தை, வெளிநாட்டுக்காரர்கள் எல்லாம் பாராட்டி புகழ்ந்த நூலகம் அது.
அண்ணாவின் புகழை வரலாற்றில் பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக அண்ணா நூற்றாண்டு நூலகம் கட்டினோம். ஆனால் அதை இடித்துவிட்டு மருத்துவமனையாக்க போகிறேன் என்று ஜெயலலிதா கூறுகிறார். அண்ணா பெயரால் கட்சி வைத்துக் கொள்ள உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது?
மருத்துவமனை கூடாது என்று சொல்பவன் நான் அல்ல. வேண்டும் என்றே அண்ணா பெயரால் நாங்கள் அமைத்த நூலகத்தை அகற்றிவிட்டு அங்கே ஆஸ்பத்திரி கட்டுவோம் என்றால், அது யாருக்கு ஆஸ்பத்திரி? மனநோயாளிகளுக்கா?
இன்றைக்கு சொல்லி வைக்கிறேன். தியாகிகளுக்கு, போராட்டக்காரர்களுக்கு, புகழ் சேர்த்துக் கொடுத்த நெல்லைச் சீமையில் இருந்து சொல்லிக் கொள்கிறேன், உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டாலும் கூட அதை அகற்றியே தீருவோம் என்று ஜெயலலிதா அடம்பிடிப்பாரேயானால், அந்த நாள் கருணாநிதி தீக்குளிக்கும் நாளாக இருக்கும்.
தம்பி, தம்பி என்று பாராட்டி எங்களை எல்லாம் ஆளாக்க அண்ணா அரும்பாடுபட்டார். அவர் பெயரால் உருவான அண்ணா நூற்றாண்டு நூலகத்தை நாங்கள் அகற்றியே தீருவோம் என்று ஜெயலலிதா ஆணையிடுகிறார் என்றால் நாங்கள் மேற்சொன்னதைவிட என்ன சொல்லிவிட முடியும்?
அண்ணா தான் எங்களுக்கு ஆசிரியர். அவரை உருவாக்கியவர் தந்தை பெரியார். எக்காரணம் கொண்டும் திராவிட குறிக்கோளில் இருந்த இடம் மாறிவிட மாட்டோம்.
இந்த தொகுதியில் இருக்கும் ஆடவர்களே, பெண்டீர்களே, ஆசிரிய பெருமக்களே, மாணவச் செல்வங்களே, விவசாய பெருங்குடி மக்களே, நெசவாள தோழர்களே, நீங்கள் எல்லாம் தி.மு.க. வேட்பாளர் ஜவகர் சூரியகுமாருக்கு, உங்கள் மேலான வாக்குகளை உதய சூரியன் சின்னத்திலே அளித்து வெற்றி பெறச் செய்யுங்கள்," என்றார் கருணாநிதி.
பங்கேற்றவர்கள்
முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர்மைதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் தொல்திருமாவளவன், தி.மு.க. துணை பொதுச்செயலாளர் துரைமுருகன், மூவேந்தர் முன்னணி கழக தலைவர் ஸ்ரீதர்வாண்டையார், வல்லரசு பார்வர்டு பிளாக் நிர்வாகி அமாவாசை, இந்திய தேசிய லீக் பஷீர் அகமது, முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில் மத்திய மந்திரிகள் ஜெகத்ரட்சகன், காந்திசெல்வன், பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கவேலு, ராமலிங்கம், முன்னாள் சபாநாயகர் இரா.ஆவுடையப்பன், முன்னாள் துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி, முன்னாள் அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், சற்குணபாண்டியன், பொன்முத்துராமலிங்கம், கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழியே பேசு நேற்றைய தினம் சங்கரன் கோயில் தேர்தல் பிரசாரம்.(?)
ReplyDeleteவந்திட்டான்யா வந்திட்டான்.பதவி விலகியாச்சு,உண்ணாவிரதம் இருந்தாச்சு,தீக்குளிப்பது தான் பாக்கி.நல்லா தீக்குளியுங்க.இன்னமும் எத்தனை நாள்.இன்று போனால் என்ன நாளை போனால் என்ன.இன உணர்வுள்ள தமிழன் எவனும் கவலைப் பட மாட்டான்.