ஜெயலலிதா சவாலை நாங்கள் ஏற்றோம், எங்கள் சவாலை அவர் ஏற்பாரா என்று தேமுதிக இளைஞரணி செயலாளர் சுதீஷ் பேசினார்.
சங்கரன்கோவிலில் தேமுதிக செயல் வீரர்கள் கூட்டம் கட்சி தேர்தல் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் தேமுதிக இளைஞரணி செயலாளர் சுதீஷ் பேசியதாவது:
திமுகவை விட்டு எம்.ஜி.ஆர் வெளியேறிய போது கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு கொடுத்தன. அடுத்த தேர்தலில் எம்.ஜி.ஆர் தமிழக முதல்வராக ஆனார். அதே போல், தற்போது சங்கரன்கோவில் தொகுதி இடைத் தேர்தலில் தேமுதிகவுக்கு, மா.கம்யூ., ஆதரவு கொடுத்துள்ளது. வரும் தேர்தலில் தேமுதிக வெற்றி பெற்று விஜயகாந்த் தமிழக முதல்வராக பொறுப்பேற்பார்.
தமிழக அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், அதிகாரிகள் பெயர்கள் ஏதும் ஜெயலலிதாவுக்கு தெரியாது. விஜயகாந்திற்கு புள்ளி விபரங்களுடன் அனைத்து தகவல்களும் தெரியும். கடந்த சட்டசபை தேர்தலில் ஜெயலலிதாவுக்கு தெரியாமல் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டதாக தெரிவித்தனர். முதலில் அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம் என்றுதான் விஜயகாந்த் கூறினார். தொண்டர்கள் வற்புறுத்தலின் பேரில்தான் அக்கட்சியுடன் கூட்டணி வைத்தார்.
சட்டசபையில் விஜயகாந்த்தை பார்த்து ஜெயலலிதா, திராணி இருந்தால் தனித்து போட்டியிட்டு வெற்றி பெறுங்கள்' என சவால் விட்டார். இந்த சவாலை நாங்கள் ஏற்று கொண்டு தற்போது சங்கரன்கோவில் தொகுதியில் தனியாக போட்டியிடுகிறோம். இதே போல், சட்டசபையை கலைத்து விட்டு தனித்து போட்டியிடுங்கள் என்ற எங்கள் சவாலை ஜெயலலிதா இதுவரை ஏற்று கொள்வில்லை. உடனடியாக சட்டசபையை கலைத்து விட்டு தனித்து போட்டியிட்டு பார்த்தால் யார் முதல்வராக வருவார் என்பதை மக்கள் முடிவு செய்வர். தற்போது சட்டசபையில் விஜயகாந்த் சீட்டுக்கும், முதல்வர் சீட்டுக்கும் 10 அடி தூரம்தான் உள்ளது. 2016 தேர்தலில் முதல்வராக விஜயகாந்த் வருவார் என்று இங்கு சிலர் பேசினர். அப்போது இல்லை, ஒரு ஆண்டோ அல்லது இரண்டு ஆண்டோ அல்லது அடுத்த மாதம் கூட தேர்தல் வரலாம். அந்த தேர்தலில் முதல்வராக விஜயகாந்த் பொறுப்பேற்பார் என்பது உறுதி.
நாங்கள் பதவிக்கு வந்தாலும் மக்கள் பிரச்னைகளை மட்டும் சிந்தித்து இப்போது போல் எப்போதும் பணியாற்றும். திருமங்கலம் சட்டசபை இடைத் தேர்தலில் எங்கள் பார்முலாவை திமுகவினர் "காப்பி'யடித்தனர். அதே போல், சங்கரன்கோவில் தொகுதியை தற்போது 9 மண்டலங்களாக பிரித்து தேர்தல் பணிகளை செய்து வருகிறோம். இதனை அதிமுகவினர் காப்பியடித்துள்ளனர்.
தொகுதியில் எங்கள் வாகனங்களை கண்டாலே அதிமுகவினர் பறக்கின்றனர். அவர்களிடம் முதியவர்கள் மட்டுமே உள்ளனர். எங்கள் கட்சியின் இளைஞர்கள் முன்பு அவர்களால் நிற்க கூட முடியவில்லை. தினமும் காலையில் 6 முதல் 9 மணி வரையிலும், மாலையில் 4 முதல் 10 மணி வரையில் அனைவரும் தேர்தல் பணிகளை செய்ய வேண்டும். இவ்வாறு பணிகளை மேற்கொண்டால் 20 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்.
சங்கரன்கோவில் தொகுதியில் வெற்றி பெற்ற பிறகு எங்கள் வேட்பாளர் வீடு, வீடாக நன்றி கூறுவார். அப்போது பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தால் ஒரு மாதத்திற்குள் இப்பிரச்னைகளை தீர்ப்போம். இந்த தேர்தலில் எங்களுக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு அளிக்க வேண்டும்.
இவ்வாறு மாநில இளைஞரணி செயலாளர் பேசினார்
காப்டன் தம்பி சென்ற தேர்தல் என்னாயிற்று?
ReplyDelete