கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு எதிராக போராடி வரும் மக்களுக்கு தண்ணீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு விட்டது. முள்ளிவாய்க்காலில் தமிழர்களை குண்டு போட்டுக் கொன்றதைப் போல எங்களையும் கொல்லத் திட்டமிடுகிறார்களா என்று தெரியவில்லை என்று அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கூடங்குளம் அணுமின்நிலையம் செயல்படுவதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்ததை அடுத்து அங்கு நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வருகிறது. தமிழக அரசின் அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லையில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் அணுமின்நிலையத்தை மூட வலியுறுத்தி போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். இந்த உண்ணாவிரதப் போராட்டம் மூன்றாவது நாளாக நீடிக்கிறது. அவருடன் 500க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
பதற்றம் நீடிப்பு
உதயகுமார் எந்த நிமிடத்திலும் கைது செய்யப்படலாம் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய உதயகுமார், தன்னை கைது செய்து சிறையில் அடைத்தாலும் சிறையிலும் உண்ணாவிரதத்தை தொடருவேன் என்று கூறியுள்ளார். தான் கைது செய்யப்படுவதைக் கண்டு பயப்படவில்லை என்றும் அரசுப் பணத்தை நான் திருடவில்லை. யாருக்கும் எந்தத் தீங்கும் இழைக்கவில்லை. பின்னர் ஏன் நான் பயப்பட வேண்டும் என்றார்.
அடிப்படை வசதிகள் நிறுத்தம்
இடிந்தகரையில் மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறுத்தப்பட்டு விட்டதாக குற்றம் சாட்டிய உதயகுமார், உண்ணாவிரதம் இருக்கும் மக்கள் சுகாதார வசதிகள் இன்றி தவிப்பதாக கூறினார். முள்ளிவாய்க்கால் சம்பவம் போல இடிந்தகரையில் உள்ள தமிழர்களை கொத்து கொத்தாக கொலை செய்ய இந்த அரசுகள் முடிவு செய்துள்ளதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
சிறையில் அடைப்பு
இதனிடையே அணுமின்நிலையத்திற்கு எதிராக போராடியதால் கைது செய்யப்பட்ட 156 பேர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கைதான 42 பெண்கள் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள மத்திய பெண்கள் சிறையிலும், 114 ஆண்கள் திருச்சி மத்திய ஆண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
தொடர்ந்து இடிந்தகரையில் பதட்டமும், பரபரப்பும் நீடிக்கிறது.
சங்கரங்கோயில் அங்கீகாரமாக கருதி, இந்த நூற்றாண்டின் கிற்லர் ராஜபக்சே போல், நம் நாட்டில் அட்டகாசம் அராஜகம் மிகப் பயங்கரமாக தொடரும்.ஜனனாயக ரீதியில் போராடியவர்களுக்கு இந்த நிலை என்றால்,எண்ணிப் பார்க்க முடியவில்லை. சென்ற வாரம் மீண்டும் ஜப்பானில் பாதிக்கப்பட்ட இடங்களில் கதிர் வீச்சு கண்டறியப்பட்டுள்ளது.அதுவும் அதி உயர் நிலையில்.
ReplyDelete