சங்கரன்கோவில் தொகுதியில் மார்ச் 15ம் தேதி திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொள்ளவுள்ள பிரசாரக் கூட்டத்திற்கு முக்கிய இடமான வடக்கு ரதி வீதி பகுதியை தி்முக முன்பதிவு செய்து விட்டதால், ஜெயலலிதாவுக்கு அந்தப் பகுதியில் பிரசாரம் செய்யும் வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது. இதனால் அவர் கூட்டம் போட முடியாமல் தெருமுனைப் பிரசாரம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இந்த வடக்கு ரதி வீதிக்கு ஏன் இவ்வளவு முக்கியம் என்ற கேள்வி எழலாம். காரணம் இருக்கிறது. வடக்கு ரத வீதியில் கூட்டம் போடும் கட்சிதான் வெற்றி பெறும் என்பது இந்தப் பகுதி அரசியல் கட்சியினரின் ஐதீகம். எனவேதான் வடக்கு ரத வீதியில் கூட்டம் போட கட்சியினர் மத்தியில் போட்டி மூளும். இந்தப் போட்டியில்தான் நாத்திகர்களின் கட்சியாக கருதப்படும் திமுக முந்திக் கொண்டு இடத்தைப் பிடித்து விட்டது. இதனால் ஆத்திக கட்சியான அதிமுக அதிர்ச்சி அடைந்துள்ளது.
இத்தனைக்கும் தெற்கு ரத வீதிதான் விசாலமானது, பெரியது. வடக்கு ரத வீதி சற்று குறுகலானது. இருப்பினும் சென்டிமென்ட்படி வடக்கு ரதி வீதியைத்தான் அரசியல்வாதிகள் பெரிதும் விரும்புகிறார்கள்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே முதல் வேலையாக வடக்கு ரத வீதியை போலீஸாரிடம் சொல்லி புக் செய்து விட்டது திமுக. இருந்தாலும், நாங்கள் கேட்டால் இடத்தைத் தர வேண்டும் என காவல்துறை நிபந்தனை போட்டதாம். இதனால் வெகுண்ட திமுகவினர் தேர்தல் ஆணையத்தை அணுகினர். முதலில் வந்தவருக்கே முன்னுரிமை தர வேண்டும் என்றுகாவல்துறைக்குகூறி விட்டது. இதனால் வடக்கு ரத வீதி திமுகவுக்கு கிடைத்து விட்டது.
இதனால் தற்போது அதிமுகவுக்கு குறிப்பாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரசாரக் கூட்டம் போட்டுப் பேச இடமில்லாமல் போய் விட்டதாம். வடக்கு ரத வீதியை விட்டால், கிழக்கு ரதி வீதியில்தான் பிரசாரக் கூட்டம் போட அனுமதிக்கப்படும். அதுவும் இடம் குறுகலாக இருப்பதால் தெரு முனைப் பிரசாரத்திற்கு மட்டுமே அனுமதிக்கப்படும். எனவே அந்த இடத்தில்தான் தற்போது ஜெயலலிதா தெருமுனைப் பிரசாரத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது.
திமுக கூட்டம் 15ம் தேதிதானே நடக்கிறது. ஜெயலலிதா 13 அல்லது 14 சங்கரன்கோவில் வந்து விடுவார். அன்றைய தினத்தில் நடத்திக் கொள்ளலாமே என்ற கேள்வி எழலாம். ஆனால் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கருத்தில் கொண்டு முதல் நாள் முக்கியத் தலைவர் கூட்டத்தை நடத்த முடியாத நிலையில் காவல்துறை உள்ளது. தேர்தல் ஆணையம் அதை அனுமதிக்காது என்று கருதப்படுகிறது. எனவே ஜெயலலிதாவுக்கு வடக்கு ரத வீதி இல்லை என்பதே இப்போதைய நிலைமை.
கடந்த 1996ம் ஆண்டு முதல் 2011 வரை இத்தொகுதியில் உறுப்பினராக இருந்தவர் அதிமுகவின் கருப்பசாமி. அந்தத் தேர்தல்களில் எல்லாம் வடக்கு ரத வீதியில் அதிமுகதான் கூட்டம் போட்டுப் பேசியுள்ளது. எனவே சென்டிமென்ட்படி இந்த இடத்தை நழுவ விட்டதை அதிமுகவினர் அபசகுனமாக கருதுகின்றனர்.
அதை விட முக்கியமாக வடக்கு ரத வீதியில் பிரசாரம் செய்ய முடியாது என்று ஜெயலலிதாவிடம் எப்படிக் கூறுவது என்ற குழப்பமும், அச்சமும் அதிமுகவினரிடம் உள்ளது. இதைக் கூட பிடிக்க முடியலையா என்று அவர் கோபம் கொண்டு விட்டால் என்ன செய்வது என்பதுதான் அவர்களின் பயத்திற்குக் காரணமாம்.
No comments:
Post a Comment