இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பாக ஐநா மனித உரிமைச் சபையில் தனது தீர்மானத்தை முன்வைத்தது அமெரிக்கா. இது இலங்கைக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
இந்த தீர்மானம் குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என இந்தியா தெரிவித்துள்ளது.
2009-ம் ஆண்டு இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே நடந்த இறுதிப் போரில் லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் அழிக்கப்பட்டனர். சர்வதேச போர் விதிகளுக்குப் புறம்பாக படு பயங்கர ஆயுதங்களைப் பிரயோகித்த சிங்கள ராணுவம் தமிழர்களை அழித்தது. ஏராளமான விடுதலைப் புலிகளும் கொல்லப்பட்டனர்.
இலங்கையின் இந்தப் போர்க்குற்றத்துக்கு உரிய விசாரணை நடத்தி தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்பது சர்வதேச நாடுகளின் கோரிக்கையாக இருந்து வந்தது. ஆனால் இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா போன்ற நாடுகளின் ஆதரவு காரணமா தப்பித்து வந்தது இலங்கை.
இந்த நிலையில், ஐநாவின் மனித உரிமை அமைப்பில், இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான தீர்மானத்தைக் கொண்டுவர அமெரிக்கா அதிரடியாக முடிவெடுத்தது. இதனால் இலங்கை பெரும் பீதிக்கு உள்ளாகியுள்ளது.
இந்த நெருக்கடியிலிருந்து தப்பிக்க வழக்கம் போல இந்தியா உதவும் என்பது இலங்கையின் நம்பிக்கை.
இந்த மாத இறுதியில்தான் இந்த தீர்மானம் ஓட்டெடுப்புக்கு வரும் என்று சொல்லப்பட்ட நிலையில், அமெரிக்கா அதிரடியாக இன்றே தீர்மானத்தை முன்மொழிந்துவிட்டது. இந்த தீர்மானம் குறித்து துணை மாநாட்டினையும் இன்று ஜெனீவாவில் நடத்தவிருக்கிறது அமெரிக்கா.
அமெரிக்காவின் இந்தத் தீர்மான நகல் மனித உரிமை சபையின் 47 உறுப்பு நாடுகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
விவாதத்துக்குப் பின்னர் இந்த தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படும்.
தீர்மான விவரம்:
இலங்கை போரின்போது சட்டத்திற்கு முரணாக குறிப்பிட்ட இனத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டதாக கருதப்படும் படுகொலைகள் மற்றும் காணாமற் போதல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பாக நடுநிலை நீதி விசாரணை மேற்கொள்ளுதல், வடக்கிலிருந்து இராணுவத்தை விலக்குதல், நிலப்பகுதி ஆக்கிரமிப்பு தொடர்பான பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு நடுநிலையான அமைப்பினை உருவாக்குதல், தடுத்து வைத்தல் தொடர்பான கொள்கைகளை மீளாய்வு செய்தல், சுதந்திரமான சிவில் சமூக கட்டமைப்புகளை பலப்படுத்துதல், மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பரவலாக்குதல் மூலம் இனப் பிரச்சனைக்கான தீர்வைக் காணுதல், அனைவரதும் கருத்து வெளிப்பாட்டு உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல், சட்ட ஆட்சி முறை தொடர்பான சீர்திருத்தங்களை மேற்கொள்ளுதல் போன்றவற்றில், 'கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு' முன்வைத்துள்ள ஆக்கபூர்வமான பரிந்துரைகளை வரவேற்கிறோம்.
சர்வதேச சட்ட விதிகள் தீவிரமாக மீறப்பட்டமை குறித்து கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு போதுமான அளவு கவனம் செலுத்தவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இவற்றின் அடிப்படையில்...
1. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள ஆக்கபூர்வமான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதுடன் நீதி, பொறுப்புப் கூறுதல், சகல இலங்கையர்க்கும் இடையிலான நல்லிணக்கம் போன்றவற்றை உறுதிப்படுத்த, பொருத்தமானதும் நம்பிக்கையானதுமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவும் சட்டரீதியான கடமைகளையும் பொறுப்புக்களையும் நிறைவேற்றவும் இலங்கை அரசைக் கோருதல்.
2. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட மற்றும் தொடர்ந்து எடுக்கப்படவுள்ள விபரங்கள் உள்ளிட்ட, விரிவான செயற்திட்டத்தை விரைந்து முன்வைக்குமாறும், சர்வதேச சட்டவிதிகள் மீறப்பட்டமை குறித்த குற்றச்சாட்டுகள் குறித்து கவனம் செலுத்துமாறும் இலங்கை அரசாங்கத்தைக் கோருதல்
3. மேற்சொன்ன திட்டங்களை நடைமுறைப்படுத்தவதற்குரிய ஆலோசனைகளையும் தொழில்நுட்ட உதவிகளையும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தை வழங்குமாறும் இலங்கை அரசாங்கத்தை இதனை ஏற்றுக்கொள்ளுமாறும் வேண்டுவதுடன் இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணையகத்தின் 22 வது கூட்டத்தொடரில் வழங்கப்பட்ட உதவிகள் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தை வேண்டுதல்.
அமெரிக்காவின் இந்த தீர்மானம் இலங்கைக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்தத் தீர்மானத்தை தோற்கடிக்கும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது.
No comments:
Post a Comment