தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று சங்கரன் கோவில் அருகே உள்ள கடையாலுருட்டி என்ற கிராமத்தில் பிரசாரம் செய்தார். பிரசார வேனில் இருந்த படி அவர் பேசினார். அவர் பேசும் போது, இடைத் தேர்தலுக்கு பிறகு மின் வெட்டு மேலும் அதிகரிக்கும் என்கிறார்கள்.தற்போதைய நிலவரப்படி அதிகளவு மின் வெட்டு நிலவுகிறது என்றார்.
அப்போது, கிராம வாசி ஒருவர் குறுக்கிட்டு, மின்சாரம் இருக்கிறது என்பதால் தானே நீங்க பேசுறீங்க என கேள்வி கேட்டார். இதைக் கேட்டு எரிச்சல் அடைந்த விஜயகாந்த், 'யாரு நீங்க...' என அவரை நோக்கி கேட்டார். அதற்கு, எங்க ஊர்ல வந்து என்னை கேட்க, நீங்க யாரு? என்று கிராம வாசி எகிற, மேலே வா சொல்றேன் என்று விஜய காந்த் சூடாக சொல்ல, அதே வேகத்துடன் நீ கீழே வா என்று கத்தினார் அந்த கிராம வாசி.
இப்படி இருவருக்கும் இடையே வாக்கு வாதம் முற்றவே, போலீசார் தலையிட்டு கிராம வாசியை அமைதிப்படுத்தினார். போலீசாரை முற்றுகையிட்ட தே.மு.தி.க.வினர், நாங்கள் போகும் இடமெல்லாம், ஏதாவது செய்து கொண்டே இருக்கிறார்கள். முதல்வர் ஜெயலலிதா வரும் போது, நாங்களும் பதிலுக்கு ஏதாவது செய்வோம் என்றனர்.
சம்பந்தப்பட்ட நபர் எந்த கட்சியையும் சார்ந்தவர் அல்ல, என்று கூறி தே.மு.தி.க. வினரை போலீசார் சமாதானப்படுத்தினர். தகராறை தொடர்ந்து, அங்கு தனது பிரசாரத்தை முடித்த விஜயகாந்த், வேறு பகுதிக்கு கிளம்பிச் சென்றார்.
சங்கரன்கோவில் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் முத்துக்குமாரை ஆதரித்து கட்சி தலைவர் விஜயகாந்த் மேலநீலிதநல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட தர்மத்தூரணி கிராமத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அந்த கிராமத்தை சேர்ந்த கட்சியின் முன்னாள் செயலாளர் பரமன் தனது கோஷ்டியினருடன் நின்று கொண்டு விஜயகாந்த்தை பேச விடாமல், தடுத்தார்.
தனக்கு ஏன் பொறுப்பு வழங்க வில்லை என்று கேள்வி கேட்டார். அதற்கு விஜயகாந்த் பிரசாரம் முடிந்த பிறகு பேசிக் கொள்ளலாம். அமைதியாக இருங்கள் என்று கூறினார். ஆனால் பரமனும், அவரது கோஷ்டியினரும் தொடர்ந்து குரலெழுப்பி கொண்டே இருந்தனர்.
இதனால் விஜயகாந்த் டென்ஷன் ஆனார். உடனே அவரது உதவியாளர் பார்த்தசாரதி, விஜயகாந்திடம் விரைவில் பேச்சை முடியுங்கள் என்றார். இதையடுத்து விஜயகாந்த் அங்கிருந்து வேப்பங்குளத்திற்கு புறப்பட்டு சென்று விட்டார். விஜயகாந்த் எந்த முடிவும் தெரிவிக்காததால் பரமன் கோஷ்டியினர் அங்கு கட்டப்பட்டிருந்த தே.மு.தி.க. டிஜிட்டல் போர்டுகளை தேசப்படுத்தினர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment