சங்கரன்கோவில் சட்டசபை தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் முத்துக்குமாரை ஆதரித்து கடந்த 11-ந் தேதி விஜயகாந்த் பிரசாரத்தை தொடங்கினார். அவர் நேற்று 3-வது நாளாக பிரசாரம் செய்து முரசு சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார்.
சின்னகோவிலான்குளத்தில் இருந்து நேற்று மாலை பிரசாரதத்தை தொடங்கிய விஜயகாந்த், தொடர்ந்து நடுவக்குறிச்சி, வென்றிலிங்கபுரம், குலசேகரமங்கலம், தன்னூத்து, சுப்பையாபுரம் ஆகிய ஊர்களுக்கு திறந்த வேனில் சென்று முரசு சின்னத்துக்கு ஓட்டு கேட்டார்.
பிரசாரத்தின் போது விஜயகாந்த் பேசியதாவது:-
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் ஜனநாயகம், பணநாயகத்துக்கும் இடையே நடைபெறும் தேர்தல். நாங்கள் மக்களை நம்பி தான் வேட்பாளரை நிறுத்தி உள்ளோம். பணத்தை கொடுத்து உங்களை விலைக்கு வாங்கி விடலாம் என்று நினைக்கின்றனர். நீங்கள் ஜனநாயகம் வெற்றி பெற ஒத்துழைக்க வேண்டும்.
சட்டசபையில் எனது பிரச்சினைகள் குறித்து பேசவில்லை. மக்கள் பிரச்சினையை பற்றி தான் பேசினேன். அதற்கு அவர்கள் கொடுத்த பரிசு 10 நாட்கள் சஸ்பெண்ட். அதை பற்றி நான் கவலைப்படுவது கிடையாது.
மக்களுக்கு எது நன்மையோ அதை நான் செய்து கொண்டே இருப்பேன். நாங்கள் மக்களையும், ஆண்டவனையும் நம்பி தான் நிற்கிறோம். தனித்து நிற்க திராணி இருக்கிறதா? என்று கேட்டனர். நாங்கள் திராணியுடன் தான் இப்போது தனித்து நிற்கிறோம். இங்கு மட்டும் அல்ல கடந்த தி.மு.க. ஆட்சியில் நடந்த அனைத்து இடைத்தேர்தல்களிலும் தே.மு.தி.க. தனித்து தான் நின்றது. தொடர்ந்து மக்களுக்காக போராடுவோம்.
என்னை எதிர்த்து பேசுவதற்காக சென்னையில் உள்ள நடிகர் பட்டாளமே சங்கரன்கோவிலுக்கு வந்துள்ளது. அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் எந்த நலத்திட்டங்களையும் கொண்டு வரவில்லை. இரண்டு கட்சியும் இலவசங்களை கொடுத்து மக்களை ஏமாற்றுகின்றனர். மிக்சி, கிரைண்டர் கொடுக்கின்றீர்களே, வீட்டுக்கு ஒருவருக்கு வேலை கொடுங்கள். மொத்தத்தில் இரண்டு கட்சிகளும் உங்களை ஏமாற்றி வருகின்றனர். அவர்களுக்கு மாற்றாக மக்களுக்கு நன்மை செய்யும் தே.மு.தி.க.வை ஆதரியுங்கள். எங்கள் வேட்பாளர் முத்துக்குமாரை வெற்றி பெறச் செய்தால் உங்களுடைய அனைத்து தேவைகளும் நிறைவேற்றி தரப்படும். அதற்காக முரசு சின்னத்தில் உங்களது வாக்குகளை தாருங்கள்.
இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.
No comments:
Post a Comment