ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக தான் கொண்டு வந்துள்ள தீர்மானத்தை வெற்றிகரமாக நிறைவேற்றும் பணியை சிறப்பாக மேற்கொள்வதற்காக வெளியுறவுத்துறையைச் சேர்ந்த 100 பிரதிநிதிகளை அமெரிக்கா களம் இறக்கியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
மார்ச் 19 அல்லது 22ம் தேதி இலங்கைக்கு எதிரான தீர்மானம் மீது விவாதமும், தொடர்ந்து வாக்கெடுப்பும் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. எனவே இலங்கைக்கு எதிரான தனது ஆதரவு வேட்டையை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது.
மொத்தம் 47 உறுப்பினர்களைக் கொண்ட மனித உரிமைக் கவுன்சிலில் 22 நாடுகள் தங்களது ஆதரவை இதுவரை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சில நாடுகளின் ஆதரவு தேவைப்படுகிறது. அதைத் திரட்டும் முயற்சிக்காக 100 பிரதிநிதிகளை அமெரிக்கா இறக்கியுள்ளது. இவர்கள் பல்வேறு நாடுகளின் ஆதரவையும் திரட்டி வருகின்றனர். மேலும் ஏற்கனவே ஆதரவு தெரிவித்துள்ள நாடுகளின் ஆதரவையும் உறுதி செய்து வருகின்றனர்.
இந்த பிரமாண்ட பிரதிநிதிகள் குழு ஒவ்வொரு நாட்டுப் பிரதிநிதிகளையும் நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறதாம். இலங்கையில் அமெரிக்காவுக்கு எதிராக அரசுத் தரப்பே போராட்டங்களைத் தூண்டி வருவதாலும், அமெரிக்காவுக்கு சவால் விடும் வகையில் பேசி வருவதாலும், அமெரிக்கா கடும் கோபமடைந்திருப்பதாகவும், எனவே இலங்கையை மனித உரிமைகள் கவுன்சில் முன்பு தோலுரித்துக் காட்ட அது தீவிரமாகியுள்ளதாகவும் கருதப்படுகிறது.
மொத்தத்தில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் முன்பு அமெரிக்காவின் தலைமையில் அதன் ஆதரவு நாடுகள், இலங்கையை மண்டியிட வைக்குமா என்ற பெரும் எதிர்பார்ப்பில் ஒட்டுமொத்த தமிழ் உலகம் காத்திருக்கிறது.
No comments:
Post a Comment