இலங்கை அரசின் அறிக்கையை ஜெராக்ஸ் எடுத்துப் படித்துள்ளார் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா என்று திமுக ஆவேசமாக கூறியுள்ளது.
ராஜ்யசபாவில் மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இன்று அறிக்கை ஒன்றை வாசித்தார். அதற்குப் பின்னர் திமுக சார்பில் திருச்சி சிவா பேசுகையில், கிருஷ்ணாவை கடுமையாக விமர்சித்தார்.
அவர் பேசுகையில், நமது வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இலங்கை விவகாரம் தொடர்பாக எப்போது அறிக்கை வாசித்தாலும், அது இலங்கை அரசின் அறிக்கையை ஜெராக்ஸ் எடுத்து வந்து படிப்பது போலவே இருக்கிறது. இப்போதும் அப்படி ஒரு அறிக்கையைத்தான் அவர் வாசித்துள்ளார்.
இலங்கையுடன் நமக்கு வரலாற்று ரீதியான உறவு உள்ளது, நட்பு உள்ளது என்கிறார். அந்த உறவுதான் அப்பாவித் தமிழர்கள் 40,000 பேரின் உயிரை எடுத்துள்ளது. நமது தமீழக மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் மாண்டு போகச் செய்து வருகிறது. தொடர்ந்து நமது மீனவர்களை இலங்கை அரசு கொன்று குவித்துக் கொண்டிருக்கிறது.
ஆனால் இந்த உறவு வரலாற்றுப் பூர்வமானது, நட்பு ரீதியானது என்று நீங்கள் கூறுகிறீர்கள். இப்படியே நீங்கள் கூறிக் கொண்டிருந்தால், இலங்கையில் இந்தியாவுக்கு ஆதரவான அத்தனை தமிழர்களும் கொன்று குவிக்கப்பட்டு விடுவார்கள். இந்தியாவுக்கு எதிரானவர்கள் குவிந்து விடுவார்கள். இது இந்தியாவுக்கு நல்லதல்ல, என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
பல காலமாக எங்களது சகோதரர்களை கொன்று குவித்து வரும் ஒரு நாட்டுடன் நாம் எப்படி வரலாற்றுப் பூர்வமான உறவை பராமரிக்க முடியும், நட்பாக இருக்க முடியும். எனவே இனியும் அப்படிச் சொல்லாதீர்கள்.
கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நீதி கிடைக்க அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை இந்தியா தயவு செய்து ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் சிவா.
அறிக்கையை கிழித்து திமுக வெளிநடப்பு
முன்னதாக எஸ்.எம்.கிருஷ்ணா தனது அறிக்கையைப் படித்து விட்டு உட்கார்ந்தபோது திமுக உறுப்பினர்கள் மொத்தமாக எழுந்து கிருஷ்ணாவின் உப்புச்சப்பில்லாத பதிலைக் கண்டித்து குரல் கொடுத்தனர். அவர்களை அமருமாறு துணைத் தலைவர் ரஹ்மான் கான் கோரினார். ஆனால் கிருஷ்ணாவின் பதில் குறித்து கடுமையாக விமர்சித்த திமுக உறுப்பினர்கள், அவரின் உரை நகலைக் கிழித்தெறிந்து விட்டு வெளியேறினர்.
அதிமுகவும் வெளிநடப்பு
அதேபோல அதிமுக உறுப்பினர்களும் எஸ்.எம்.கிருஷ்ணா பதிலுக்கு அதிருப்தி தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.
தமிழர்களின் பிரச்சனை என்று வரும் போது ஒன்று படுவது மகிழச்சி தான். இந்த ஒன்று பட்ட குரல் அன்று இருந்திருந்தால் பல ஆயிரம் மக்களைக் காப்பாற்றி இருக்கலாம். இருப்பினும் இனியாவது ஒன்றுபட்டு அரசியலாக்காது செயல்படுவார்களா? கேரள கிருஸ்னன் வீட்டுக்கு அனுப்ப வேண்டிய மன நோயாளி என்பதைத் தவிர வேறென்ன சொல்வது.
ReplyDelete