இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் கொடூரமாக கொல்லப்பட்டதும், அங்கு அப்பட்டமாக மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதும் உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து விசாரிக்க இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஐக்கிய நாட்டு சபையில் அமெரிக்கா கொண்டு வந்துள்ளது.
இந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வலியுறுத்தி அனைத்து கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் 19 ந் தேதி காலையில் பேரணி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து காலை 11.30 மணிக்கு திருவள்ளுவர் பஸ் நிலையத்தில் இருந்து பேரணி புறப்பட்டது.
பேரணியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் ஈழப்போரின் போது நடந்த கொடூரமான நெஞ்சை பிழியும் காட்சிகள் அடங்கிய புகைப்படங்களை பெரிய போர்டில் வரிசையாக ஒட்டிவைத்து எடுத்து சென்றனர். பேரணி திருவள்ளுவர் பஸ் நிலையம் முன் புறப்பட்டு கிராஸ்கட் ரோடு சிக்னல், காட்டூர் போலீஸ் நிலையம் வழியாக தமிழ்நாடு ஓட்டலை நோக்கி சென்று கொண்டிருந்தது.
அப்போது ஊர்வலமாக சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, "பேரணியாக போகக்கூடாது என்றும், வேண்டும் என்றால் தனித்தனியாக செல்லுங்கள் என்றும் கூறினார்கள். இதைதொடர்ந்து மாணவ மாணவிகள் தனித்தனியாக தமிழ்நாடு ஓட்டல் முன்பு சென்றடைந்தனர். அங்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் இலங்கைக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டன.
அப்போது திடீரென்று இலங்கை அதிபர் ராஜபக்சே வேடமிட்ட ஒருவரை இரும்பு சங்கிலியால் பிணைத்து மாணவ மாணவிகள் இழுத்து வந்தனர். பின்னர் அவரை சவுக்கால் அடிப்பதுபோன்றும், அவருக்கு தண்டனை வழங்குவது போன்றும் போராட்டம் நடைபெற்றது.
இதற்கிடையில் மாணவ மாணவிகள் தங்கள் கையில் ஏந்தி வந்த ஈழப்போர் காட்சிகள் கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. பச்சிளம் குழந்தைகள் கூட்டம் கூட்டமாக செத்து கிடப்பதையும், குழந்தைகளின் கண்கள் தோண்டப்பட்டு கிடக்கும் பயங்கரத்தையும், அவர்களின் கை மற்றும் கால்கள் துண்டாகி கிடப்பதையும், ஒரு பெண்ணின் அடிவயிற்றில் வெடிகுண்டு வைத்து வெடிக்க செய்திருக்கும் நெஞ்சை உறையவைக்கும் காட்சியையும், ஜே.சி.பி. மூலம் பிணங்களை அள்ளும்கொடூரத்தையும், தலை வெடித்து சிதறிய நிலையில் அப்பாவி மக்கள் துடிக்கும் காட்சிகளையும் பார்த்து பெண்கள் கண்ணீர் வடித்தனர்.
No comments:
Post a Comment