மதிமுக
பொதுச் செயலாளர் வைகோவை மிரட்டும் தொணியில்
பேசிய பாஜக தேசிய செயலாளர்
ஹெச்.ராஜாவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள்
கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
"பிரதமர்
மோடியையோ, மத்திய அரசையோ அல்லது
ராஜ்நாத்சிங் போன்ற தலைவர்களைப் பற்றியோ
வைகோ தொடர்ந்து பேசினால் அவர் செல்லும் இடங்களில்
பேசிவிட்டு பாதுகாப்பாக திரும்ப முடியாது என்றும்
அவர் நாவை அடக்காவிட்டால் அவரை
அடக்குவது எப்படி என்று ஒவ்வொரு
பாஜக தொண்டனுக்கும் தெரியும் என்றும் பாரதிய ஜனதா
கட்சியின் அகில இந்திய பொதுச்
செயலாளர் ஹெச்.ராஜா தஞ்சையில்
பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளார்.
வைகோ எழுப்பும் பிரச்னைகளுக்கு அரசியல் ரீதியாக பதிலளிப்பதை
விட்டுவிட்டு இவ்வாறு மிரட்டல் விடுப்பது
அவரது இயலாமையை மட்டுமின்றி அரசியல் நாகரீகமற்ற தன்மையையும்
வெளிப்படுத்துகிறது. அரசியலில் விமர்சனம் என்பதும், கேள்வி கேட்பது என்பதும்
ஜனநாயகத்தின் பிரிக்க முடியாத அம்சங்களாகும்.
இதை சகித்துக் கொள்ளாமல் மிரட்டல் விடுப்பது என்பது எதேச்சதிகாரப் போக்கின்
வெளிப்பாடு ஆகும்.
மத்தியில்
ஆளும் பாஜகவின் தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய தலைவராக
விளங்கும் ஹெச்.ராஜாவின் இத்தகைய
மிரட்டல் விடுக்கும் எதேச்சதிகார பேச்சிற்கு மார்க்சிக்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பாக
வன்மையான கண்டனத்தை வெளிப்படுத்துவதோடு தமிழகத்திலுள்ள மதச்சார்பற்ற, ஜனநாயகத்தில் ஆர்வமுள்ள அனைவரும் இத்தகைய மிரட்டலை ஏற்றுக்
கொள்ளவோ, சகித்துக் கொள்ளவோ மாட்டார்கள்" என்று
கூறியுள்ளார்.
மதிமுக
பொதுச் செயலாளர் வைகோ குறித்து ஹெச்.ராஜா அநாகரிகமாக பேசியுள்ளதாக
தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கண்டனம்
தெரிவித்துள்ளார்.
பாரதிய
ஜனதாவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, மதிமுக பொதுச்
செயலாளர் வைகோ குறித்து பேசியது
அவரது தனிப்பட்ட கருத்து என அக்கட்சியின்
மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்
தெரிவித்துள்ளார்.
மதுரையில்
செய்தியாளர்களை சந்தித்தபோது இவ்வாறு கூறிய அவர்,
மரியாதைக்குரிய வைகோவும் சரி, பாமக நிறுவனர்
பெரியவர் ராமதாசும் சரி அரசுக்கு கோரிக்கை
வைக்கலாம். ஆனால் எதிர்க்கட்சி போல்
விமர்சனம் செய்வதை தவிர்க்க வேண்டும்
என்று வேண்டுகோள் விடுத்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் வைகோ
இருக்கிறார் என்று மத்திய அமைச்சர்
பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
"உணர்ச்சி
கொந்தளிப்பில் கட்சி நடத்தலாம், ஆனால்
உணர்ச்சி கொந்தளிப்பில் அரசு நடத்த முடியாது"
என்று திருச்செந்தூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
எஸ்.டி.பி.ஐ
கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்
தெகலான் பாகவி விடுத்துள்ள அறிக்கையில்,
தமிழக அரசியல் தலைவருக்கு ஊடகங்களின்
வாயிலாக விடுத்த இத்தகைய மிரட்டல்
கடும் கண்டனத்திற்குரியது. நாகரீகமற்றது. இதற்காக பாஜகவின் ஹெச்.ராஜா பகிரங்க மன்னிப்பு
கோர வேண்டும். மத்தியில் ஆட்சி பீடம் என்ற
மமதையில் இதுபோன்ற சர்வாதிகார போக்குடன் விடுக்கும் மிரட்டலை எப்படி எதிர்கொள்ள வேண்டும்
என்பதை தமிழக மக்கள் நன்கு
அறிவார்கள். பாஜகவின் வன்முறை அரசியல் தமிழக
மக்கள் மத்தியில் ஒருபோதும் எடுபடாது.
தமிழக நலனுக்காக குரல்கொடுக்கும் அரசியல் கட்சி தலைவர்
ஒருவருக்கு விடுக்கப்பட்ட இதுபோன்ற அரசியல் நாகரீகமற்ற மிரட்டலுக்கு
எதிராக அனைவரும் ஒன்று திரள வேண்டும்.
சர்வாதிகார போக்குடன் திணிப்பு கொள்கைகள், தமிழர் விரோத கொள்கைகளை
முன்னெடுக்கும் பாஜகவை மக்கள் புறக்கணிக்க
வேண்டும்" என்று கூறியுள்ளார்.