2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடைபெற்று வருகிறது. ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடையவர்கள் இந்த குழு முன் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர். இவ்விவகாரத்தில் தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ராஜாவுக்கு சம்மன் அனுப்ப, பார்லிமென்ட் கூட்டு குழு இன்று முடிவு செய்துள்ளது.
கடந்த 2006-07ம் ஆண்டுகளில், தொலைத் தொடர்பு செயலராக இருந்த டி.எஸ்.மாத்தூரிடம், கூட்டுக் குழு தலைவர் பி.சி.சாக்கோ இன்று விசாரணை நடத்தினார். "தொலைத் தொடர்பு துறை மற்றும் அதன் அதிகாரிகளின் ஆலோசனைப்படி தான், பல விஷயங்களில் முன்னாள் அமைச்சர் ராஜா செயல்பட்டார். சில விஷயங்களில் ராஜாவின் முடிவை எதிர்த்தேன். ஆனால், இந்த எதிர்ப்பை நான் பதிவு செய்யவில்லை' என விசாரணையின் போது மாத்தூர் தெரிவித்தார்.
பின்னர் பேசிய சாக்கோ "தொலைத் தொடர்புத் துறையின் மற்றொரு முன்னாள் செயலர் சித்தார்த்த பெகுராவிடம் விசாரணை நடத்த, அடுத்த மாதம் 11ம் தேதி சம்மன் அளிக்க உள்ளோம். தற்போது திகார் சிறையில் பெகுரா உள்ளார். அவரை எங்கள் முன் ஆஜர்படுத்தும்படி, சிறை அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்ப உள்ளோம். இதே போல, முன்னாள் அமைச்சர் ராஜாவிடமும் விசாரணை நடத்த சம்மன் அனுப்ப உள்ளோம். எனினும், அவருக்கு சம்மன் அளிக்கப்படும் தேதி முடிவு செய்யப்படவில்லை' என்றார்.
No comments:
Post a Comment