சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் நடந்து வரும் ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலின், 19வது கூட்டத் தொடரில், இலங்கை மீதான தீர்மானம் ஒன்றை அமெரிக்கா கொண்டு வந்தது. அதில், இலங்கை தனது நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், அதை மனித உரிமைகள் கவுன்சில் கண்காணிக்க வேண்டும், ஓராண்டிற்குள் அதற்கான அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என, மூன்று முக்கிய குறிப்புகள் தெரிவிக்கப்பட்டிருந்தன. இத்தீர்மானத்திற்கு இந்தியா உள்ளிட்ட 23 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில் நேற்று, இத்தீர்மானம் மீது கவுன்சிலில் விவாதம் நடந்தது.
தொடர்ந்து நாளை (ஜெனீவாவில் இன்று) அதன் மீதான வாக்கெடுப்பு நடக்கலாம் எனத் தெரிகிறது. மொத்தம் 47 நாடுகள் உள்ள கவுன்சிலில், 46 நாடுகள் வாக்களிக்கலாம். அதன்படி, தீர்மானத்திற்கு 24 நாடுகள் ஓட்டளித்தால் அல்லது தற்போதைய 23 நாடுகளின் ஆதரவு நிலையில், ஒரு சில நாடுகள் வாக்களிக்காமல் இருந்தால் தான் தீர்மானம் வெற்றி பெறும். இந்நிலையில், இலங்கை தமிழர் பிரச்னை குறித்து நேற்று அறிக்கை வெளியிட்ட இந்திய வெளியுறவு இணையமைச்சர் பிரணீத் கவுர்,"இலங்கையில் போரினால் புண்பட்ட தமிழர்களின் பிரச்னை தீர வேண்டுமானால், அந்நாட்டு அரசு, உண்மையான நல்லிணக்கத்திற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, இந்தியா வலியுறுத்துகிறது' எனத் தெரிவித்தார்.
அதேபோல், இத்தீர்மானத்தை மலேசியா ஆதரிக்க வேண்டும் என, மலேசிய இந்திய காங்கிரஸ் தலைவர் டத்தோ ஜி.பழனிவேல் கோரிக்கை விடுத்துள்ளார். மனித உரிமை மீறல் தொடர்பான தீர்மானங்களுக்கு மலேசியா எப்போதுமே ஆதரவளித்து வந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க தீர்மானத்தில் இந்தியா திருத்தம் மேற்கொண்டு வருமா என்பது இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை. எனினும், இந்தியாவின் இந்த நிலைப்பாடு இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பையும் கோபத்தையும் கிளப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment