ஸ்பெக்ட்ரம் லைசென்சு ஒதுக்கீடு தொடர்பான மேக்சிஸ்-ஏர்செல் ஒப்பந்தத்தில் ரூ.555 கோடி ஊழல் நடந்ததாக, தொலைத்தொடர்பு துறை முன்னாள் மத்திய மந்திரி தயாநிதி மாறன் மற்றும் அவருடைய சகோதரரும், சன் டி.வி. நிர்வாக இயக்குனருமான கலாநிதி மாறன் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இந்த வழக்கில், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அவர்கள் இருவருக்கும் மத்திய அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பி இருந்தது.
அதன்பேரில், தயாநிதி மாறன் தொடர்புடைய பண பரிமாற்றம், முதலீடுகள் மற்றும் இதர வர்த்தகம் தொடர்புடைய நிதி ஆவணங்கள் நேற்று டெல்லியில் உள்ள மத்திய அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இதேபோல், கலாநிதி மாறன் சார்பிலும் நிதி ஆவணங்கள் விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தயாநிதி மாறன் தொலைத்தொடர்பு துறை மந்திரியாக பணிபுரிந்தபோது ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்பட்டதாக புகார் எழுந்தது. இந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து கடந்த ஆண்டில் மத்திய மந்திரி பதவியில் இருந்து தயாநிதி மாறன் விலகினார். இந்த குற்றச்சாட்டை தயாநிதி மாறன் மறுத்து வருகிறார். இந்த வழக்கில் தயாநிதி மாறனுடன் தொடர்புடைய மேலும் சிலருடைய வாக்குமூலங்களையும் அமலாக்கப் பிரிவு பதிவு செய்துள்ளது. சி.பி.ஐ.யும் இந்த முறைகேடு புகார் குறித்து விசாரணை நடத்தி வருகிறது.
No comments:
Post a Comment