ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் அளித்துள்ள பதில், போர்க்குற்ற விசாரணையில் இருந்து திசைதிருப்புவதாகவே உள்ளது என சீமான் கூறியுள்ளார்.
பிரதமர் ஆற்றிய உரையில், அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்குமா இல்லையா என்பது தொடர்பான உறுதியான நிலை தெளிவுபடுத்தப்படவில்லை. இலங்கை தமிழர்களுக்கு சம உரிமையும், கவுரவமான வாழ்க்கையும், நீதியும், சுய-மரியாதையும் உறுதிப்படுத்தப்பட்ட எதிர்காலமே இந்திய அரசின் இலக்கு என்றும், அதனை உறுதிப்படுத்துவதாக அமெரிக்க தீர்மானம் இருக்குமானால் அதனை இந்தியா ஆதரிக்கும் சாத்தியமுள்ளது என்றுதான் பிரதமர் தனது பதிலில் கூறியுள்ளார். இது பிரச்சினையை திட்டமிட்டு திசைதிருப்பும் வார்த்தைகளாகும்.
இலங்கையில் தமிழர்களுக்கு நல்வாழ்வு அளிக்கப்பட வேண்டும் என்பதை ராஜபக்சே அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தமிழர்கள் எவரும் எதிர்பார்க்கவில்லை. தமிழினத்தை கொன்ற ராஜபக்சே அரசை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும் என்பதுதான் தமிழர்களின் கோரிக்கை. பிரதமர் மன்மோகன் சிங், தமிழர் பிரச்சினையில் எதிர்காலத்தைப் பற்றி பேசி ஏமாற்றப்பார்க்கிறார். இதில் தமிழர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வலியுறுத்தி திருச்சியில் நாளை (புதன்கிழமை) மாபெரும் தொடர்முழக்கப் பட்டினி போராட்டத்தை நடத்த நாம் தமிழர் கட்சி தீர்மானித்துள்ளது. இவ்வாறு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment