ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் கதிரவன். இவரை சி.பி.ஐ. அதிகாரிகள் போல நடித்து ஒரு கும்பல் கடத்தி சென்ற விவகாரத்தில் மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் மற்றும் கேரளாவை சேர்ந்த சிலருக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது.
கடத்தல் கும்பல் திண்டுக்கல் லாட்ஜில் பதுங்கி இருந்தபோது போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது போலீசை தாக்க முயன்ற கேரளாவை சேர்ந்த சினோஜ் சுட்டு கொல்லப்பட்டார். வரிச்சியூர் செல்வம், அஜித், வர்கீஸ் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தனிப்படை போலீசார் தி.மு.க. செயலாளர் கதிரவன் கடத்தப்பட்ட விவகாரம் குறித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ராமநாதபுரம் தி.மு.க. எம்.பி. ரித்தீஷ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிலருக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக ஏற்கனவே ரித்தீஷ் எம்.பி.யிடம் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்ராகார்க் விசாரணை நடத்தினார்.
மீண்டும் விசாரணை நடத்த அவரை அழைத்தபோது ரித்தீஷ் எம்.பி. தலைமறை வாகிவிட்டார். எனவே ரித்தீஷ் எம்.பி.யை பிடிக்க மதுரை தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் தேடி வருகிறார்கள். நேற்று ரித்தீஷ் எம்.பி. சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள மணக்குடியில் உள்ள அவரது உறவினர்கள் மற்றும் சேதுபதி நகரில் உள்ள அவரது தந்தை குழந்தைவேலு மற்றும் சிவகங்கை மாவட்டம் குமாரகுறிச்சியில் உள்ள உதவியாளர் நாகராஜன் வீடு உள்பட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது ரித்தீஷ் எம்.பி.யின் இருப்பிடம் குறித்தும் அவர்கள் விசாரித்தனர். ரித்தீஷ் எம்.பி. கேரளாவில் பதுங்கி இருக்கலாம் என்று தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து மதுரை சிலைமான் இன்ஸ்பெக்டர் தெய்வீக பாண்டியன் தலைமையில் தனிப்படை போலீசார் கேரளா விரைந்துள்ளனர். இதனிடையே முன்ஜாமீன் கேட்டு ரித்தீஷ் எம்.பி. மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் தம்பி செந்தில் (வயது35) என்பவரையும் இந்த கடத்தல் வழக்கில் தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.
செந்தில் நேற்று மாலை மதுரை கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை 15 நாட்கள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டதின் பேரில் அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
No comments:
Post a Comment