இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடந்தபோது அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் மனித உரிமை மீறல்களும் நடந்தன. இது தொடர்பாக இலங்கைக்கு எதிராக ஐ.நா. சபையில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இந்த தீர்மானம் மீது வரும் 22-ந்தேதி ஓட்டெடுப்பு நடக்க உள்ளது. ஐ.நா. சபை மனித உரிமை கழகத்தில் உறுப்பினர்களாக உள்ள 45 நாடுகளில் 22 நாடுகள் சிங்கள ராணுவம் செய்த கொடூரங்களை உணர்ந்து இலங்கைக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்து இருக்கின்றன.
கடந்த புதன்கிழமை இரவு சேனல்-4 தொலைக்காட்சியில் அப்பாவி தமிழர்கள் பாதிக்கப்படும் காட்சிகள் ஒளிபரப்பான பிறகு மேலும் பல நாடுகள் இலங்கைக்கு எதிராக திரும்பியுள்ளன. இந்த ஓட்டெடுப்பில் இந்தியாவின் நிலை என்ன? என்பது தொடர்ந்து மர்மமாக உள்ளது. தமிழர்களுக்கு எதிராக செயல்படும் சிங்கள தலைவர்களுக்கு மத்திய அரசு ஆதரவாக இருப்பதால், ஐ.நா. சபை தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காது என்று தகவல்கள் வெளியானது. பாராளுமன்றத்தில் பேசிய வெளியுறவு மந்திரி எஸ்.எம். கிருஷ்ணாவின் பேச்சும் இதையே சூசகமாக வெளிப்படுத்தியது.
ஆனால் ஐ.நா.சபையில் கொண்டு வரப்படும் தீர்மானத்தை ஆதரித்து, இலங்கைக்கு எதிரான ஒரு நிலையை இந்தியா எடுக்க வேண்டும் என்று தமிழ் நாட்டில் உள்ள எல்லா கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா இது தொடர்பாக 2 தடவை பிரதமருக்கு கடிதம் எழுதிவிட்டார். தி.மு.க. தலைவர் கருணாநிதியும் இந்த விஷயத்தில் மத்திய அரசுக்கு கடும் அழுத்தம் கொடுத்து வருகிறார்.
தமிழ்நாட்டில் இருந்து ஓங்கி ஒலிக்கும் இத்தகைய ஒருமித்த குரல் மத்திய அரசை சற்று யோசிக்க வைத்துள்ளது. தமிழக தலைவர்களை சமரசம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டது. முதல்- அமைச்சர் ஜெயலலிதாவை இது தொடர்பாக சந்தித்து பேச பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் 2 தடவை முயன்றார். ஆனால் மத்திய அரசு இலங்கைக்கு சாதகமாகவே இருப்பதால் முதல்- அமைச்சர் ஜெயலலிதா சிவசங்கர் மேனனை சந்திக்க மறுத்துவிட்டார்.
இது மத்திய அரசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதுபோல பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் கலந்து கொள்ளாததும் மத்திய அரசுக்கு அதிர்ச்சி வைத்தியமாக மாறியுள்ளது. தற்போது தமிழ்நாட்டு மக்கள் அனைவரின் மனநிலையும் இலங்கைக்கு எதிரான நிலையை இந்தியா எடுக்க வேண்டும் என்றே உள்ளது. எனவே மக்கள் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில் ஐ.நா.சபை தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்று தெரிய வந்துள்ளது.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை இது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளித்து அறிவிப்பு வெளியிடும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் சூசகமாக தெரிவித்தார்.
No comments:
Post a Comment