தனி தமிழ் ஈழம் நாட்டை உருவாக்க போராடிய விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம் நந்திக் கடல் பகுதியில் 4-வது இறுதி கட்ட போர் நடந்தது. அதில் விடுதலைப் புலிகளுடன், பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களும் கொல்லப்பட்டனர்.
ஈழத் தமிழர்களை சிங்கள படைகள் திட்டமிட்டு அழித்து மாபெரும் இனப்படு கொலையை நடத்தின. 26 ஆண்டுகளாக நடந்து வந்த ஈழப்போரை முடிவுக்கு கொண்டு வந்து விட்டதாக கருதிய சிங்கள அரசு, இந்தியா, சீனா உள்பட சில நாடுகளின் துணையுடன் இறுதி கட்ட படுகொலைகளை மறைக்க முயன்றது. ஆனால் இங்கிலாந்தில் செயல்படும் 'சேனல்-4' என்ற தொலைக் காட்சி 'இலங்கையின் கொலைக்களம்' என்ற ஆவணப்படத்தை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந் தேதி ஒளிபரப்பியது.
இதன் மூலம் இலங்கையில் நடந்த இனப்படுகொலை, போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் வெட்ட வெளிச்சமானது. அதன் பிறகே இலங்கை மீதான பிடி இறுகியது. குறிப்பாக மகிந்த ராஜபக்சே போர் குற்றவாளி என்பதற்கான ஆதாரங்கள் உறுதிப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் இலங்கைக்கு எதிராக ஐ.நா.சபையில் அமெரிக்கா ஒரு தீர்மானம் கொண்டு வந்துள்ளது. உலகம் முழுவதும் பலத்த எதிர்ப்பை உருவாக்கி இருக்கும் இந்த தீர்மானத்தை தோற்கடிக்க சிங்களர்கள் குள்ளநரி வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் அந்த முயற்சிகளை தவிடு பொடியாக்கும் வகையில் 'சேனல்-4' தொலைக்காட்சி புதிய ஆவணப்படம் ஒன்றை ஒளிபரப்பபோவதாக அறிவித்துள்ளது. விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் பிடித்து வைத்து சுட்டுக்கொல்லப்படும் காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்திய நேரப்படி நாளை மறு நாள் (வியாழக்கிழமை) அதிகாலை 4.25 மணிக்கு அந்த ஆவணப்படம் ஒளிபரப்பாகிறது. லண்டன் நேரப்படி அங்கு நாளை (புதன்கிழமை) இரவு 10.55 மணிக்கு காணலாம்.சேனல்-4 தொலைக்காட்சியில் இந்த புதிய ஆவணப் படம் சுமார் ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும்.
பாலச்சந்திரன் கொலை செய்யப்படும் காட்சிகளைத் தொடர்ந்து பிரபாகரன் சுட்டுக் கொல்லப்படும் காட்சிகளும் அதில் இடம் பெற்றுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த வீடியோ காட்சிகள் உண்மையானது தானா என்று ஆய்வு செய்யப்பட்டன. அவை உண்மை தான் என்று தடயவியல் நிபுணர் டெரிக் பவுண்டர் கூறினார்.
அவர் அளித்த பேட்டி விவரம் வருமாறு:-
பிரபாகரன் கொல்லப்பட்டதாக எங்களுக்கு வந்த படத்தை ஆய்வு செய்தோம். அதில் பிரபாகரன் தலையில் மிக பலத்த காயம் உள்ளது. அவரது தலையில் பாய்ந்துள்ள குண்டு காயத்தை பார்க்கும் போது, மிக சக்தி வாய்ந்த துப்பாக்கியால் அவர் சுடப்பட்டிருக்க வேண்டும்.
போரின் போது ஒரு நபரை ஒரே குண்டில் கொல்வது என்பது இயலாத காரியம். அது சாத்தியமும் அல்ல. பிரபாகரன் கொல்லப்பட்ட விதத்தைப் பார்க்கும் போது, அவரை உயிருடன் பிடித்து பின்னர் கொலை செய்திருக்க வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம்.
மேலும் அசையாத நிலையில் ஒருவரை சுடும் போது, எத்தகைய குண்டு காயம் ஏற்படுமோ அத்தகைய காயம் ஏற்பட்டுள்ளது. அரசின் உயர்மட்ட அனுமதி இல்லாமல் இதை செய்து இருக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரபாகரனின் மகன் கொல்லப்பட்ட காட்சிகள் உண்மையானது தான் என்று கூறிய தடயவியல் நிபுணர்கள், பிரபாகரனின் வீடியோ காட்சிகளை உறுதிபடுத்த தயங்குகிறார்கள். இந்த வீடியோ காட்சி அதிகாரப்பூர்வமானது அல்ல என்று நாங்கள் உணர்கிறோம் என பிரபல தடயவியல் நிபுணர் டெரிக் பவுண்டர் கூறியுள்ளார்.
இதற்கிடையே சென்னையில் இருந்து வெளிவரும் ஆங்கில நாளிதழ் ஒன்றில் பிரபாகரனின் கடைசி நாட்கள் குறித்து பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. சிங்கள ராணுவத்தால் நாலாபுறமும் சுற்றி வளைக்கப்பட்டபிரபாகரன் வேறுவழியின்றி சிங்கள படைகளிடம் சரண் அடைந்தார் என்றும், அவரை 2 நாட்கள் சிங்கள படைகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து சித்ரவதை செய்ததாகவும் அந்த நாளிதழில் கூறப்பட்டுள்ளது.
2009-ம் ஆண்டு மே மாதம் 18-ந் தேதி பிரபாகரனையும், அவரது குடும்பத்தினரையும் சிங்கள வீரர்கள் நந்திக்கடல் பகுதிக்கு அழைத்து சென்று அங்கு வைத்து அவர்களை ஒருவர் பின் ஒருவராக சுட்டுக் கொன்றார்களாம். பிரபாகரன் கண் எதிரில், மனைவி, மகள், மகனை கூட்டுக் கொண்ட சிங்கள வீரர்கள் கடைசியில் பிரபாகரனை சுட்டுக் கொன்றதாக அந்த ஆங்கில நாளிதழில் தகவல் வெளியாகியுள்ளது.
மே 19-ந் தேதி பிரபாகரனின் பிணம் என்று ஒரு வீடியோ காட்சியையும், புகைப் படங்களையும் சிங்கள ராணுவம் வெளியிட்டது. இந்த படம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.
முதலில் சீருடை அணிந்த பிரபாகரன் உடல் என்று ஒரு படத்தை வெளியிட்டனர். பிறகு உடை இல்லாமல் ஒரு உடல் படத்தை காட்டி னார்கள். மூன்றாவதாக சகதி பூசப்பட்ட ஒரு உடலை காட்டி இது தான் பிரபாகரன் உடல் என்று சிங்களர்கள் அறிவித்தனர். இதனால் பிரபாகரன் விஷயத்தில் அவர் என்ன ஆனார் என்பதில் இன்னமும் கேள்விக்குறி நிலவுகிறது.
பிரபாகரனின் மரணச் சான்றிதழை இன்று வரை இலங்கை கொடுக்கவில்லை. அது போல பிரபாகரனின் மனைவி மதவதனி, மகள் துவாரகா பற்றி எந்த ஒரு உறுதியான தகவலும் இது வரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபாகரன் பற்றி பல்வேறு கேள்விக்குறிகள் நிலுவையில் உள்ள நிலையில் அவர் சரண் அடைந்தார், பிறகு சித்ரவதை செய்து கொல்லப்பட்டார் என்ற தகவல்களை உலகம் முழுக்க வாழும் ஈழத் தமிழர்கள் நம்பவும் ஏற்கவும் மறுக்கிறார்கள்.
பிரபாகரன் ஒரு வீரத் தமிழன், அவர் ஒரு போதும் சரண் அடைந்திருக்க மாட்டார் என்று ஈழ தமிழர்கள் கருதுகிறார்கள். இத்தகைய சூழ்நிலையில் பிரபாகரன் கொல்லப்பட்ட வீடியோ ஆவண காட்சிகளை சேனல்-4 தொலைக்காட்சி ஒளிபரப்புகிறது என்ற தகவல் ஈழத் தமிழர்களிடம் பெரும் பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்த வீடியோ காட்சிகள், பிரபாகரன் மரணம் தொடர்பாக புதிய திருப்பத்தை ஏற்படுத்துமா? என்ற கேள்விக்குறியையும் உலகம் முழுக்க ஏற்படுத்தி உள்ளது. சேனல்-4 டி.வி.யில் புதிய ஆவணப்படம் நாளை இரவு ஒளிபரப்பான பிறகே இந்த கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.
படங்களை நம்ப முடியாது இருக்கிறது.இருந்தாலும் சரணடைந்து இருக்க வாய்ப்பில்லை. படுகாயப்பட்ட நிலையில் கொண்டு சென்றிருக்க முடியும்.ஆனாலும் நம்ப முடியாத நிலையிலேயே படங்கள் உள்ளன.ஊகங்கள் எல்லாம் உண்மையல்ல.
ReplyDelete