அரசியல்
கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி
ஆவின் பால் விலை லிட்டருக்கு
ரூ.10 உயர்வு இன்று முதல்
அமலாகிறது. அதேபோல் நெய், பால்கோவா,
பாதாம் பவுடர் விலையும் கடுமையாக
உயர்கிறது. தமிழகத்தில் கடந்த 2011ல் அதிமுக ஆட்சி
பொறுப்பு ஏற்றது.
அப்போது பஸ்
கட்டணம், பால் விலை மற்றும்
மின் கட்டணம் ஏற்றப்பட்டது. அதற்கு
மிகவும் நிதி நெருக்கடியில் உள்ள
இந்த மூன்று துறைகளையும் காப்பாற்ற,
விலை உயர்வு அவசியம் என்று
அரசு தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது. அந்த
வகையில், 2012ல் பால் விற்பனை
விலை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தப்பட்டது.
இந்நிலையில்,
கடந்த 25ம் தேதி தமிழக
அரசு பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.5,
எருமை பால் ரூ.4 உயர்த்தப்படும்.
இது நவம்பர் 1 முதல் அமலுக்கு வரும்.
கொள்முதல் விலை உயர்வால் ஆவின்
பால் விலை லிட்டர் ஒன்றுக்கு
ரூ.10 உயரும். இந்த விலை
உயர்வும் நவம்பர் 1 முதல் அமலுக்கு வரும்
என்று அறிவிக்கப்பட்டது.
ஆவின் பால் விலை உயர்வுக்கு
திமுக, தேமுதிக, பாஜ, காங்கிரஸ், மதிமுக,
பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மனித
நேய மக்கள் கட்சி, எஸ்.டி. பி.ஐ.,
தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட தமிழகத்தில்
உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும்
கண்டனம் தெரிவித்தன.
ஆவின் நிறுவனத்தில் நடந்த
கோடிக்கணக்கான ஊழலை அப்படியே மறைத்து
விட்டு, ஊழலில் ஏற்பட்ட நஷ்டத்தை
ஈடுகட்ட பால் விலை ஒரே
நேரத்தில் லிட்டர் ஒன்றுக்கு ரூ.10
உயர்த்தப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டின.
இந்த
விலை உயர்வு சாதாரண மக்களுக்கு
மேலும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. எனவே,
ஆவின் பால் விலை உயர்வை
உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று
எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. விலை உயர்வுக்கு பொதுமக்கள்
மத்தியிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
ஒரே நேரத்தில் ரூ.10 விலை உயர்வு
என்பது வரலாறு காணாத உயர்வு.
இதனால், மாதத்திற்கு சுமார் ரூ.300 வரை
கூடுதல் செலவாகும். ஓட்டல்களில் டீ, காபி விலை
உயரும் என்றும் அவர்கள் குமுறினர்.
எனவே, விலை உயர்வை திரும்ப
பெற வேண்டும் என்றும் கோரினர்.
ஆவின்
பால் விலை உயர்வை திரும்ப
பெற வலியுறுத்தி தேமுதிக, பாஜ, விடுதலை சிறுத்தை
கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட்டம் நடத்தின. திமுக சார்பில் வரும்
3ம் தேதி மாவட்ட தலைநகரங்களில்
ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்திய
கம்யூனிஸ்ட் சார்பில் இன்று மாவட்ட தலைநகரங்களில்
ஆர்ப்பாட்டம் நடக்கிறது. மதிமுக சார்பில் 4ம்
தேதியும், பாமக சார்பில் 5ம்
தேதியும் போராட்டம் நடைபெற உள்ளது.
இந்நிலையில்,
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி ஆவின் பால்
விலை லிட்டருக்கு ரூ.10 உயர்வு இன்று
முதல் அமலாகிறது. அதாவது, புளு, பச்சை,
ஆரஞ்சு, மெஜந்தா நிறங்களில் விநியோகிக்கப்படும்
அனைத்து பால் பாக்கெட்டும் லிட்டருக்கு
ரூ.10 உயர்கிறது.
இதன் காரணமாக, பால்
பொருட்களின் விலையும் அதிரடியாக இன்று முதல் கூடுகிறது.
அதாவது, ஏற்கனவே விற்கும் விலையை
விட விலை உயருகிறது. அதன்
படி, ஆவின் நெய் கிலோவுக்கு
ரூ.40, வெண்ணெய் (கிலோ) ரூ.40, பாதாம்
பவுடர் (கிலோ) ரூ.60, பால்கோவா
(கிலோ) ரூ.80, சாதாரண மோர்
ரூ.1. ஸ்பெஷல் மோர் ரூ.2,
லஸ்சி ரூ.3, 200 கிராம் தயிர் ரூ.10
வரை உயருகிறது. குறைந்தபட்சம் ரூ.2 முதல் அதிகபட்சம்
ரூ.60 வரை பால் பொருட்களின்
விலை கூடுகிறது.
No comments:
Post a Comment