Sunday, November 2, 2014

டாஸ்மாக் பாடல்களை தவிர்க்க முடியவில்லை...! -பாடலாசிரியர் பேட்டி

திரைப்பட பாடலாசிரியர் அண்ணாமலை இன்றைய தேதியில் நிறைய படங்களுக்கு பாடல் எழுதிக் கொண்டிருக்கும் ஒரு பரபரப்பான பாடலாசிரியர். சமீபத்தில் வெளியாகியிருக்கும் அரண்மனை, சலீம் போன்ற படங்களில் வெளியான இவரது பாடல்களெல்லாம் ஹிட்டாகியுள்ளன. இதற்கு முன்பும் 40-க்கும் மேற்பட்ட வெற்றிப்பாடல்களை தந்திருப்பவர்.


அவர் அளித்த பதில்கள் இங்கே இடம்பெற்றுள்ளன.


* பாடல்கள் எழுதும் போது சிறிய ஹீரோ, பெரிய ஹீரோ என்ற எண்ணம் மனதில் தோன்றுமா?


இவர் பெரிய ஹீரோ, இவர் பெரிய டைரக்டர், இவர் பெரிய தயாரிப்பாளர் என்றெல்லாம் பார்த்து நான் பாடல் எழுதுவது கிடையாது. என்னைப் பொறுத்தவரை அந்த பாடல் சூழலைப் பொறுத்துதான் பாடல் எழுதுகிறேன். அப்படி நான் எழுதும் எல்லா பாடல்களுமே ஹிட்டாக வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் பெரிய ஹீரோக்களுக்கு பாடல் எழுதும்போது ஒரு வசதி இருக்கிறது. அதையும் மறுக்க முடியாது

அந்த பாடல்கள் விரைவில் மக்களிடம் போய் சேர்ந்துவிடும். வேட்டைக்காரன் படத்தில் விஜய்க்கு நான் எழுதிய என் உச்சி மண்டயில சுர்ருங்குதே என்ற பாடல் பெரிய அளவில ரீச் ஆனது. ரசிகர்களுக்கு மட்டுமின்றி அந்த பாடல், விஜய்க்கும் அதிகம் பிடித்த பாடல். வேட்டைக்காரன் படப்பிடிப்பில் இருந்தபோது ஒருநாள் அவரை சந்தித்தேன. அப்போது மிகவும பாராட்டி பேசினார். அதோடு, இந்த பாடல் என் மகனுக்கும் பிடித்த பாடல் என்றும் சொன்னார்.


* உங்களுக்கு குத்து பாடலாசிரியர் என்றொரு முத்திரை இருக்கிறதே?


நான் குத்துப்பாடல்களை அதிகமாக எழுதியிருப்பதால் அப்படி சொல்கிறார்கள். ஆனால், எத்தனை யுகமாய் எங்கே இருந்தாய். சற்று முன் வரை என்னில் இருந்தேன் என இப்போது பல படங்களில் மெலோடி எழுதி வருகிறேன். மெலோடி பாடல்களையும் என்னால் சிறப்பாக எழுத முடியும்.


* இன்னும் எந்தெந்த இசையமைப்பாளர்களின இசையில் பாடல் எழுத ஆசைப்படுகிறீர்கள்?


விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ்குமார், தமன், தமிழ்ப்படம் கண்ணன், ஸ்ரீகாந்த் தேவா போன்ற இசையமைப்பாளர்களிடம் அதிக பாடல்கள் எழுதியிருக்கிறேன். இளையராஜா, .ஆர்.ரகுமான், ஹாரிஸ்ஜெயராஜ், யுவன் ஷங்கர் ராஜா போன்றவர்களின் இசையிலும் பாடல்கள் எழுத வேண்டும் என்ற ஆசையிருக்கிறது. கண்டிப்பாக எதிர்காலத்தில் இவர்களுக்கும் நான் பாடல் எழுதுவேன் என்று உறுதியாக நம்புகிறேன்.


* நீங்கள் எழுதியதில் உங்களுக்கு பிடித்தமான பாடல்கள் எவை?


நான் எழுதியதில் என் மனதிற்கு அதிக நெருக்கமாக இருக்கும் பாடல்கள் என்றால், ஹரிதாஸ் படத்தில் இடம்பெற்ற போலீஸ் கானா பாடல், உச்சி வெயில் ரோட்டில் கருவாடா காயுறோம் தொப்பிக்குள்ள வேர்வையில தொப்பறையா நனையுறோம், என்ன வாழ்க்கை வாழுறோம் என்னத்துக்கு வாழுறோம் போலீஸ்காரன் வாழ்க்கைக்குள்ள போனா வண்டி வண்டியா கொட்டுதுடா கானா -என்ற பாடல் மிகவும் பிடித்தது.


ஏனெனில் இந்திய அளவில் இதுவரை காவல்துறையினரை மையமாக வைத்து அவர்களை உயர்த்தி சொல்லப்பட்ட எந்த பாடலும் இல்லை. ஹரிதாஸ் படத்தில் அப்படியொரு சூழல் எனக்கு அமைந்தது. அதே படத்தில் நான் எழுதிய, அன்னையின் கருவில் கலையாமல் பிறந்தாயே, அப்போதே மனிதாநீ ஜெயித்தாயே என்ற தன்னம்பிக்கையை ஊட்டக்கூடிய பாடலும் எனக்கு ரொம்ப பிடித்தமானது.


அதேபோல், நான் என்ற படத்தில் எழுதிய உலகினில் மிக உயரம் மனிதனின் சிறு இதயம்,விஜய் நடித்த வேலாயுதம் படத்தில் அண்ணன்-தங்கை பாசத்தை உணர்த்தும் ரத்தத்தின் ரத்தமே இனிய உடன்பிறப்பே என்ற பாடல். அந்த பாடலை நான் எழுதவே ஒரு வாரம் பிடித்தது. அண்ணன் தங்கை பாசத்தை வித்தியாசமாக எழுத வேண்டும் என்பதற்காக இவ்வளவு காலஅவகாசம் எடுத்துக்கொண்டேன்.அந்த பாடலுக்காக நான் சிந்திய வியர்வையின் ஈரம் இன்னும் காயவில்லை.


* உங்களை பாடல் எழுதத் தூண்டிய கவிஞர் யார்?


நான் மேல்நிலை வகுப்பு படிக்கும்போத கவிதை மீது எனக்கு ஈர்ப்பு வந்தது. அப்போது வைரமுத்து பாடல்கள் என்றால் எனக்கு உயிர்.அதன்பிறகுதான் பாடல் எழுத வேண்டும் என்ற ஆசையே பிறந்தது. அதனால்தான் அவர் படித்த பச்சையப்பன் கல்லூரியிலேயே படித்தேன்.அதன்பிறகு பல கவிதைப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் வாங்கினேன்.அப்போது சித்திரப்பாவை என்ற சீரியலுக்கு ஒரு பாடல் எழுதும் வாய்ப்பு கிடைத்தது.அதன்பிறகு கும்மாளம் என்ற படத்தில் 3 பாடல்கள் எழுதினேன். திம்சு கட்ட அடடடடா திம்சுகட்ட -அதுதான் சினிமாவில் எனது முதல் பாட்டு.அந்த பாட்டு அப்போதே ஹிட்டானது. அதன்பிறகு தேவா, பரணி, ரெஹானா, டி.இமான் போன்ற இசையமைப்பளர்களின் இசையில் பாடல்கள் எழுதினேன்.


* உங்களை பிரபலப்படுத்திய பாடல்கள் என்னென்ன?


இமான் இசையில் சத்யராஜ் நடித்த சேனா படத்தில் மீனா என் பாடலை பாடினார். இன்று இந்த காலையில் -என தொடங்கும் பாடல். ஆனால் அந்த படத்தில் மீனா நடிக்கவில்லை. பாடல் மட்டுமே பாடியிருந்தார். அதன்பிறகு நினைத்தாலே இனிக்கும் என்ற படத்தில் விஜய் ஆண்டனிக்கு எழுதிய 3 பாடல்களுமே சூப்பர் ஹிட். பன்னாரஸ் பட்டுக்கட்டி, நண்பனைப் பார்த்த தேதி மட்டும், ஏம்பேரு முல்லா பாடப்போறேன் நல்லா, மூனுமே செம ஹிட்டானது. பரவலாக பேசப்பட்டேன். அதன்பிறகுதான் வேட்டைக்காரனில் விஜய்க்காக என் உச்சி மண்டையில பாடல் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. அந்த பாடல் என்னை இன்னும் பிரபலப்படுத்தியது. தனுசுக்கு இடிச்ச பச்சரிசி, சிங்கம்புலியில் வர்றாறே வர்றாளே, தூங்கா நகரத்தில் நீ சிரிச்சா கொண்டாட்டம் என தொடர்ச்சியாக நான் எழுதிய பாடல்கள் ஹிட்டாகி என்னை பிசியாக்கின.


இப்போது கிட்டத்தட்ட 50 படங்கள் வரை பாடல்கள் எழுதிக்கொண்டிருக்கிறேன். பொங்கி எழு மனோகரா, திலகர், கல்கண்டு, விஞ்ஞானி, ஈட்டி, இந்தியா பாகிஸ்தான் என சொல்லிக்கொண்டே போகலாம்.


* சமுதாய கருத்துக்களை எழுதிய பாடல் என்ன?


ஒவ்வொரு கவிஞனுமே இந்த சமுதாயத்தின் மீது அக்கறை கொண்டவன்தான். தன்னால் முடிந்தவரை மக்களுக்கு நல்ல கருத்துக்களை சொல்ல விரும்புவான்.பட்டுக்கோடடை கல்யாண சுந்தரத்தை இதற்கு மிகப்பெரிய உதாரணமாக நான் நினைக்கிறேன். இப்போது உள்ள சூழலில் எல்லா பாடலிலும் நல்ல கருத்தை சொல்வது கொஞ்சம் சிக்கலான விசயம். இருந்தாலும் எனது பல பாடல்களில் சில வரிகளிலாவது சமூகத்துக்கு தேவையான நல்ல விசயங்களை சொல்கிறேன்.


இதற்கு உதாரணமாக எனது தன்னம்பிக்கை பாடல்களை சொல்லலாம். நான் படத்தில் எழுதிய உலகினில் மிக உயரம் மனிதனின் சிறு இதயம், சலீமில் உலகம் உன்னை கையை கழுவினாலும், ஹரிதாஸில் அன்னையின் மடியில், ஈட்டியில் ஒரு துளி மழையினில் தொடங்குது பெருங்கடல்தான், இப்படி பல பாடல்களின் ஜனங்களுக்கு தேவையான கருத்துக்களை முடிந்தவரை சேர்த்தே எழுதியிருக்கிறேன். சகுனியில் போட்டது பத்தல பாடலில்கூட, வேணான்டா வெட்டு குத்து எனக்கு எல்லோரும் சொந்தக்காரன்டா -என்ற வரிகள் எழுதியிருப்பேன். இப்படி எழுதுவதை எனது முக்கிய கடமையாகவும் கருதுகிறேன்.


* டாஸ்மாக் பாடல்கள் படத்துக்குப்படம் இடம்பெறுகிறதே இது ஆரோக்யமான விசயமா?


டாஸ்மாக் பாடல்கள் சினிமாவில் இடம்பெறுவது தவிர்க்க முடியாத விசயமாகி விட்டது. அதற்கு காரணம் ஒரு இயக்குனரையோ, நடிகரையோ, கவிஞரையோ காரணமாக நான் சொல்ல விரும்பவில்லை.இன்றைக்கு மொத்த சமூகத்திலும் குடிமகன்களின் எண்ணிக்கை பெருகி விட்டது. தெருவுக்கு தெரு டாஸ்மாக் இருக்கிறது. அந்த காலத்திளெல்லாம் குடிப்போர் எண்ணிக்கை குறைவு. குடிப்பதையே மிக இழிந்த விசயமாக நினைத்தார்கள்.அப்படியே குடித்தாலும் வீட்டிற்கு தெரியாமல் குடிப்பார்கள்.


ஆனால் இன்றைக்கு பார்களில் அமர்ந்து நள்ளிரவு வரை குடிப்பவர்களின் எண்ணிக்கை பெருகி விட்டது. இது சரியா தவறா என்றெல்லாம் நாம் யோசிப்பதை விடவும் இன்றைய வாழ்க்கையாக நிதர்சன உண்மையாக இருக்கிறது. அந்த வகையில் இன்றைக்கு படமெடுக்கிற இயக்குனர்கள் வாழ்க்கையை தங்கள் படங்களில் காண்பிக்கும் பொருட்டுதான் அதுபோன்ற டாஸ்மாக் காட்சிகளை வைக்கிறார்கள். கவிஞன் என்கிறபோது அதுபோன்ற பாடல்களை எழுதுகிறபோது குடிமகன்களைப்பற்றி சொல்ல வேண்டியதை தவிர்க்க முடிவதில்லை. அந்தவகையில் நான்தான் நிறைய குடிபாடடு எழுதியிருக்கிறேன். பொங்கி எழு மனோகராவில் உள்ள போடா உள்ளுக்குள்ள போடா உள்ளுக்குள்ள போனா பொங்கி வரும் தானா -இதுவும் பாரில் பாடுகிற பாட்டுதான். இந்தியா பாகிஸ்தான் படத்தில் ஒரு பொண்ணை பார்த்தேன் மாமா என்ற பாடல். இந்த மாதிரி இயக்குனர்கள் வைத்திருக்கும் கதைக்கும் சூழலுக்கும்தான் நான் பாடல் எழுதனும். அது தவிர்க்க முடியாத விசயம். நான் எழுத மாட்டேன் என்று சொன்னால் அந்த பாடலை வேறு யாராவது எழுதி விடுவார்கள். அந்தவகையில் மக்கள் வாழ்க்கையில் டாஸ்மாக் முக்கியமாகி விட்டதால் திரைப்படங்களில் அது முககியமான விசயமாகி விட்டது.


* இன்றைய ரசனை குறித்து ?


இந்த மாதிரியான பாடல்களைத் தான் ரசிப்போம். இவற்றை ரசிக்க மாட்டோம் என்று எந்த ரசிகர்களும் சொல்வதில்லை. பாடல்கள் அவர்களுக்கு பிடித்திருந்தால் குத்துப்பாட்டோ, மெலோடிப் பாட்டோ எதுவாக இருந்தாலும் ரசிப்பார்கள். மெட்டும், வார்த்தைகளும் அவர்களது வாழ்க்கையை அவர்களுக்கு நினைவூட்டினால் அந்த பாடல் மிகப்பெரிய ஹிட் பாடலாகி விடும். அதிலும் இன்றைக்கு குத்துப்பாட்டு வெளியான உடனேயே பிரபலமாகி விடுகிறது. அதற்கு முக்கியான காரணம் மனிதர்கள் எப்போதுமே சந்தோசமாக இருக்க ஆசைப்படுபவர்கள். சோகமே நமக்கு வரக்கூடாது என்று நினைப்பவர்கள். இது ஒவ்வொரு மனிதனின் மனதிலும் இருக்கிற எண்ணம்.குத்துப்பாடலை கேட்கும்போது அவர்களையும் அறியாமலேயே குஷி கிளம்பி விடுகிறது. அதேசமயம் 30, 40 வயதை கொண்டவர்கள் தத்துவம் மற்றும் மேலோடிப்பாடல்களை ரசிக்கிறார்கள்.


* விருதுகள் பற்றி...?என்னைப் பொறுத்தவரை எனது பாடல்களை கேட்டு விட்டு அதிலுள்ள வார்த்தைகளை சில ரசிகர்கள் குறிப்பிட்டு சொல்லி பாராட்டுவார்கள். அதைக் கேட்கையில் எனக்கு விருது கிடைத்த சந்தோசம் கிடைக்கும். அந்த வகையில், அன்னையின் மடியில் கருவாக பிறந்தாயே, உலகம் உன்னை கையை கழுவினாலும், உலகினில் மிக உயரம் மனிதனின் சிறு இதயம் என ரசிகர்கள் பாராட்டிய பாடல்கள் அனைத்துமே எனக்கு விருது பெற்றுத் தந்ததாகவே நான் கருதுகிறேன் என்கிறார் பாடலாசிரியர் அணணாமலை.


No comments:

Post a Comment