இந்தியா
- இலங்கை அணிகள் மோதும் முதல்
ஒருநாள் போட்டி, ஒடிசா மாநிலம்
கட்டாக்கில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு
தொடங்குகிறது. இந்தியா வந்துள்ள இலங்கை
அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட
தொடரில் விளையாடுகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணி
வீரர்கள், தங்கள் நாட்டு கிரிக்கெட்
வாரியத்துடன் ஏற்பட்ட ஊதிய ஒப்பந்த
பிரச்னை காரணமாக இந்திய சுற்றுப்பயணத்தை
பாதியிலேயே முடித்துக் கொண்டு நாடு திரும்பியதை
அடுத்து, பிசிசிஐ சார்பில் இலங்கை
அணிக்கு அவசர அழைப்பு விடுக்கப்பட்டது
குறிப்பிடத்தக்கது.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில்
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடக்க
உள்ள உலக கோப்பை தொடருக்கான
ஒத்திகையாக இந்த தொடர் அமைந்துள்ளது.
முதல் 3 போட்டிகளுக்கான இந்திய அணியில் கேப்டன்
டோனிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதால், இளம் வீரர் கோஹ்லி
தலைமையில் இந்தியா களமிறங்குகிறது. சமீபத்திய
தொடர்களில் ரன் குவிக்க முடியாமல்
தடுமாறி வந்த கோஹ்லி, வெஸ்ட்
இண்டீசுக்கு எதிராக 62 மற்றும் 127 ரன் விளாசியதால் மீண்டும்
பார்முக்கு திரும்பியுள்ளார்.
கோஹ்லி
தலைமையில் இந்தியா விளையாடி உள்ள
12 ஒருநாள் போட்டிகளில் 9ல் வென்றுள்ளதும் அவருக்கு
கூடுதல் உற்சாகமளிக்கும். ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி
தரவரிசையில் மீண்டும் நம்பர் 1 இடத்துக்கு முன்னேறுவதுடன், அதி விரைவாக 6,000 ரன்
கடந்த வீரர் என்ற சாதனையையும்
குறி வைக்கிறார் கோஹ்லி. இந்த சாதனைக்கு
இன்னும் 121 ரன் மட்டுமே தேவைப்படுகிறது.
தொடக்க வீரர்களுக்கான இடத்தை உறுதி செய்வதில்
அஜிங்க்யா ரகானே, ஷிகர் தவான்,
ரோகித் ஷர்மா இடையே கடும்
போட்டி ஏற்பட்டுள்ளது. காயம் காரணமாக ஓய்வெடுத்து
வந்த ரோகித், இலங்கை லெவனுக்கு
எதிராக நடந்த பயிற்சி ஆட்டத்தில்
142 ரன் விளாசி உடல்தகுதியை நிரூபித்துள்ளார். நடு
வரிசையில் ரெய்னா, ராயுடு, சாஹா,
ஜடேஜா என அதிரடி வீரர்கள்
அணிவகுப்பதால் இந்திய பேட்டிங் வரிசை
மிரட்டலாக அமைந்துள்ளது.
காயம் காரணமாக முன்னணி வேகப்
பந்துவீச்சாளர்கள் மலிங்கா, லக்மல் இல்லாததும் மெண்டிஸ் ஹெராத்
சுழல் கூட்டணிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதும் பந்துவீச்சை பலவீனப்படுத்தி உள்ள நிலையில், இந்திய
அதிரடியை கட்டுப்படுத்துவது இலங்கை அணிக்கு சவாலாகவே
இருக்கும். இஷாந்த், உமேஷ், ஆரோன் வேகமும்,
அஷ்வின் சுழலும் இலங்கை பேட்ஸ்மேன்களுக்கு
நெருக்கடி கொடுக்கும்.
‘அவசரம் அவசரமாக ஏற்பாடு
செய்யப்பட்ட இந்த தொடருக்கு முழு
அளவில் தயாராகவில்லை’ என்று இலங்கை கேப்டன்
ஏஞ்சலோ மேத்யூஸ் ஏற்கனவே கூறியிருந்தாலும், அந்த
அணியில் அனுபவ வீரர்கள் சங்கக்கரா,
ஜெயவர்தனே, தில்ஷன் ஆகியோர் இடம்
பெற்றுள்ளதால், கோஹ்லி அண்ட் கோவுக்கு
வெற்றி அவ்வளவு எளிதாக வசப்பட்டுவிடாது
என்பது உறுதி. இரு அணிகளுமே
வெற்றியுடன் தொடங்க வரிந்துகட்டுவதால் கட்டாக்,
பாரபட்டி ஸ்டேடியத்தில் பிற்பகல் 1.30க்கு தொடங்கும் இந்த
போட்டி விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கலாம்.
இந்தியா:
விராத் கோஹ்லி (கேப்டன்), ஷிகர்
தவான், அஜிங்க்யா ரகானே, சுரேஷ் ரெய்னா,
அம்பாதி ராயுடு, விருத்திமான் சாஹா
(விக்கெட் கீப்பர்), அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி,
உமேஷ் யாதவ், இஷாந்த் ஷர்மா,
அமித் மிஷ்ரா, முரளி விஜய்,
வருண் ஆரோன், அக்ஷர் பட்டேல்.
இலங்கை:
ஏஞ்சலோ மேத்யூஸ் (கேப்டன்), சதுரங்க டி சில்வா,
நிரோஷன் டிக்வெல்லா, திலகரத்னே தில்ஷன், லாகிரு கமகே, மகிளா
ஜெயவர்தனே, சூரஜ் ரந்திவ், நுவன்
குலசேகரா, குசால் பெரேரா, திசாரா
பெரேரா, தம்மிகா பிரசாத், சீக்குகே
பிரசன்னா, அஷன் பிரியஞ்சன், குமார்
சங்கக்கரா (விக்கெட் கீப்பர்), உபுல் தரங்கா.
No comments:
Post a Comment