சினிமாவில்
கதாநாயகியாக நடித்து, கவர்ச்சிகரமான வாழ்க்கை வாழ்ந்தவர்கள் சராசரியான வாழ்க்கைக்கு திரும்புவது ரொம்ப கடினம். அதிலும்
ஏ.சி. வாகனத்தில்
சுகமாக அமர்ந்துகொண்டு, நடிக்கும் நேரத்தில் மட்டும் கேமரா முன்னால்
வந்து நிற்கும் கதாநாயகிகள் நிஜவாழ்க்கையையும் அப்படியேதான் அனுபவிக்க விரும்புவார்கள்.
ஆனால் இந்த கதாநாயகி இப்போது
சமையல் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார். ஐநூறு பேருக்கோ, ஆயிரம்
பேருக்கோ ஆர்டர் கொடுத்துவிட்டால்
போதும் கைவலிக்க காய்கறி நறுக்கி, கண்
எரிய புகையில் நின்று சுவையாக உணவு
தயாரிக்கிறார். துணைக்கு கணவர் கைகொடுக்கிறார்.
'இளமையும்,
அழகும் போன பின்பு இந்த
தொழிலுக்கு வந்துவிட்டாரா?' என்று கேட்டுவிடாதீர்கள். ஏன்என்றால்
இவர் இப்போதும் நடிகைக்குரிய தோற்றபொலிவோடுதான் இருக்கிறார். ஆனால் நடிப்பு வேண்டாம்
என்று சமையல் தொழிலை முழுமனதோடு
ஏற்று, மகிழ்ச்சியோடு செய்துகொண்டிருக்கிறார்.
அந்த கதாநாயகி பெயர் ஆதிரா என்ற
ரம்யா. தாதாசாகிப் என்ற மலையாள திரைப்படத்தில்
மம்மூட்டியின் கதாநாயகி. தொடர்ந்து ஐந்து படங்களில் பிரபல
நடிகர்களோடு கதாநாயகியாகி 'டூயட்' பாடினார். அவரிடம்..
'ஐந்து
படங்களில் கதாநாயகியாக நடித்த நீங்கள், தற்போது
500 பேருக்கு சமைத்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு மகிழ்ச்சியான தொழில் நடிப்பா, சமையலா?'
என்று கேட்டால் சுடச்சுட அவரிடமிருந்து பதில் வருகிறது.
"500 பேருக்கு
சமைக்க நானும், என் கணவரும்
(விஷ்னு நம்பூதிரி) போதும். சமீபத்தில் அதுபோல்
ஒரு ஆர்டர் வந்தது. 60 கிலோ
அரிசியை வேகவைத்தோம். 80 கிலோ காய்கறிகளை நறுக்கினோம்.
150 தேங்காய்களை உடைத்து துருவினோம். எங்கள்
இருவரின் நான்கு கைகளும் இயந்திரம்
போல் மாறியது. வேலை மின்னல் வேகத்தில்
நடந்தது. இடையில் சிறிது நேரம்
ஓய்வெடுத்தோம். எல்லாவற்றையும் முடித்து, மதிய உணவை பரிமாறியபோது
எல்லோரும், ரொம்ப டேஸ்ட்டாக இருக்கிறது
என்றார்கள்.
அதை கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன்.
எனக்கு சினிமாவைவிட சமையல்தான் பிடித்திருக்கிறது.." என்கிறார், அதிரடியாக!
'அப்படியானால்
நீங்கள் விருப்பம் இல்லாமலா கதாநாயகியாக நடித்தீர்கள்?' என்று கேட்டால்..
"எதுவும்
தெரியாத பெண்ணாக இருந்த காலகட்டத்தில்
நான் நடிக்கவந்தேன். சினிமா ஒரு எலிப்பொறி
போன்றது. அதன் மீது ஆசை
வைத்துவிட்டால் அதன் உள்ளே நாம்
சிக்கிக்கொள்வோம். திருமணத்தின் மூலம் நான் அந்த
பொறியில் இருந்து தப்பினேன். சினிமாவில்
பிரபலமாக இருக்கும் நடிகைக்கு நல்ல முறையில் குடும்ப
வாழ்க்கை அமையும் என்று சொல்ல
முடியாது. நான் மனஅமைதி நிறைந்த
குடும்ப வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறேன்" என்கிறார்.
ரம்யா நடிப்பில் எப்படியோ தெரியாது. ஆனால் சமையலில் இறங்கிவிட்டால்,
மின்னல் வேகம்தான். தேங்காய் துருவுவதில் இவரை வெல்ல முடியாது.
இவரது கணவர் விஷ்ணு நம்பூதிரி
கோட்டயத்தை சேர்ந்தவர். சமையல் கலைஞர். அவர்
காயத்ரி கேட்டரிங் என்ற நிறுவனத்தை நடத்தி
வருகிறார்.
2004-ம்
ஆண்டு இவர்கள் திருமணம் நடக்கும்போது
ரம்யாவுக்கு டீ மற்றும் நூடுல்ஸ்
இரண்டும்தான் தயாரிக்க தெரியும். அடுத்த 3 ஆண்டுகளில் கணவரிடம் இருந்து சமையல் வித்தைகளை
கற்றுக்கொண்டு, சமையல் அறைக்குள் புகுந்துவிட்டார்.
"சமையல்
உடனடியாக ரிசல்ட் தெரியும் கலை.
ரொம்ப கவனமாக செய்யவேண்டும். சமையல்
செய்து, நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் உணவை கொண்டு போய்
சேர்த்துவிட்டு நாம் வீடு திரும்புவதற்குள்
ரிசல்ட் நம் வீடு தேடிவந்துவிடும்.
இன்று சுவையான உணவை தயாரித்து
கொடுத்தால் தான் நாளையும் நம்மை
அழைப்பார்கள்.
ஆயிரம்
பேருக்கு மேல் சமைக்க வேண்டும்
என்றால் தேவைப்படும் அளவுக்கு உதவியாளர்களை வைத்துக்கொள்வோம். நான் எல்லா வேலைகளையும்
பார்ப்பேன்.
சமையலுக்குரிய
பொருட்களை வாங்குவதில் இருந்து, இலையை வெட்டி, உணவை
பரிமாறுவது வரை உடன் இருந்து
கவனிப்பேன். எல்லாம் முடிந்து சமையல்
பாத்திரங்களை கழுவி வீடு கொண்டுவந்து
சேர்க்கும் வரை திட்டமிட்டு செயல்படுவேன்.
200 தேங்காய் வரை துருவி எடுத்துவிடுவேன்.
எனக்கு கார் ஓட்டவும் தெரியும்
என்பதால் சிறிய நிகழ்ச்சிகளுக்கு தயார்
செய்த உணவுகளை கொண்டு செல்லவும்
முடிகிறது" என்கிறார்.
கதாநாயகியாக
நடித்தது, சமையல் தொழிலுக்கும் கைகொடுக்கிறது.
இவர் சமைத்த உணவுகளை பரிமாற
செல்லும்போது அங்கு இவரை அடையாளங்கண்டுகொள்கிறவர்கள்,
உடன் நின்று போட்டோ எடுத்துக்கொள்கிறார்கள்.
"என்னோடு
போட்டோ எடுத்துக்கொள்ளும் சிலர், 'நீங்கள் சினிமாவில்
இல்லாவிட்டாலும், டெலிவிஷனிலாவது நடித்திருக்கலாமே' என்று கேட்பார்கள். நான்
அவர்களிடம் 'இப்போது நான் சமையல்
அறையில் நின்று வேலை பார்த்து
புகை பிடித்துபோய் உங்கள் முன்னால் நிற்கிறேன்.
தினமும் பியூட்டி பார்லருக்கு போய் பிளீச்சிங் செய்யவும்,
பேஷியல் செய்யவும் எனக்கு ஆசை இல்லை.
நீங்கள் என்னைவிட அழகாக இருக்கிறீர்கள். ஆனாலும்
புகைபிடித்த என்னோடு வந்து போட்டோ
எடுத்துக்கொள்கிறீர்கள்.
இப்போதெல்லாம்
நான் நடிகை என்றால் யாரும்
நம்ப மாட்டார்கள்.." என்று சிரித்தபடி சொல்கிறார்.
ரம்யாவிடம்
இருந்து வாழ்க்கை தத்துவமும் வருகிறது. அதையும் கேளுங்கள்...
"நாம்
கஷ்டப்பட்டு உழைத்து வாழ்ந்தால் அதன்
மூலம் நமக்கு நிறைய மகிழ்ச்சி
கிடைக்கும். நான் நல்ல முறையில்
சம்பாதித்து வாழ்கிறேன் என்பதை பலரும் அறிந்துகொள்ளவேண்டும்
என்று ஆசைப்பட்டேன். அதை அடைந்துவிட்டேன். நான்
சினிமாவில் கண்ணீரை மட்டும்தான் குடித்தேன்.
அந்த கஷ்ட வாழ்க்கை முடிந்துபோய்விட்டது.."
என்று கலகலப்பாக கூறியபடி கடலை மாவில், அரிசி
மாவு கலந்து மிக்சருக்கு தயார்
செய்ய தொடங்குகிறார்.
ரம்யா-
விஷ்ணு நம்பூதிரி தம்பதிகளுக்கு வைஷ்ணவி, வரதா என்று இரண்டு
மகள்கள். அவர்கள் இருவருக்கும் அம்மா
கதாநாயகியாக நடித்த படங்களைவிடவும், அம்மாவின்
சமையல்தான் ரொம்ப பிடித்திருக்கிறதாம்!
"சமையலுக்குரிய
பொருட்களை வாங்குவதில் இருந்து, இலையை வெட்டி, உணவை
பரிமாறுவது வரை உடன் இருந்து
கவனிப்பேன். எல்லாம் முடிந்து சமையல் பாத்திரங்களை
கழுவி வீடு கொண்டுவந்து சேர்க்கும்
வரை திட்டமிட்டு செயல்படுவேன். 200 தேங்காய் வரை துருவி எடுத்துவிடுவேன்.
எனக்கு கார் ஓட்டவும் தெரியும்
என்பதால் சிறிய நிகழ்ச்சிகளுக்கு தயார்
செய்த உணவுகளை கொண்டு செல்லவும்
முடிகிறது..."
No comments:
Post a Comment