Saturday, November 8, 2014

டெல்லியில் 'போலி தூய்மை இந்தியா' திட்டம்: ட்விட்டரில் கழுவியூற்றப்படும் பாஜக

டெல்லியில் வசதிபடைத்தோர் வசிக்கும் பகுதியில் இரவோடு இரவாக குப்பைகளைக் கொட்டி, பின்னர் அதனை மீடியா படை சூழ அனைவரது மத்தியிலும் சுத்தம் செய்த மாநில பாஜக தலைவர் சதீஷ் உபாத்யாயவுக்கு கடுமையான கண்டனக் குரல் எழுகிறது.

மகாத்மா காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2-ஆம் தேதி அன்று பிரதமர் நரேந்திர மோடி ஆரம்பித்து வைத்த தூய்மை இந்தியா (ஸ்வச்ச் பாரத்) திட்டத்தை துவங்கி வைத்தார். அப்போது இந்தியாவின் முக்கிய ஆளுமைகளாகத் திகழும் 9 பெயரை பரிந்துரைத்து, அவர்கள் அனைவரும் இந்தத் திட்டத்தில் இணைந்து விழிப்புணர்வை ஏற்படுத்துமாறும், மேலும் அவர்களால் முடிந்த அளவில் தங்களது ஆதரவாளர்களையும் நண்பர்களையும் இந்தத் திட்டத்தில் இணைக்க உதவுங்கள் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்த சச்சின் டெண்டுல்கர், காங்கிரஸ் தலைவர் சஷி தரூர், தொழிலதிபர் அனில் அம்பானி, சல்மான் கான், பிரியங்கா சோப்ரா, கமல்ஹாசன், யோகா குரு ராம்தேவ், மிரிதுலா சின்ஹா ஆகியோர் இந்தத் திட்டத்தில் பங்கேற்று மற்றவர்களையும் இணையச் செய்தனர்.

இதில் பாஜகவினர் மட்டும் அல்லாமல் கேரள கடலோர கிராம பகுதியை சுத்தம் செய்த காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் மற்றும் டெல்லி பிரதமர் இல்லம் அருகே உள்ள கால்வாயை ஆம் ஆத்மி தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் சுத்தம் செய்தது என பல தரப்பினரின் கவனத்தையும் 'தூய்மை இந்தியா' ஈர்த்தது என்று ஒப்புக்கொண்டாக வேண்டும்.

பொது நல காரியங்களுக்காக நிதி திரட்ட, 'ஐஸ் பக்கெட் சாலெஞ்ச்' என்ற நுதன விளையாட்டு உலக அரங்கில் பிரபலப்படுத்தப்பட்டு வெற்றி கண்டதை தொடர்ந்து, அதே பாணியில் ஸ்வச்ச் பாரத் திட்டத்தையும் எடுத்து செல்லவே இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. வியூகம் செய்த அளவில் இந்தத் திட்டம் மக்கள் மத்தியில் கொண்டு செல்லவும் வழிவகுக்கப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என பல தரப்பினர் பங்கேற்று தூய்மைபடுத்தும் திட்டத்தில் ஈடுபடும் நிலையில், இந்த இந்தியாவை சுத்தப்படுத்தும் திட்டம் குறித்த சந்தேகப் பார்வையும் எழுந்துள்ளது. இதற்கு காரணம் டெல்லி மாநில பாஜக தலைவர் சதீஷ் உபத்யாய கையாண்ட விதம்தான்.

சமீபத்தில் தூய்மை இந்தியா திட்டத்தில் பங்கேற்பதாக கூறிய அவர், கடந்த 5-ஆம் தேதி இந்தத் திட்டத்தை டெல்லியின் இஸ்லாமிக் சென்டர் பகுதியில் சுத்தம் செய்யும் பணியை செய்தார். தற்போது இவரது பணி தூய்மை இந்தியா திட்டத்தையே கேள்விக்குள்ளாக்கும் நிலைக்கு இட்டு சென்றுள்ளது.

சதீஷ் உபாத்யாயவின் தூய்மை இந்தியா பணியில் உண்மை நிலை மிகத் தெளிவாக அம்பலமாகி உள்ளது. சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடுவதற்கு முந்தைய நாள், வசதிபடைத்தோர் அதிகம் வசிக்கும் டெல்லியின் லோதி எஸ்டேட் பகுதியில் டிராலிகளில் மூலம் சாலை ஓரங்களில் இருக்கும் குப்பைகள் கொண்டு வந்து மாநகராட்சி ஊழியர்களால் அங்கு கொட்டப்பட்டது.

பின்னர், மறுநாள் அவர் அங்கு சென்று துடைப்பம் கொண்டு அவரது ஆதரவாளர்களுடன் இணைந்து சுத்தம் செய்தார். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் பத்திரிகையாளர்களால் படம் பிடிப்பக்கப்பட்டு, இணையதளத்தில் அம்பலமாக்கப்பட்டது.

இது போன்ற செயலில் சதீஷ் உபாத்யாய மட்டும் அல்லாமல், ஆம் ஆத்மியிலிருந்து விலகிய ஷாஸியா இல்மி மற்றும் சில அரசியல் முகங்களும் இதே முறையில் இந்தியாவை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுப்பட்டுள்ளது அனைவரையும் கவலை கொள்ளவும், இது போன்ற திட்டங்கள் மீது நம்பிக்கை இழக்கவும் செய்துள்ளது.இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி கூறுகையில், "இந்த நடவடிக்கையின் மூலம் பாஜவின் இரட்டை வேடம் அம்பலமானது. டெல்லியில் எங்கு பார்த்தாலும் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன" என்று கூறினார்.

தூய்மை இந்தியா திட்டத்தில் டெல்லியில் குப்பைகளை கொட்டி, பின்னர் அதை சுத்தம் செய்த மாநில பாஜக தலைவர் சதீஷ் உபாத்யாயாவுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விவரம் இணையத்தில் பரவியதினால், தற்போது ட்விட்டரில் அனைவராலும் விவாதிக்கப்படும் விவகாரமாக தூய்மை இந்தியா மாறி உள்ளது. அனால் பிரதமர் மோடியின் கனவு திட்டம் #CheatingCleanIndia என்று கேலிகளுக்கு உள்ளாகி உள்ளது. ட்விட்டர்வாசிகள் தொடர்ந்து தூய்மை இந்தியா நடக்கும் முறைகளை கண்டித்து தங்களது கோபங்களுடன் பகிர்ந்து வருகின்றனர்.

உலக அரங்கில் புதுமை நடவடிக்கையில் ஒன்றாக பார்க்கப்பட்ட 'Swachh Bharat', தற்போது ட்விட்டரில் விவாத பொருளாகி, ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான ட்வீட்கள் ட்விட்டரில் நேற்று (வியாழக்கிழமை) இரவிலிருந்து பதிவிடப்பட்டு வருகிறது. அவைகளுள் சில,

ப்ரேர்னா ‏(@Prerna): நன்றி, சதீஷ் ஜி, எங்களுக்கு தூய்மை இந்தியா என்றால் என்ன? என்று சொல்லி கொடுத்ததற்கு.

மவ்மிதா சவுத்ரி (@immoumita): பாஜக வெட்கப்பட வேண்டும்! மக்களை ஏமாற்றுவது தான் பாஜக-வின் அரசியல்

அதுல் கோரக்பூரி (@beingatuls): பாவம் சதீஷ் உபத்யாய, அனைவரும் கேமரா ஷோவுக்காக தான் துடைப்பம் எடுத்து சுத்தம் செய்கிறார்கள். அதில் இவர் மட்டும் மாட்டிக்கொண்டார்.

ஆர்த்தி (‏@aartic): காங்கிரஸ் ஆட்சியில் பேப்பர் அளவிலாவது அரசு இயங்கியது. இங்கு எல்லாமே வேடிக்கையானது தான்.

ராஷி கக்கார் (‏@rashi_kakkar): ஸ்வச்ச் பாரத் எல்லாம் ப்ரொஃபைல் பிக்-குக்காக தான். இந்தியாவின் பிரபலங்களுக்கும் பணக்காரர்களுக்கும் தற்போது டி.பி. போட்டோவுக்கு தான் இந்த திட்டம் உதவுகிறது.

அனுபமா (‏@_Anuesia): அவர்கள் ஏமாற்றுபவர்களாகவே இருக்கட்டும். நாம் பொது மக்கள் அனைவரும் இணைந்த இந்த திட்டத்தை ஒழுங்காக செய்யலாம்.


வினோத் மேத்தா (‏@DrunkVinodMehta): பிரபலங்கள்/ வீரர்கள்/ அரசியல்வாதிகள் அனைவரும் துடைப்படத்துடன் செல்ஃபீ போடவும், இல்லையென்றால் அனைவருக்கு வருவாய்த்துறை நோட்டீஸ் அனுப்பும். உஷார்.


No comments:

Post a Comment