மறைந்த நடிகர் திலகம்' சிவாஜிகணேசனின் இளைய மகன் பிரபு. 1982 ம் வருடம், சங்கிலி' என்ற படத்தின் மூலம் துணை கதாநாயகனாக அறிமுகம் ஆனார். பின்னர் கதாநாயகனாக உயர்ந்து, இதுவரை 190 படங்களுக்கும் மேல் நடித்து இருக்கிறார்.
இவருடைய மகன் விக்ரம் பிரபு, அமெரிக்காவில் உள்ள நியூயார்க் பிலிம் அகடமியில், திரைப்பட தொழில்நுட்பம் படித்தவர். இவரை சினிமாவில் நடிக்கவைப்பதற்கு பல பட நிறுவனங்கள் முன்வந்தன. தகுந்த சந்தர்ப்பத்துக்காக விக்ரம் பிரபு காத்திருந்தார்.
டைரக்டர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில், விக்ரம் பிரபு நடிக்க சம்மதித்து இருக்கிறார். இந்த படத்தை மைனா' புகழ் பிரபு சாலமன் டைரக்டு செய்கிறார். படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.
விக்ரம்' என்ற பெயரில் ஏற்கனவே பிரபல நடிகர் இருப்பதால், இவருடைய பெயர் படத்துக்காக மாற்றப்படும் என்று தெரிகிறது. படத்தில், இவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். இவருடைய பெயரும் மாற்றப்படுகிறது.
படத்தின் கதை பற்றியும், விக்ரம் பிரபுவை தேர்வு செய்தது பற்றியும் பிரபு சாலமன் கூறியதாவது:
சமீபகாலமாக, காட்டு யானைகள் ஊருக்குள் வந்து அட்டகாசம் செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதற்கு காரணம் என்ன? என்பதுதான் இந்த படத்தின் கதை.
ஊருக்குள் வந்து துவம்சம் செய்கிற யானைகளை விரட்ட, வளர்ப்பு யானைகள்
பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு குமுக்கி யானைகள் என்று பெயர். அந்த குமுக்கி யானைகள் பற்றியும் கதையில் சொல்லப்படுகிறது. கதைப்படி, படத்தின் கதாநாயகன், குமுக்கி யானையின் பயிற்சியாளர்.
அந்த கதாபாத்திரத்துக்கான நாயகனை தேடி 6 மாதங்களாக பல ஊர்களில் அலைந்தேன். விக்ரம் பிரபுவை சமீபத்தில்தான் பார்த்தேன். என் கதைக்கும், நான் கற்பனை செய்திருந்த கதாபாத்திரத்துக்கும் அவர் நூற்றுக்கு நூறு பொருத்தமாக இருந்தார்.
அவரை, யானைகளுடன் பழகவிடுவதற்காக, கேரள மாநிலம் ஒத்தப்பாளையத்துக்கு அனுப்ப இருக்கிறேன். 15 நாட்கள் யானைகளுடன் அவர் பழகியபின், படப்பிடிப்பு தொடங்கும்.'' இவ்வாறு பிரபு சாலமன் கூறினார்.

No comments:
Post a Comment