"சிரியாவில் போர்க்குற்றம் நடந்தால் உடனே குரல் கொடுக்கிறோம். ஆனால், 3 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் நடந்த இனப்படு்கொலைகளை பற்றி வாய்திறக்க மறுக்கிறோம்.
இந்த அப்பாவி மக்களுக்கு நியாயம் கிடைப்பதற்காக, ஒரு பத்திரிகையாளனாய் இந்த அநியாயங்களுக்கு நியாயம் தேடி தருவேன்," என்று கூறுபவர், 'இலங்கையின் கொலைக்களங்கள்' ஆவணப்படத்தை தயாரித்த ஜான் ஸ்னோ.
இலங்கை அரசின் போர்க்குற்றங்களை உலகுக்கு உணர்த்த கிடைத்த வலுவான ஆயுதம், 'சேனல் -4' வெளியிட்ட 'இலங்கையின் கொலைக்களங்கள்' என்ற ஆவணப் படம்.
இந்த ஆவணப் படம், இங்கிலாந்து, அமெரிக்கா, நார்வே போன்ற பல நாடுகளின் நாடாளுமன்றங்களில் திரையிடப்பட்டு, இலங்கைக்கு எதிரான பல விவாதங்களும் நடைபெற்றன.
அதை தொடர்ந்து, இப்போது மீண்டும் சேனல்-4 'இலங்கையின் கொலைக்களங்கள் - தண்டிக்கபடாத குற்றங்கள்' என்ற ஆவணப்படத்தை இரண்டாவது பாகமாக வெளியிடவுள்ளது. இந்திய நேரப்படி, வியாழக்கிழமை அதிகாலை 4.25 மணிக்கு சேனல் 4-ல் இந்தப் படம் ஒளிபரப்படுகிறது.
இந்த வெளியீட்டுக்கு முன்னர் கடந்த மார்ச் 11-ம் தேதி, ஜெனீவா மனித உரிமை திரைப்பிட விழாவில் இப்படம் திரையிடப்பட்டப்போது, 'இதைப் பார்ப்பதற்கே கல்லாக்கி கொண்ட மனம் வேண்டும்' என்று மனித உரிமை ஆர்வலர்கள் கருத்து கூறியுள்ளனர்.
சேனல் 4 வெளியிடவுள்ள ஆவணப்படத்தின் இரண்டாவது பாகத்தின் மூலம் அம்பலமாகும் இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் என்னென்ன?
ஜெனீவாவில் இப்படத்தைப் பார்த்து அதிர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் விவரித்தவை:
சிறுவன் பாலச்சந்திரன் திட்டமிட்டு படுகொலை!
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இரண்டாவது மகன் 'பாலச்சந்திர பிரபாகரன்', பிரபாகரன் மகன் என்பதாலே கொடுமைப்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவரருகே ஐந்து பேரின் சடலமும் கைகள் கட்டப்பட்டு நிர்வாண நிலையில் இருக்கின்றன. அவரின் மெய்க்காவலர்களாக இருக்கக்கூடும் என்று சேனல் 4 குறிப்பிட்டுள்ளது.
பாலச்சந்திரனின் உடம்பில் 5 குண்டுகள் பாய்ந்துள்ளன. பாய்ந்த குண்டுகள் அனைத்தும் 2 முதல் 3 அடி தொலைவில் இருந்தே பாய்ந்துள்ளன என்று கூறப்பட்டுள்ளது. இதில் உடல் அளவிலான சித்திரவதைகளுக்கு சாட்சியங்கள் இல்லை என்றாலும் 'பிரபாகரன் மகன்' என்பதாலே மனதளவில் மிகவும் துன்புறுத்தப்பட்டிருக்கிறார் என்று அறியப்படுகின்றது.
இக்கொலை மே 17, 2009 அன்று நடைபெற்றதாக கூறப்பட்டுள்ளது.
திட்டமிட்ட குண்டுவீச்சுத் தாக்குதல்!
'எந்தவித எச்சரிக்கையும் விடப்படாமலே 'திட்டுமிட்டு பொது மக்கள் குண்டுகள் வீசி தாக்குதல் நடைபெற்றுள்ளது. அதுவும் மருத்துவமனை என்று அறிந்தும், அதன் மீதே குண்டுகள் வீசப்பட்டுள்ளன. 2009 ஏப்ரல் 22-ம் தேதி இலங்கை அரசு 'வலிமை வாய்ந்த குண்டுகள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை, பொதுமக்கள் யாரும் கொல்லப்படவில்லை' என்று சொல்லியதே, அப்படியென்றால் குண்டுவீச்சுத் தாக்குதல் யாரால் நடத்தப்பட்டது? இந்த தாக்குதலுக்கு யார் உத்தரவு கொடுத்தது? என்று வினவியுள்ளது சேனல் 4.
உணவின்றி மருந்தின்றி உயிர்கள் பலி!
பாதுக்காப்பு வலயங்கள் (No Fire Zone) பகுதியில் அடைக்கப்பட்ட தமிழர்கள் உணவின்றி, குண்டுவீச்சுத் தாக்குதலில் சிதறுண்ட உடல் பாகங்களுக்கு மருந்து இல்லாமல் பலர் வலியாலும், பசியாலும் இறந்துள்ளனர்.
இலங்கை அரசின் கணக்கின்படி 60,000 தமிழர்கள் பாதுக்காப்பு வலயங்களில் இருந்துள்ளனர். ஐ.நா.வின் கணக்குப்படி 1,20,000 தமிழர்கள் இருந்துள்ளனர். இப்பொழுது எங்கே அந்த மக்கள் என்ற கேள்வியை முன்வைத்துள்ளது இந்த ஆவணப்படம்.
பதுங்கு குழிகள் மீது பாய்ந்த குண்டுகள்!
பாதுகாப்பு வலயங்களில் இருந்த பதுங்கு குழிகள், மக்களை காக்க ஐ.நா அமைத்த பதுங்கு குழிகள் என பதுங்கு குழிகள் எல்லாவற்றி்ன் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடைபெற்றுள்ளது. சரத் பொன்சேகா போரில் எவ்வித வலிமையான ஆயுதங்களும் பயன்படுத்தவில்லை என்று சொல்லிவிட்ட பிறகே ஐ.நா. பதுங்கு குழிகள் மீது தொடர் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இத்தாக்குதல் நடக்கும்போது பீட்டர் மக்கே என்ற ஐ.நா.வின் ஆஸ்திரேலிய பணியாளரால் இதை நிறுத்தக்கோரி பல அழைப்புகள் கொழும்புக்கு விடப்பட்ட பிறகும், அங்கிருந்து சற்று தள்ளி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.
இப்படி, தாங்கள் பார்த்த ஆவணப் படத்தில் அம்பலப்படுத்தப்பட்டுள்ள இலங்கை அரசின் போர்க்குற்றங்களை மனித உரிமை ஆர்வலர்கள் சிலர் விவரிக்க, இப்படத்தை இயக்கிய கல்லம் மெக்ரே என்ன சொல்கிறார்?
கண்டுகொள்ளாத ஐ.நா., மேற்குலக நாடுகள்...
இலங்கையில் பொதுமக்களின் படுகொலைகளுக்கு ஐ.நா.வும் மேற்குலகின் நடவடிக்கை இன்மையுமே முக்கிய காரணம் என்று 'இலங்கையின் கொலைக்களங்கள்' ஆவணப்படத்தின் இயக்குனர் கல்லம் மெக்ரே குற்றம்சாட்டுகிறார்.
தனது ஆவணப் படங்கள் குறித்தும், இலங்கையின் போர்க்குற்றங்கள் பற்றியும் அவர் விரிவாக அளித்துள்ள பேட்டியில், "இது திட்டமிட்டு செய்யப்பட்ட படுகொலைகள். 'இலங்கை ராணுவம் ஒழுக்கமானது; ஒருங்கிணைக்கப்பட்டது; போரை நானே வழிநடத்தினேன்,' என்னும் மகிந்த ராஜபக்ஷே தொடங்கி, கோத்தபாய ராஜபக்ஷே, சரத் பொன்சேகா உத்தரவுகளின்படியே இந்தக் கொலைகள் செய்யப்பட்டுள்ளன.
இம்மக்களுக்கு சர்வதேச சமூகம் தவறு செய்தது, உண்மை ஆதாரங்கள் உடையவை. ஐ.நா. பதுங்கு குழிகள் என அனைத்து பாதுக்காப்பு வலயங்களிலும் தாக்குதல் நடத்தப்பட்டது.
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் திட்டுமிட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். அதேபோல் விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்கள், போராளிகள் கொல்லப்படவேண்டும் என்றே தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இந்த வீடியோக்கள் எதுவுமே பொய்யானது அல்ல. இது இலங்கை ராணுவத்தை சேர்ந்த ஒருவரால் எடுக்கப்பட்டது. பயங்கரவாதத்துக்கு எதிராக மேற்குலகம் நடத்திய உலகளாவிய போரை காரணமாக வைத்துக்கொண்டு ராஜபக்ஷே அரசு, அப்பாவி மக்களையும், விடுதலைப்புலிகளையும் படுகொலை செய்துள்ளது. இது திட்டமிட்ட இனப்படுகொலை," என்று அவர் தனது ஆவேசத்தை பதித்துள்ளார்.
இந்த ஆவணப் படங்களில் உள்ள காட்சிகள் உண்மை தான் என்பதை, மூத்த தடயவியல் நிபுணர் பேராசிரியர் டெரிக் பெளன்டர் ஆராய்ந்து உறுதி செய்துள்ளார்.
விழிக்குமா சர்வதேச் சமூகம்?
ஆவணப்படத்தின் இராண்டாவது பாகத்தை கண்ட ஐ.நா மனித உரிமைச் சபையின் முன்னாள் ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் அதிர்ச்சியுற்று கூறுகையில், "யுத்தம் முடிவுக்கு வந்து 3 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், போர்க் குற்றச்சாட்டுக்கள் குறித்து, இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூற தயாராகயில்லை.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த வித முக்கிய செயற்பாடுகளை இலங்கை அரசு செய்யாத நிலையில், குற்றச்சாட்டுக்கள் குறித்தான ஒரு சுதந்திரமானதும் நம்பகமானதுமான விசாரணையை மேற்கொள்ள வேண்டிய அவசியமும் பொறுப்பும் சர்வதேச சமூகத்துக்கு இருக்கிறது.
இலங்கைப் போரின் இறுதியில் இடம்பெற்ற கொடுமையான மனித உரிமை மீறல்கள் சம்பவங்களுக்கான நீதியே கிடைக்காதவரை, இலங்கை அரசு கூறுகின்ற இன நல்லிணக்கம், சமாதானம் என்பது எல்லாம் தமிழர்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று," என்கிறார் அவர்.
"புத்தனைப் போதிக்கும் தேசம் செய்தது... காந்தியம் போற்றும் தேசம் ரசித்தது என்பதை போல் தானே நடந்தது," என்று இயலாமையிலும் கருத்தைப் பதிவு செய்கின்றனர், எஞ்சிய ஈழத் தமிழர்கள்.
இது பொய்யோ வதந்திதோ அல்ல... ராஜபக்சஷேவும், கோத்தபயவும் கூறிய 'இந்தியாவின் வழி நடத்தலின்படியே போரை நடத்தி வென்றோம்' என்ற கூற்றும் இங்கே நினைவுகூரத்தக்கது.
"இவ்வரலாற்றில் தமிழர்களுக்கு தமிழர்களே செய்து கொண்ட பாவம் - கண்டும் காணாமல் தானுண்டு; தன் வேலை உண்டு; தமிழர் பூமி அல்ல - ஈழம் அது அண்டை நாடு' என்று சாவகாசமாக விவாதித்து கொண்டு இருந்தது தான்," என்று கூறப்படும் குறைகளுக்கு பதில் தான் என்ன?
விலங்கு மனிதர்கள் பிடியில், பொம்மை மனிதர்களாய் உதைபட்டு மரணித்துப் போன ஈழத்தமிழர்களுக்கு 'மனித உரிமை' பேசும் சர்வதேசச் சமூகம் என்ன பதில் சொல்லப் போகிறது?
devedia paiya raja baksay
ReplyDelete