இந்தியாவின்
எதிர்ப்பையும் மீறி சீன நீர்மூழ்கி
போர் கப்பல், தனது துறைமுகத்துக்கு
வர இலங்கை அனுமதி அளித்துள்ளது.
சீனாவின் அணுஆயுத நீர்மூழ்கி கப்பல்,
இலங்கை துறைமுகத்துக்கு வர கடந்த செப்டம்பர்
மாதம் அனுமதி வழங்கியது. இந்த
விவகாரத்தில் அதிபர் ராஜபக்சேவின் சகோதரர்
கோத்தபய ராஜபக்சேவிடம் மத்திய அரசு தனது
கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தது. இந்நிலையில், வியட்நாம் பிரதமர் நகுயென் நாங்
டெங் சில தினங்களுக்கு முன்பு
இந்திய பிரதமர் மோடியை சந்தித்து
சென்றார். இதைத் தொடர்ந்து, சீனாவின்
மற்றொரு நீர்மூழ்கி போர் கப்பல் கொழும்பு
துறைமுகத்துக்கு வர இலங்கை அனுமதி
வழங்கி உள்ளது.
சீனாவின்
போர் கப்பல் பாக் ஜலசந்தி
வழியாக கடந்து செல்வது தெற்கு
ஆசிய பிராந்தியத்தில் தேவையில்லாத பதற்றத்தை உருவாக்கும் என்று இந்தியா எச்சரித்திருந்த
போதும், அதை கொஞ்சமும் மதிக்காமல்
இந்தியாவை இழிவுபடுத்தும் நோக்கத்திலேயே இலங்கை இவ்வாறு செயல்படுவதாக
குற்றச்சாட்டுகள் எழும்பியுள்ளன. இந்த விவகாரத்தால் தெற்கு
ஆசியாவில் பதற்றமான சூழல் ஏற்படும் என
அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் பத்திரிகையும்
எச்சரித்துள்ளது.
கடந்த
1971 முதல் 2012 வரையிலான காலகட்டத்தில் சீனா, இலங்கைக்கு சுமார்
ரூ.31.08 ஆயிரம் கோடி அளவுக்கு
நிதி உதவிகளை செய்துள்ளது. குறிப்பாக
கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் சுமார் 13 ஆயிரம்
கோடி அளவுக்கு இலங்கைக்கு சீனா நிதி உதவி
அளித்துள்ளது. அருணாச்சல பிரதேசம், லடாக் போன்ற பிரதேசங்களில்
எல்லை பகுதிகளில் இந்தியாவுக்கு தொல்லை கொடுத்து வரும்
சீனா, தற்போது கடல் மார்க்கமாகவும்
நெருக்கடியை தருவதற்காகவே இது போன்ற செயல்களில்
ஈடுபடுவதாக சர்வதேச பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே 5 தமிழக மீனவர்களுக்கு தூக்கு
தண்டனை விதித்த விவகாரத்தில் இலங்கைக்கு
எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், சீன போர்க் கப்பல்
விவகாரமும் சர்ச்சையை ஏற்படுத்தும் என தெரிகிறது.
No comments:
Post a Comment