Tuesday, November 11, 2014

வைகோவுக்கு நெருக்கடி தரும் தொண்டர்கள்....!!பாஜக மீது கடும் அதிருப்தியில் உள்ள மதிமுக தொண்டர்கள், அந்தக் கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என கட்சியின் பொதுச் செயலாளர் வைகோவுக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.

கடந்த மக்களவைத் தேர்தலின்போது தமிழகத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்த முதல் கட்சி மதிமுகதான். அதன்பிறகே தேமுதிக, பாமக, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் இணைந்தன. மோடி அலையால் பெரும் வெற்றி கிடைக்கும் என எதிர்பார்த்த தே.ஜ. கூட்டணிக்கு பெருத்த ஏமாற்றமே கிட்டியது. 2 இடங்களில் மட்டுமே ( பாஜக-1, பாமக-1)வெற்றி பெற்றது. தேமுதிக, மதிமுக ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை.

பிரதமர் மோடி பதவியேற்பு விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சவை அழைத்ததிலேயே மதிமுகவுக்கும் பாஜகவுக்குமான உரசல் ஆரம்பித்தது. இதைத்தொடர்ந்து சமஸ்கிருத வார கொண்டாட்டம், குரு உத்ஸவ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை மத்திய அரசு அறிவித்தபோதும், ராஜபக்சவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சவின் டெல்லி வருகை, இலங்கையைச் சேர்ந்த புத்த துறவி அனகாரிகாவுக்கு இந்திய அரசு அஞ்சல் தலை வெளியிட்டது போன்ற நடவடிக்கைகளை வைகோ கடுமையாக எதிர்த்தார்.

இந்நிலையில், தமிழக 5 மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்த விவகாரத்தில் மோடிக்கு எதிராக வைகோ கடுமையாக பேசினார். இலங்கையுடனான உறவை பாஜக அரசு தொடர்ந் தால், எங்கள் உறவு அறுந்துவிடும் என எச்சரித்தார். இது பாஜக வினரிடையே கோபத்தை ஏற்படுத் தியது. அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா, “மோடியை ஒருமையில் விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பாஜக கூட்டணியில் இருக்க வேண்டுமா, இல்லையா என்பதை வைகோ முடிவு செய்துகொள்ள வேண்டும். மதிமுகவுக்கு வேறு இடம் கிடைத்துவிட்டது. அதனால்தான் வைகோ இப்படி பேசுகிறார் என்றார்.

பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமியும் மதிமுகவை கூட்டணியில் இருந்து வெளியேற்றுமாறு மேலிடத்துக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார். இதனால் அதிருப்தியடைந்துள்ள மதிமுகவினர், கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என வைகோவுக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.

இதுதொடர்பாக மதிமுக மூத்த நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘‘மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக அதிக வாக்கு வங்கியை பெற்றதாக அதன் தலைவர்கள் கூறினர். இதற்கு முக்கிய காரணம் மதிமுக, தேமுதிக போன்ற கூட்டணி கட்சிகள்தான். தமிழர் நலன்தான் மதிமுகவின் கொள்கை. இதை முன்னெடுத்தே எங்கள் இயக்கம் செயல்பட்டு வருகிறது. தமிழர்களுக்கு இலங்கை அரசு தூக்கு தண்டனை விதிக்கும்போது, அதை பார்த்துக்கொண்டு இந்தியா சும்மா இருப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். பாஜக மீதான எங்கள் தொண்டர்களின் அதிருப்தி உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. எனவே, கூட்டணியில் நீடிக்கக்கூடாது என்று வைகோவிடம் வலியுறுத்தி உள்ளோம். மலேசியா சென்றுள்ள அவர் தமிழகம் வந்ததும் இதுபற்றி முடிவெடுப்போம்’’ என்றார்.

உலகத் தமிழ் மாநாட்டில் பங்கேற்பதற்காக மலேசியா சென்றுள்ள வைகோ, நாளை சென்னை திரும்புகிறார். தொண்டர்களின் நெருக்கடி காரணமாக, விரைவில் ஆட்சிமன்றக் குழுவைக் கூட்டி பாஜகவுடனான கூட்டணியில் தொடர்வதா, விலகுவதா என்பது குறித்து முடிவு எடுப்பார் எனத் தெரிகிறது.


No comments:

Post a Comment