ஊழல் குற்றவாளிகளுக்கு சட்டப்படி கடும் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று, ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் 2&ம் ஆண்டு நிறைவு விழாவில் பிரதமர் மன்மோகன்சிங், சோனியா ஆகியோர் உறுதி அளித்தனர்.
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2-வது முறையாக பதவி ஏற்ற 2-வது ஆண்டு நிறைவு விழா நேற்று டெல்லியில் கொண்டாடப்பட்டது.
இதையட்டி, அரசின் செயல்பாடு குறித்து மக்களுக்கு அறிக்கை ஒன்றை பிரதமர் மன்மோகன்சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி ஆகியோர் நேற்று இரவு வெளியிட்டனர். அதில், ஊழல் குற்றம் புரிந்தவர்கள் உரிய சட்டத்தின்படி தண்டிக்கப்படுவார்கள் என்று அவர்கள் உறுதி அளித்து உள்ளனர்.
நாங்கள் இதை வெறும் வார்த்தையால் மட்டும் சொல்லவில்லை; கடுமையான நடவடிக்கை மூலம் செயல்படுத்திக் காட்டுவோம்Ó என்றும் அந்த அறிக்கையில் உறுதி அளிக்கப்பட்டு உள்ளது. அதில் மேலும் கூறி இருப்பதாவது- 2 ஜி ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த் முறைகேடு போன்று மத்திய, மாநில அரசு நிர்வாகத்தில் பல்வேறு ஊழல் புகார்கள் நாட்டு மக்களை கவலை கொள்ள வைத்துள்ளது.
இதில் தவறு செய்தவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கச் செய்ய அரசு உறுதி பூண்டு உள்ளது. அதற்காக பல்வேறு நடவடிக்கைகள் தொடங்கி விட்டன. ஊழலை ஒழிப்பதற்காக மத்திய மந்திரிகள் குழு ஒன்று கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அமைக்கப்பட்டு உள்ளது.
பொது நலன் கருதி அரசு அதிகாரிகளின் சொத்துக் கணக்குகளை வெளியிட வகை செய்யும் சட்ட மசோதாவும், ஐ.நா.சபை மாநாட்டு முடிவுப்படி வெளிநாடுகளில் பணிபுரியும் அதிகாரிகளின் ஊழலை தடுக்க வகை செய்யும் சட்ட மசோதாக்களும் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.
உலக பொருளாதார நெருக்கடி நிலவிய கால கட்டத்திலும் (2004-05 முதல் 2010-11), இதுவரை இல்லாத வகையில் நமது பொருளாதார வளர்ச்சி விகிதம் 8.5 ஆக உயர்ந்து இருந்தது. விவசாய உற்பத்தியிலும் திருப்தி அளிக்கும் நிலை காணப்பட்டது. உணவு பணவீக்கம் கடந்த ஆண்டில் கவலையளிக்கும் விதத்தில் இருந்தது.
அதை சரிசெய்வதற்கான நடவடிக்கைகள் இந்த நிதியாண்டிலும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாட்டில் நக்சலைட் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்கு உறுதியான நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதே நேரத்தில், இதனால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வளர்ச்சித்திட்டங்கள் போதுமான அளவுக்கு இல்லை என்பதையும் உணர்ந்து அந்த குறையை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வெளிநாட்டு பாதுகாப்பை பொருத்தவரை, முப்படைகளை நவீனப்படுத்துவதுடன், உள்நாட்டிலேயே நவீன ஆயுதங்களை தயாரிக்கவும் அரசு கவனம் செலுத்தி வருகிறது. நடப்பு ஆண்டில் டெல்லியில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மீது நடந்த தாக்குதல், வாரணாசியில் நடந்த குறைந்த சக்தி கொண்ட குண்டு வெடிப்பு தவிர தீவிரவாத தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. அத்துடன் கிராமப்புற வளர்ச்சி, கல்வி, ரெயில்வே மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்தும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அறிக்கை வெளியிட்டபின் பிரதமர் மன்மோகன்சிங் நிருபர்களுக்கு அளித்தார். அவருடைய 7 ஆண்டு கால ஆட்சி பற்றி கேட்ட போது, Òகட்சி என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு தலை வணங்குகிறேன்.
வருங்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்நோக்குவோம். மக்களுக்கு சேவை செய்வதே என் பணிÓ என்று மன்மோகன்சிங் பதில் அளித்தார். மந்திரி சபை விரிவாக்கம் எப்போது? என்று கேட்டதற்கு, விரிவுபடுத்தும்போது தெரிவிப்பதாக அவர் பதில் அளித்தார். பேட்டியின் போது அவர் வெளியிட்ட தகவல்கள் வருமாறு-
*ஐக்கிய முற்போக்கு கூட்டணி கடந்த 7 ஆண்டுகளாக அரசியல் ஸ்திரத்தன்மை, சமூக வளர்ச்சி, மத நல்லிணக்கம், பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை வழங்கி உள்ளது.
* நம்மை எதிர்நோக்கியுள்ள முக்கிய சவால், பணவீக்கத்தை கட்டுப்படுத்தி வளர்ச்சி விகிதத்தை நிலைப்படுத்துவதாகும்.
* அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தைப்போல் உணவு உரிமை சட்டம் பாராளுமன்றத்தில் விரைவில் கொண்டு வரப்படும்.
* பயங்கரவாத தீவிரவாத போருக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்று பட வேண்டும்.
* இந்தியா-பாகிஸ்தான் உறவு சீரடைந்து வருகிறது. ஆனால் இந்த நிலை தொடர்ந்து நீடிக்குமா? என்று கூற முடியாது. காஷ்மீர் மாநிலத்தில் அமைதி நிலவுகிறது.
No comments:
Post a Comment