"நாடோடிகள்", "தெனாவெட்டு", "நான் மகான் அல்ல", "சபரி", "கருப்பசாமி குத்தகைகாரர்", "தலைமகன்", "சச்சின்", "போக்கிரி", "மதுரைவீரன்", "பேரரசு", "மிளகாய்", "அந்தரங்கம்", "திரு திரு" உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களில் அப்படி இப்படி நடித்து விட்டார் என்றாலும், குணச்சித்திர நடிகை சிந்துவை "அங்காடித்தெரு" சிந்து என்றால் தான் அனைவருக்கும் தெரியும்! "அங்காடித்தெரு" படத்தில் விலைமாதுவாக இருந்து, அதன்பின் திருந்தி நடைபாதை வியாபாரியான குள்ள மனிதரை திருமணம் செய்து கொண்டு தத்துவார்த்தமாக பேசிடும் சிந்துவை அவ்வளவு எளிதில் யாரால் தான் மறக்க முடியும்...?
"அங்காடித்தெரு" படத்தில் அந்த சின்னம்மாள் பாத்திரத்தில் இயக்குநர் வசந்தபாலன் சாரால் இயல்பாக வாழ்ந்த மாதிரி நடித்திருந்த அவருக்கு, அதன்பின் அடுகடை படுகடையாக எண்ணற்ற திரைப்பட வாய்ப்புகள் வந்து குவிந்துள்ளனவாம். இதனால் மகிழ்ச்சியில் மிதக்கிறார் அம்மணி சிந்து!
பி.வாசு சார் இயக்கத்தில் "புலிவேஷம்", இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரனின் "தேனீர் விடுதி", கவுதம் மேனனின் பெண் உதவியாளர் அஞ்சனா இயக்கியுள்ள "வெப்பம்", ஆபாவாணன் இயக்கத்தில் "பூச்சாண்டி" உள்ளிட்ட ஒரு டஜனுக்கும் மேற்பட்ட படங்களில் தற்போது நடித்து வரும் சிந்து, இந்த படங்கள் வெளிவந்தால் நிச்சயம் பெரியளவில் பேசப்படுவேன் என்கிறார் நம்பிக்கையுடன்!
புலிவேஷம் படத்தில் சின்ன அளவில் வில்லி வேஷம் கட்டியிருக்கும் சிந்துவுக்கு மெயின் வில்லியாக ஒரு படம் முழுக்க படையப்பா நீலாம்பரி மாதிரி பவனி வரவேண்டும் என்பது லட்சியம்! அது நிச்சயம் நிறைவேறும் என வாழ்த்துவோம்!

No comments:
Post a Comment