19.6.2011 அன்று திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆற்றிய உரை :
’’மாண்புமிகு அமைச்சர் பெருமக்களே!
இந்த இனிய விழாவில் வரவேற்புரை ஆற்றிய திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் திருமதி ஜெயஸ்ரீ முரளிதரன் அவர்களே!
முன்னிலை உரை ஆற்றிய மாண்புமிகு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர்
திரு. சிவபதி அவர்களே!
நன்றியுரை ஆற்றவுள்ள மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி . பேச்சியம்மாள் அவர்களே!
நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே!
உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளே!
வணக்கத்திற்குரிய பெரியோர்களே!
என்னை வாழ வைக்கும் தெய்வங்களாகிய தாய்மார்களே!
இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் ரத்தத்தின் ரத்தமான, என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகளே!
வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதாகவும், மிகவும் புகழ் பெற்றதாகவும் விளங்குவதும், “திருவரங்க திருப்பதி”, “பூலோக வைகுண்டம்” எனப் போற்றப்படும் அருள்மிகு ரங்கநாதர் திருக்கோயிலையும்; பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றாக விளங்கும், திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோயிலையும் தன்னகத்தே கொண்டுள்ளதுமான ஸ்ரீரங்கம் தொகுதி வாழ் மக்களுக்கு எனது நன்றி கலந்த வணக்கத்தை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த ஸ்ரீரங்கம் தொகுதியிலே வாக்கு சேகரிக்க நான் வந்த போது, நீங்கள் அன்போடும், கனிவோடும் எனக்கு வரவேற்பு அளித்தமைக்கும்;
அதற்கேற்றாற்போல், நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில் என்னை இந்தத் தொகுதியிலிருந்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தமைக்கும்; இந்த வெற்றியின் மூலம் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மூன்றாவது முறையாக பொறுப்பேற்கக் கூடிய வாய்ப்பினை எனக்கு உருவாக்கித் தந்தமைக்கும், என் நெஞ்சம் நிறைந்த நன்றியினை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
வெற்றி பெற்ற உடனேயே உங்களையெல்லாம் நேரில் சந்தித்து நன்றி நவில வேண்டும் என்று நான் விரும்பினாலும், புதிய அமைச்சரவை அமைப்பு, பின் பதவியேற்பு; சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு; சட்டமன்றப் பேரவைத் தலைவர் மற்றும் சட்டமன்றப் பேரவைத் துணைத் தலைவர் தேர்தல்; ஆளுநர் உரை; சட்டமன்ற கூட்டத் தொடர்; பாரதப் பிரதமருடனான சந்திப்பு என பல்வேறு அலுவலகப் பணிகள் தொடர்ந்து இருந்ததன் காரணமாக, என்னால் இதற்கு முன் வர இயலவில்லை என்பதை உங்களுக்கு எடுத்துக் கூற கடமைப் பட்டிருக்கிறேன்.
இந்தத் தேர்தலின் மூலம், பண பலத்தை முறியடித்து உங்களுடைய பலத்தை நிரூபித்து இருக்கிறீர்கள். தமிழக மக்களை விலை பேசி, அதன் மூலம் தமிழ்நாட்டையே விலைக்கு வாங்கி விடலாம் என்று நினைத்தவர்களின் கனவு தகர்த்தெறியப்பட்டுள்ளது. பணத்திற்கு அடிபணியாமல், தமிழகத்தில் ஜனநாயகம் தழைத்தோங்க நீங்கள் வழி செய்திருக்கிறீர்கள். இந்தத் தருணத்தில், ஒரு சிறிய கதையை சுட்டிக் காட்டுவது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன்.
ஒரு சீடன் தன்னுடைய குருவிடம், “மனிதனுடைய மதிப்பு எவ்வளவு? என்பதை நீங்கள் தெளிவுபடுத்த வேண்டும்” என்று கேட்டான்.
அதற்கு குரு, தன்னிடம் உள்ள ஒரு வைரக் கல்லை கொடுத்து “இதை கடை வீதிக்கு எடுத்துச் சென்று, பல வியாபாரிகளிடம் காண்பித்து, இதனுடைய மதிப்பு என்ன என்பதை அறிந்து வா” என்றார். “எக்காரணத்தைக் கொண்டும் இதை விற்கக் கூடாது” என்றும் அறிவுறுத்தினார்.
சீடனும் கடை வீதிக்குச் சென்றான். ஒரு ஆரஞ்சு பழ வியாபாரியிடம் வைரக் கல்லை காண்பித்து, “இதை நான் விற்க விரும்புகிறேன். நீங்கள் என்ன விலை கொடுப்பீர்கள்?” என்று கேட்டான். “இரண்டு ஆரஞ்சு பழங்களை கொடுக்கிறேன்” என்றார் அந்த பழ வியாபாரி.
பின்னர், உருளைக்கிழங்கு வியாபாரியிடம், அந்த வைரக் கல்லை காண்பித்து, “இதை நான் விற்க விரும்புகிறேன். நீங்கள் என்ன விலை கொடுப்பீர்கள்?” என்று கேட்டான். “நான்கு கிலோ உருளைக் கிழங்கு தருகிறேன்” என்று அந்த வியாபாரி தெரிவித்தார்.
இதே போன்று, மளிகைக் கடை வியாபாரியிடம் சென்று கேட்டான். அவர் கொஞ்சம் அரிசியும், பருப்பும் தருவதாக கூறினார்.
தங்க நகை வியாபாரியோ ஆயிரம் ரூபாய் கொடுப்பதாகக் கூறினார்.
கடைசியாக, பெரிய வைர வியாபாரியிடம் சென்று அந்த வைரக் கல்லைக் காண்பித்தான். அவர் பரிசோதனை செய்து, “இது நல்ல வைரம். இதற்கு எவ்வளவு விலை வேண்டுமானாலும் கொடுக்கலாம்” என்றார்.
சீடனுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. தன் குருவிடம் சென்று, நடந்த எல்லா நிகழ்ச்சிகளையும் எடுத்துக் கூறினான். அவர் புன்னகை செய்தபடியே, “ஒரு மனிதன் தன்னை இரண்டு ஆரஞ்சு பழங்களுக்கும் விற்றுக் கொள்ளலாம். நான்கு கிலோ உருளைக் கிழங்கிற்கும் விற்றுக் கொள்ளலாம். கொஞ்சம் அரிசி, பருப்புக்கும் விற்றுக் கொள்ளலாம். ஆயிரம் ரூபாய்க்கும் விற்றுக் கொள்ளலாம். ஆனால், மனிதன் கிடைத்தற்கரிய வைரம்” என்று கூறினார் குரு.
இதை நீங்கள் இந்தத் தேர்தலின் மூலம் நிரூபித்து இருக்கிறீர்கள். இதன் மூலம், மக்களின் சக்தியையும், விலை மதிப்பற்ற தன்மையையும், இந்த நாட்டிற்கு பறை சாற்றியிருக்கிறீர்கள்.
உங்களை விலை கொடுத்து வாங்கிவிடலாம் என நினைத்து, உங்களுடைய மதிப்பை குறைத்து எடை போட்டவர்களை அடையாளம் கண்டு, அவர்களை அப்புறப்படுத்தி இருக்கிறீர்கள். “யாருக்கும், எதற்கும் அடிமையாக மாட்டோம்; அடிமையாக்க நினைப்பவர்களை, அப்புறப் படுத்துவோம்” என்பதை நீங்கள் உங்கள் வாக்குகள் மூலம் உறுதி செய்துள்ளீர்கள். உங்களின் வாக்குகள் விலை மதிப்பற்றவை; நீங்கள் கிடைத்தற்கரிய வைரம் என்பது இந்தத் தேர்தலின் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது. உங்கள் கடமையை செவ்வனே செய்திருக்கிறீர்கள்.
இதற்காக மீண்டும் ஒரு முறை எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று உரையாற்றினார்.

No comments:
Post a Comment