Monday, October 27, 2014

ஆதார் அட்டை விவகாரத்தில் பல்டி

ஆதார்' அட்டை விவகாரத்தில், மத்திய உள்துறை அமைச்சகம், தன் முந்தைய நிலைப்பாட்டை திடீரென மாற்றியுள்ளது. இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்தும்படி, மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ள உள்துறை அமைச்சகம், 'ஆதார் அட்டையை, எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் ஏற்க தக்க ஆவணமாக கருதலாம்' என்றும் கூறியுள்ளது.

கடந்த, காங்., தலைமையிலான, .மு., கூட்டணி ஆட்சி காலத்தில், 2009ல், ஆதார் அடையாள அட்டை திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காகதனி ஆணையமும் அமைக்கப்பட்டது.

மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், குடிமக்களின் கைவிரல் ரேகை (பயோமெட்ரிக்), கருவிழி, முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இந்த அட்டையில் இடம் பெற்றிருக்கும். இந்த திட்டத்தின் கீழ், குடிமக்கள் ஒவ்வொருவருக்கும், ஒரு பிரத்யேக அடையாள எண் கொடுக்கப்படும்.ஆனால், அப்போதைய உள்துறை அமைச்சகமும், எதிர்க்கட்சியாக இருந்த பா..,வும், இந்த திட்டத்தின் நம்பகத் தன்மை குறித்து கவலை தெரிவித்தன.குறிப்பாக, முந்தைய .மு., கூட்டணி ஆட்சி காலத்தில், 'ஆதார் அடையாள அட்டையை பெறுவதற்காக, பொதுமக்கள் தரும் ஆவணங்களின் உண்மைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும். ஏதாவது ஒரு ஆவணத்தைசமர்ப்பித்தால், அதை ஆதாரமாக வைத்து ஆதார் அட்டை வழங்கக் கூடாது' என, உள்துறை அமைச்சகம் சார்பில் கவலை தெரிவிக்கப்பட்டது.

மேலும், ஆதார் அடையாள அட்டை வழங்கும் ஆணையத்தின் தகவல் தொகுப்புகளை, வேறு யாராவது திருடினால் ஏற்படும் விளைவுகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும், அப்போதைய உள்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. சுஷில் குமார் ஷிண்டே, சிதம்பரம் இந்த காலங்களில் உள்துறை அமைச்சர்களாக இருந்தனர்.கடந்த லோக்சபா தேர்தலின்போது, பிரசாரம் செய்த பா.., தலைவர்களும், ஆதார் அடையாள அட்டை திட்டத்தை கடுமையாக விமர்சித்தனர். 'வங்கதேசத்தில் இருந்து, சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் குடிபெயர்ந்தவர்களுக்கு எல்லாம், ஆதார் அடையாள அட்டை கொடுக்கப்படுகிறது. இது, உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் திட்டம்' என, விமர்சிக்கப்பட்டது.

இந்நிலையில், பா.., தலைமையிலான புதிய அரசு பதவியேற்றதும், இந்த திட்டம் ரத்து செய்யப்படும் என, தகவல் வெளியாகியது. இதற்கிடையே, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோரை, ஆதார் அடையாள அட்டை வழங்கும் ஆணையத்தின் தலைவராக இருந்த நந்தன் நீல்கேனி சந்தித்து, திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார். இதையடுத்து, மத்திய அரசின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில், அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில், ஆதார் அடையாள அட்டை திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:ஆதார் அடையாள அட்டை திட்டத்தின் கீழ், ஒரு நபருக்கு ஒரு எண் மட்டுமே ஒதுக்கப்படுகிறது. இதனால், சம்பந்தபட்ட நபரின் உலகளாவிய அடையாள ஆவணமாக இதை கருதலாம். சம்பந்தபட்ட நபரின் கைவிரல் ரேகை, கருவிழி உள்ளிட்ட விவரங்களும் துல்லியமாக பதிவு செய்யப்படுகின்றன. எனவே, ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை சிறந்த அடையாள குறியீடாக ஏற்கலாம்.மக்களுக்கு தேவையான அரசு சேவைகளையும், திட்டங்களையும் செயல்படுத்துவதற்கு, இதை முழுமையான ஆவணமாக கருதலாம். இதில், ஏமாற்று, மோசடி, போலி போன்ற விஷயங்களுக்கு வாய்ப்பில்லை.


மக்களுக்கு பயன்:


ஆதார் அடையாள அட்டையை எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் எளிதில் ஏற்க தக்க ஆவணமாகவும் கருதலாம். அரசின் பல்வேறு திட்டங்களின் பயன்களை, பொதுமக்கள் ஆதார் அட்டை மூலமாகவே பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.அரசின் பலன்களை ஏழை மக்கள் எளிதில் பெறுவதற்கு இந்த அட்டை பெரிதும் உதவும். ஆதார் அட்டை மூலம், ஒருவரின் அடையாளத்தை எளிதில் உறுதி செய்ய முடியும்.எனவே, இந்த திட்டத்தை தீவிரமாக செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு, அந்த கடிதத்தில் உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

ஆதார் அட்டை விவகாரத்தில், மத்திய உள்துறை அமைச்சகம், தன் முந்தைய நிலையை முற்றிலும் மாற்றியுள்ளது, மத்திய அரசு வட்டாரத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, 'வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இடம் பெயர்ந்தவர்கள் ஆதார் அட்டையை எளிதில் பெறுவதாக கூறிய பா.., தலைவர்கள், தற்போது இதற்கு என்ன விளக்கம் அளிக்கப் போகின்றனர்' என, எதிர்க்கட்சிகள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.


67 கோடி பேருக்கு...


* ஆதார் அடையாள அட்டை திட்டம், 2009ல், அறிவிக்கப்பட்டது. 2010ல், இதற்கான ஆணையம் அமைக்கப்பட்டு, இன்போசிஸ் நிறுவனத்தை சேர்ந்த நந்தன் நீல்கேனி, அதன் தலைவராக நியமிக்கப்பட்டார்

*இந்த திட்டத்துக்காக இதுவரை, 4,906 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

*இதுவரை, நாடு முழுவதும், 67.38 கோடி பேருக்கு இந்த அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதுவரை, நான்கு கட்ட திட்டங்கள் நிறைவேற்றி முடிக்கப்பட்டுள்ளன.

*பா.., தலைமையிலான புதிய அரசு, இந்த ஆண்டு பட்ஜெட்டில், ஐந்தாம் கட்ட பணிகளை மேற்கொள்வதற்காக, 2,039 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.

*.பி., பீகார், சத்தீஸ்கர், உத்தரகண்ட் போன்ற மாநிலங்களில் ஐந்தாம் கட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

*'அடுத்த சில ஆண்டுகளுக்குள், நாடு முழுவதும் உள்ள அனைவருக்கும் ஆதார் அடையாள அட்டை வழங்க வேண்டும்'
என, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

*தமிழகத்தை பொறுத்தவரை, இதுவரை ஆதார் அட்டைக்கு பதிவு செய்யாதவர்களுக்காக, அடுத்த மாதம் முதல், நிரந்தர முகாம்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 'பெல்' நிறுவனம் இந்த பணிகளை மேற்கொள்கிறது.

*டில்லி, திகார் சிறையில் உள்ள கைதிகளுக்கும் ஆதார் அட்டை வழங்குவதற்கான நடவடிக்கைகள் துவங்கியுள்ளன.


என்.பி.ஆர்., திட்டம் என்னாச்சு?குடிமக்களை பற்றிய விவரங்களையும், அடையாளத்தையும் உறுதி செய்வதற்காக, ஆதார் அட்டை வழங்கப்பட்டு வரும் நிலையில், ஏற்கனவே, தேசிய மக்கள் தொகை பதிவேடு எனப்படும், என்.பி.ஆர்., திட்டமும் செயல்படுத்தப்பட்டது. ஆதார் அட்டை வழங்குவதற்காக தனி ஆணையம் அமைக்கப்பட்ட நிலையில், என்.பி.ஆர்., திட்டம், மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய பதிவாளர் ஜெனரல் மூலம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்திலும், பொதுமக்களின் கைவிரல் ரேகை, கருவிழி, புகைப்படம், முகவரி ஆகிய விவரங்கள் பதிவு செய்யப்பட்டன.இந்த இரண்டு திட்டங்களில் எது அதிகாரப்பூர்வமான திட்டம் என்பதில் மக்களிடையே குழப்பம் நீடிக்கிறது. உதாரணமாக, .பி.,யில், என்.பி.ஆர்., திட்டம் தான் நடைமுறையில் உள்ளது. ஆனால், டில்லியில், இரண்டு திட்டங்களுமே செயல்படுத்தப்படுகின்றன. ஆனாலும், சமீபகாலமாக, என்.பி.ஆர்., திட்டம் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படுவது இல்லை. இதன் பணிகள் முடங்கி விட்டதா என்பது குறித்த தகவலும் இல்லை.


ஆதார் அவசியமா?


'சமையல் காஸ் சிலிண்டர் உட்பட, அரசின் நேரடி மானிய திட்டங்களுக்கு ஆதார் அட்டை கட்டாயம் என, முந்தைய மத்திய அரசு தெரிவித்தது. இந்த விவகாரம் சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றதை அடுத்து, 'அரசின் மானிய திட்டங்களை பெறுவதற்கு ஆதார் அட்டை அவசியமில்லை. இதற்காக, ஆதார் அடையாள அட்டையை தரும்படி பொதுமக்களை கட்டாயப்படுத்த கூடாது' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இந்நிலையில், 'அரசின் நேரடி மானிய திட்டங்கள், ஆதார் அடையாள அட்டை திட்டம் மூலம் செயல்படுத்தப்படும்' என, மத்திய அரசு தற்போது தெரிவித்துள்ளது, பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


No comments:

Post a Comment