தமிழ் சினிமாவை தெய்வத்துக்கு நிகராகக் கொண்டாடியவர்கள் தமிழர்கள். முதல் ஷாட்டை கோவிலில்
வைப்பதும், குறைந்தபட்சம் கோவில் கோபுரத்தை யாவது
காட்டுவதும் பல ஆண்டுகள் வரை
மரபாக இருந்தது. கடவுளை நம்பாத ஆத்திகர்கள்
"வெற்றி வெற்றி", "இனி நல்லதே நடக்கும்"
என்ற பாசிட்டிவான வசனங்களோடு படத்தை துவக்கினார்கள். ஆனால்
சினிமாவிற்குள் டிஜிட்டல் வந்தபிறகு எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது.
புதுமை செய்யப் போகிறேன்
என்று மகத்தான சினிமா ஊடகத்தை
கொச்சைப்படுத்தி வருகிறார்கள். கின்னஸ் சாதனை படைக்கப்
போகிறேன், லிம்கா சாதனைப் புத்தகத்தில்
இடம் பெற வேண்டும், உலக
சினிமாவில் முதன் முறையாக என்று
பலபேர் கிளம்பியிருக்கிறார்கள்.
ஒரு சவப்பெட்டிக்குள் வைத்து உயிருடன் புதைக்கப்பட்ட
ஒருவர் அதிலிருந்து எப்படி தப்பித்தார் என்பதைச்
சொன்னது ஒரு ஆங்கிலப் படம்.
பாறை இடுக்கிற்குள் கால் மாட்டிக் கொண்டதால்
பல மணி நேரம் போராடி
ஜெயித்த ஒருவரைப் பற்றி வந்தது ஒரு
ஹாலிவுட் படம். இவை வித்தியாசமான
முயற்சிகள் மட்டு மல்ல, உண்மைச்
சம்பவங்களும்கூட.
இதையே காப்பியடித்து இங்கு மூன்று படங்கள்
இதே பாணியில் தயாராகிக் கொண்டிருக்கின்றன. இது தவிர ஒரே
ஷாட்டில் படமெடுக்கிறார்கள். 4 மணி நேரத்துக்குள் படம்
எடுக்கிறேன் என்று கிளம்பியிருக்கிறார்கள்.
ஒருவர்
மட்டுமே நடித்து, இயக்கி, தயாரித்து, இருக்கிற
அத்தனை வேலைகளையும் செய்து படம் எடுக்கிறேன்
என்கிறார்கள். குபீர் என்று ஒரு
படம் கதையே இல்லாமல் விடிய
விடிய நான்கு பேர் தண்ணியடிப்பதை
மட்டும் எடுத்து அதையும் காசு
கொடுத்து இரண்டு மணி நேரம்
உட்கார்ந்து பாருங்கள் என்கிறார்கள்.
இந்த சாதனை முயற்சிகள் எதற்காக
என்பதுதான் கேள்வி. இதுபோன்ற சாதனைப்
படங்கள் எதையும் ஜனங்கள் ஏற்பதில்லை
என்பது வேறு விஷயம். இதன்
மூலம் அவர்கள் சாதிக்கப் போவது
என்ன? எங்கோ வெளி நாட்டில்
100 வார்த்தைகளில் ஒரு புத்தகத்தில் இடம்பெறும்
ஒரு குறிப்பால் இவர்களுக்கு என்ன லாபம் வந்துவிடப்போகிறது?
அவர்கள் படம் என்ன மாற்றத்தை
கொண்டு வந்துவிடப்போகிறது? பின்பு எதற்காக பல
பேருடைய உழைப்பு, பணம் இவற்றை சாதனை
படைக்கப் போகிறோம் என்று வீணாக்குகிறார்கள் என்று
தெரியவில்லை.
சமூகத்துக்குத்
தேவையான நல்ல கருத்துக்களை விதைக்க
வேண்டிய சினிமாவை, அல்லது உழைக்கும் மக்களுக்கு
இரண்டரை மணி நேரம் சந்தோஷத்தை
தரவேண்டிய சினிமாவை இப்படி சாதனை என்ற
பெயரில் சீரழிப்பதும், கொச்சைப்படுத்து வதும் என்ன நியாயம்?
இது சாதனை என்று முடிவு
செய்து வைத்துக் கொண்டு செய்வது எதுவும்
சாதனையாகாது. நாம் செய்கிற செயல்
மற்றவர்களுக்கு சாதனையாகப் படவேண்டும். அதுதான் சாதனை.
புராணங்களைக்
காட்டிக் கொண்டிருந்த சினிமாவை சமூகத்தைப் பார்க்க வைத்த 'பராசக்தி'
சாதனை. ஸ்டூடியோக்களுக்குள் முடங்கிக் கிடந்த சினிமாவை கிராமத்துக்கு
அழைத்துச் சென்ற '16 வயதினிலே' சாதனை. வசனங் களைக்
குறைத்து காட்சியை வலிமைப்படுத்திய 'உதிரிப்பூக்கள்' சாதனை.
ஐந்தரை
அடி மனிதன் மூன்றடி குள்ளனாக
நடித்த 'அபூர்வ சகோதரர்கள்' சாதனை.
ஒரே நடிகன் பத்து வேடங்கள்
ஏற்ற 'தசாவதாரம்' சாதனை. இப்படி பல
சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன தமிழ் சினிமாவில். அப்படியொரு
சாதனையை முயற்சித்துப் பாருங்களேன்.
No comments:
Post a Comment