“ரெயில்வே துறையை
மேம்படுத்த மாநில அரசின் ஒத்துழைப்பு அவசியம்” என பெங்களூர் ரெயில் நிலையத்தில் நடைபெற்ற
இணையதள சேவை துவக்க விழாவில் ரெயில்வே மந்திரி சதானந்த கவுடா கூறினார்.
பெங்களூர் சிட்டி
ரெயில் நிலையத்தில் நேற்று ‘வை–பை‘ இலவச இணையதள சேவை தொடக்க விழாவும், ‘சுகமங்களம்
யாத்ரா‘
எனும் சுற்றுலா ரெயில் சேவை தொடக்க விழாவும் நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய ரெயில்வே
மந்திரி சதானந்த கவுடா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:–
‘வை–பை‘ இணையதள சேவை
“ரெயில்
போக்குவரத்து 150 ஆண்டு பழமையானது. தினமும் 2.3 கோடி மக்கள் இதில் பயனம் செய்கிறார்கள்.
இந்த சிறப்பு மிக்க ரெயில்வே துறையை மேம்படுத்த புத்துணர்ச்சியூட்டும் வகையில் பல்வேறு
தொழில்நுட்ப வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. தொழில்நுட்ப நகரமான பெங்களூரில் வை–பை சேவை இன்று(நேற்று)
முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெங்களூர் சிட்டி ரெயில் நிலையத்திற்கு வந்து
செல்லும் பயணிகள் இலவசமாக இணையதள வசதியை பெற முடியும்.
ஆன்–லைனில் தட்கல் முறையில்
டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் அதிகரித்து வருகின்றனர். அவர்களின் வசதிக்காக ரெயில்வே
துறையில் தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதிகள் மூலம் இனி தட்கல் முறையில்
ஒரே நேரத்தில் 7 ஆயிரத்து 200 பேர் உடனடியாக டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
2 லட்சம் பேர் தொடர்பில் இருக்கலாம்.
சுற்றுலா ரெயில்
அதேபோல சுற்றுலா
பயணிகளின் வசதிக்காக யஷ்வந்த்பூரில் இருந்து செல்லும் வகையில் “சுகமங்களம் யாத்ரா” எனும் சுற்றுலா ரெயில்
சேவையும் இன்று(நேற்று) முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் பிஜாப்பூர், சோலாப்பூர்,
பந்தர்பூர், அவுரங்காபாத், சீரடி, பாதாமி மற்றும் ஹம்பி ஆகிய இடங்களில் உள்ள சுற்றுலா
இடங்களை பயணிகள் கண்டுகளிக்கும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாநில அரசின் ஒத்துழைப்பு
மேலும், வரும்
நவம்பர் மாதத்தில் பெங்களூரில் இருந்து புதிய வழித்தடங்களில் சில ரெயில் சேவையும் தொடங்கப்பட
உள்ளது. அதேபோல ரெயில் நிலையங்களை சுத்தமாக வைத்திருக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கு பயணிகளும் ஒத்துழைப்பு தரவேண்டும்.
ரெயில்வே பட்ஜட்டில்
அறிவித்த 80 சதவீத திட்ட பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. மீதமுள்ள 20 சதவீத பணிகள் விரைவில்
மேற்கொள்ளப்படும். ரெயில்வேயில் பாதுகாப்பான பயணம், பயணிகளுக்கு பாதுகாப்பு, சேவை ஆகிய
3 முக்கிய பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பாதுகாப்பு பணிக்காக 4 ஆயிரம்
பெண்கள், 17 ஆண்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.
கர்நாடகத்தில்
ரெயில்வே பணிகளை விரிவு படுத்த மாநில அரசின் பங்களிப்பும் அவசியம். இதற்கு 50 சதவீத
நிதி உதவியும் இடவசதியும் மாநில அரசு ஏற்பாடு செய்து தரவேண்டும். இதற்கான ஒத்துழைப்பு
சரிவர கிடைக்கவில்லை. அதனால் சில இடங்களில் பணிகள் நிறைவு பெற தாமதம் ஏற்படுகிறது.”
இவ்வாறு ரெயில்வே
மந்திரி சதானந்த கவுடா கூறினார்.
புறநகர் ரெயில்
விழாவில் கலந்து
கொண்ட மத்திய உரம் மற்றும் ரசாயண மந்திரி அனந்த்குமார் பேசுகையில், “பெங்களூரின் போக்குவரத்து
நெரிசலை குறைக்க கெங்கேரி, ராம்நகர் ஆகிய புறநகர்களுக்கு செல்லும் ரெயில் சேவைகளை அதிகப்படுத்த
வேண்டும்”
என்றார்.
அதேபோல மாநில உணவு
மற்றும் பொது விநியோகம், நுகர்வோர் விவகார மந்திரி தினேஷ் குண்டு ராவ் பேசுகையில்,
“மைசூரில் இருந்து பெங்களூர் வழியாக சென்னை செல்லும் ரெயில்கள் ஒயிட்பீல்டு, கே.ஆர்.புரம்
ஆகிய நிறுத்தங்களிலும் நின்று செல்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இதன் மூலம் பயணிகளின்
அலைச்சல் குறையும்”
என்று கேட்டுக்கொண்டார்.
No comments:
Post a Comment