ஈரானில்
கற்பழிக்க முயன்றவரை கொலை செய்ததற்காக தூக்கிலிடப்பட்ட
ரேஹானே ஜப்பாரி எனும் பெண்
தனது தாய்க்கு இறுதியாக உருக்கமான செய்தி ஒன்றை தெரிவித்துள்ளார்.
ஈரானை சேர்ந்த ரேஹானே என்பவர்
2009 ஆம் ஆண்டு தன்னை கற்பழிக்க
முயன்ற புலனாய்வுத் துறை அதிகாரியை கொலை
செய்தார். இதனால் கொலை குற்றவாளியாக
ஈரானிய அரசு கடந்த சனிக்கிழமை
அவரை தூக்கிலிட்டது.
இந்நிலையில்
அவரது தாயாருக்கு தெரிவித்த கடைசி செய்தி குரல்
வடிவில் வெளியாகியுள்ளது. அது அனைவரது மனதையும்
கரையச் செய்வதாக உள்ளது.
அதில்,
"அன்பிற்கினிய ஷோலே, நான் எனது
வாழ்க்கைப் புத்தகத்தின் கடைசிப் பக்கத்தை அடைந்துவிட்டேன்
என்று நீயாகவே ஏன் எனக்கு
தெரிவிக்கவில்லை என்பது எனக்கு வருத்தமளிக்கிறது.
எனக்கு இந்த விஷயம் தெரிய
வேண்டுமென உனக்கு தோன்றவில்லையா? நீ
சோகமாக இருப்பது என்னை எவ்வளவு வெட்கமடைய
செய்கிறது என்பது உனக்கு தெரியுமா?
உனக்கோ
அல்லது தந்தையினது கரங்களையோ முத்தமிடுவதற்கு நீங்கள் ஏன் எனக்கு
எந்த வாய்ப்பையும் வழங்கவில்லை?
19 வருடங்கள்
வாழ்வதற்கு எனக்கு இந்த உலகம்
அனுமதித்திருக்கிறது. அன்று இரவு நான்
கொல்லப்பட்டிருக்க வெண்டும். என்னுடைய உடல் இந்த நகரத்தின்
ஏதோ ஒரு ஓரத்தில் வீசப்பட்டிருக்கும்.
நானும் கற்பழிக்கப்பட்டேன் என உனக்கு தெரிந்திருக்கும்.
என்னை கற்பழித்தவனை கண்டுபிடிக்க முடியாமலேயே போயிருக்கும். ஏனென்றால் நம்மிடம் இல்லாத பலமும், பணமும்
அவர்களிடம் உள்ளதே. அதன்பின் இதை
நினைத்து நீ அவமானப்பட்டு சில
ஆண்டுகள் கழித்து இறந்து போயிருப்பாய்.
ஆனால்,
இப்போது கதை மாறியுள்ளது. என்
உடல் சாலையோரத்தில் வீசப்படவில்லை. சிறை கல்லறையில் எனக்காக
இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
உங்களுக்கு
நினைவிருக்கிறதா நாங்கள் நடந்துகொள்ளும் முறை
குறித்து நீங்கள் குறிப்பிட்டது? உங்களது
அனுபவம் தவறானது. இந்த நிகழ்ச்சி நடந்ததற்குப்
பிறகு, நான் கற்றது எனக்கு
எந்த உதவியையும் செய்யவில்லை. நீதிமன்றம் என்னை இரக்கமில்லா கொலைகாரியாகவும்,
கொடுமையான குற்றவாளியாகவும் கருதுகிறது. என்னிடம் கண்ணீர் இல்லை. பிச்சை
எடுக்கவுமில்லை. நான் சட்டத்தை நம்பியதிலிருந்து
எனது தலைகுணிந்து அழவில்லை.
நீங்கள்
பார்த்திருக்கிறீர்கள், நான் கொசுக்களைக் கூட
கொன்றதில்லை. கரப்பான்பூச்சிகளை அதன் உணர் கொம்புகளை
பிடித்து மெதுவாகத்தான் வெளியேற்றி இருக்கிறேன். தற்போது நான் திட்டமிட்ட
கொலைகாரியாக இருக்கிறேன்.
எப்படியாகிலும்
சரி, நான் இறப்பதற்கு முன்
உங்களை ஒன்று வேண்டுகிறேன். உங்களால்
முடிந்தவரை எந்த வழியிலாவது, எனக்காக
நீங்கள் இதை செய்ய வேண்டும்.
ஒருவேளை இந்த உலகத்திடமிருந்து, இந்த
தேசத்திலிருந்து, உங்களிடமிருந்து நான் வேண்டிக்கொள்ளும் ஒன்றாக
இதுதான் இருக்கும். இதற்காக உங்களுக்கு நேரம்
தேவைப்படும் என்பது எனக்குத் தெரியும்.
நீதிமன்றத்தில் என்னுடைய வேண்டுகோளை நீங்கள் சொல்ல வேண்டும்
என்று விரும்புகிறேன். சிறைத்தலைவர் ஒப்புதலோடு உங்களுக்கு என்னால் சிறையிலிருந்து எந்த
கடிதத்தையும் எழுத முடியாது. ஆகையால்
மீண்டும் என்னால் நீங்கள் பாதிப்படையக்கூடும்.
அன்பு ஷோலே, நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பதற்காக
அழக்கூடாது. என்னுடைய தாயே, எனது சிந்தனை
மாறிவிட்டது. அதற்காக நீங்கள் வருத்தப்படவேண்டாம்.
என்னுடைய வார்த்தைகள் முடிவில்லாதது.
எனது அன்பிற்கினிய தாயே, அன்பு ஷோலே,
எனது வாழ்வை விட நீயே
எனக்கு விருப்பமானதாய் இருந்தாய். நான் மண்ணில் அழுகிப்போக
விரும்பவில்லை. எனது கண்களோ, எனது
இளமையான இதயமோ வெறும் புழுதிக்குள்
எரியப்பட வேண்டாம். நான் தூக்கிலிடப்பட்டதற்கு பின் எனது
உடலில் இருந்து பிறருக்கு உபயோகப்படும்
அனைத்து உறுப்புகளையும் அகற்றி அதனை தேவைப்படுபவர்களுக்கு
பரிசாக அளித்துவிடுமாறு கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன். என்
உடலில் இருந்து அகற்றப்பட்ட உறுப்புகளை
பெற்றவர்களுக்கு நான் யார் என்பதோ,
என் பெயரோ எதுவும் தெரியவேண்டாம்.
அவர்கள் எனக்கு பூச்செண்டு தரவும்
வேண்டாம், எனக்காக பிரார்த்தனையும் செய்ய
வேண்டாம்.
நான் எனது இதயத்தின் அடியாழத்திலிருந்து
சொல்கிறேன், எனக்கு கல்லறை வேண்டாம்.
எனக்காக நீங்கள் அங்கு வந்து
வேதனைப்பட்டு அழத் தேவையில்லை. எனக்காக
கருப்புத் துணியால் உன்னை மூடிக்கொள்வதை நான்
விரும்பவில்லை. என்னுடைய கடினமான நாட்களை மறந்து
விடுவது நல்லது. 'காற்று என்னை எடுத்து
செல்லட்டும்'."
இவ்வாறு
ரேஹானே ஜப்பாரி தனது தாயாரிடம்
தன்னுடைய கடைசி செய்தியை தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment