சமச்சீர் கல்வித் திட்டம் மாணவர்களின் தரத்தை உயர்த்துவதாக இல்லை என்று தெரிவித்துள்ள தமிழக அமைச்சரவை இதுகுறித்து மறு பரிசீலனை செய்ய முடிவெடுத்துள்ளது. இதன் காரணமாக ஜூன் 1ம் தேதி திறப்பதாக இருந்த பள்ளிக்கூடங்களை ஜூன் 15ம் தேதி திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவையின் முடிவைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஜூன் 15ம் தேதியன்றுதான் பள்ளிகள் திறக்கப்படும்.
முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று நடந்தது. இன்றைய கூட்டத்தில் பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
தலைமைச் செயலாளர், பல்துறைச் செயலாளர்கள் இதில் கலந்து கொண்டனர். இதில் சமச்சீர் கல்வித் திட்டம் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது. அப்போது தற்போதைய சமச்சீர் கல்வித் திட்டம் மாணவர்களின் தரத்தை உயர்த்தும் வகையில் இல்லை என்பதால் இதை மறு பரிசீலனை செய்ய தீர்மானிக்கப்பட்டது.
இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வாக்காளர்களுக்கு நன்றி
- அமைச்சரவைக் கூட்டத்தின் முதல் தீர்மானமாக ஜெயலலிதா மீது நம்பிக்கை வைத்து அவரது தலைமையில் ஆட்சி அமைய வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மே 6ல் மேட்டூர் அணை திறப்பு
- காவிரி டெல்டா பாசன விவசாயிகள் குறுவைப் பாசனத்தை உரிய காலத்தில் மேற்கொள்ள மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 6-ம் தேதி தண்ணீர் திறந்துவிட அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இந்தியா குடியரசு ஆன பின்னர் ஜூன் 12-ம் தேதிக்கு முன்னதாக தண்ணீர் திறந்துவிடப்படுவது இதுதான் முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
சமச்சீர் கல்வித் திட்டம் நிறுத்தம்
தற்போதைய சமச்சீர் கல்வி பாடத்திட்டம் ஒட்டுமொத்த கல்வித் தரத்தை உயர்த்த வழிவகை செய்யாது என்பதால் அதை உயர்த்துவது குறித்து ஆராய வல்லுநர் குழு ஒன்றை அமைக்க அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.
ஜூன் 15ல் பள்ளிகள் திறப்பு
எனவே பழைய பாடபுத்தகங்களையே பின்பற்றலாம் என்றும், பாட புத்தகங்களை அச்சிட சிறிது கால அவகாசம் தேவைப்படும் என்பதால் பள்ளிகளை ஜூன் 15-ம் தேதி திறக்கலாம் என்றும் அமைச்சரவை முடிவெடுத்தது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமச்சீர் கல்வித் திட்டத்தை இந்த ஆண்டு முதல் அனைத்து வகுப்புகளுக்கும் அறிமுகப்படுத்த கடந்த திமுக அரசு உத்தரவிட்டிருந்தது. இதற்காக பாடப் புத்தகங்களும் அச்சடிக்கப்பட்டிருந்தன. அதில் கருணாநிதி குறித்த பாடங்களையும் சேர்த்திருந்தனர். இந்த நிலையில் ஆட்சி மாறி விட்டதால் தற்போது அவற்றை மாணவர்களுக்கு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் இந்த ஆண்டு சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைக்க அதிமுக அரசு தீர்மானித்துள்ளது.
No comments:
Post a Comment