ராமச்சந்திரா மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்றுவரும் ரஜினி, தனக்கு உதவ பெண் செவிலியர்களுக்கு பதில் ஆண் செவிலியர்களை அனுப்புமாறு கேட்டுக் கொண்டார்.
ரஜினிக்கு அமெரிக்க டாக்டர்களின் ஆலோசனைப்படி, தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. நோய்த் தொற்றைத் தவிர்க்க அவரை பார்ப்பதற்கு விவிஐபி பார்வையாளர்கள் உள்பட யாரையுமே அனுமதிப்பதில்லை மருத்துவமனை நிர்வாகம்.
டயாலிசிஸ் சிகிச்சைக்குப் பிறகு அவர் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துமனை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க டாக்டர்களின் ஆலோசனைப்படி, தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அவரைப் பார்ப்பதற்கு பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அவருடைய மனைவி லதா ரஜினிகாந்த் மட்டும் அந்த அறைக்குள் அனுமதிக்கப்படுகிறார். வேறு யாரும் அனுமதிக்கப்படுவதில்லை.
நேற்று அவரை படுக்கையில் உட்கார வைப்பதற்கு பெண் செவிலியர்கள் உதவ வந்தார்கள். அவர்களிடம், "ஆண் செவிலியர்கள் வரச்சொல்லுங்கள்'' என்று ரஜினி கேட்டுக் கொண்டார். ஆண் செவிலியர்கள் வந்து அவரை படுக்கையில் உட்கார வைத்தார்கள்.
அமெரிக்காவில் இருந்து மருத்துவ ஆலோசனை கூறிவரும் டாக்டர்கள் அநேகமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு இன்று அல்லது நாளை வரவழைக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
திருநாவுக்கரசர்
முன்னாள் மத்திய அமைச்சர் சு.திருநாவுக்கரசர் நேற்று ராமச்சந்திரா மருத்துவமனைக்கு வந்தார். ரஜினிகாந்தை பார்ப்பதற்கு அவர் அனுமதிக்கப்படாததால், அவருடைய உதவியாளர் சுப்பையாவிடம் உடல்நலம் விசாரித்துவிட்டு, ரஜினிகாந்த் விரைவில் உடல் நலம் பெற திருநாவுக்கரசர் வாழ்த்து தெரிவித்தார்.
டாக்டர்கள் அறிக்கை
ரஜினிகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவருடைய இதய துடிப்பு, ரத்த அழுத்தம், சர்க்கரையின் அளவு ஆகியவை சீராகியுள்ளதாகவும் மருத்துவமனை நேற்று தனது செய்திக் குறிப்பில் தெரிவித்திருந்தது.
ஐஸ்வர்யா பேட்டி
ரஜினிகாந்தின் உடல்நிலை பற்றி நேற்று அவருடைய மூத்த மகள் ஐஸ்வர்யா கூறும்போது, "அப்பாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது. அவர் விரைவாக குணம் அடைந்து வருகிறார். ஆண்டவனின் அருளும், ரசிகர்களின் பிரார்த்தனைகளும்தான் இதற்கு காரணம்,'' என்றார்.
சரத்குமார் பங்கேற்பு
ரஜினிகாந்த் விரைவில் பூரண குணம் அடைய வேண்டி, தமிழ்நாடு முழுவதும் அவருடைய ரசிகர்கள் கோவில்களில் விசேஷ பூஜைகளும், பிரார்த்தனைகளும் செய்து வருகிறார்கள். ஆவடியில், நடிகர் ராகவேந்திரா லாரன்ஸ் கட்டியுள்ள ராகவேந்திரர் கோவிலில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.30 மணிக்கு கூட்டு பிரார்த்தனை நடக்கிறது. அதில், நடிகர் சங்க தலைவர் சரத்குமாருடன் ராகவேந்திரா லாரன்சும் கலந்துகொள்கிறார்.
7 நாட்கள் அன்னதானம்
தொடர்ந்து 7 நாட்கள் கூட்டு பிரார்த்தனையும், தினமும் ஆயிரம் பேருக்கு அன்னதானமும் வழங்க ராகவேந்திரா லாரன்ஸ் ஏற்பாடு செய்துள்ளார். அதில், நடிகர்-நடிகைகள் பங்கேற்கிறார்கள்.
சென்னை அமைந்தகரை பொன்னுவேல் பிள்ளை தோட்டத்தில் உள்ள வரசித்தி விநாயகர் கோவிலில், ரஜினிகாந்த் பரிபூரண குணம் அடைய வேண்டி சிறப்பு யாகமும், பூஜையும் நடத்தப்பட்டது. ரசிகர்கள் சார்பில் அன்னதானமும் நடந்தது.
No comments:
Post a Comment