சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான பின், தி.மு.க., - காங்கிரஸ் இடையே, "லடாய்' ஆரம்பமாகி உள்ளது. கனிமொழியை சந்திக்க டில்லி செல்லும் கருணாநிதி, "காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்திக்க வாய்ப்பில்லை' என, கூறிவிட்டார். அதேபோல, பிரதமர் நேற்றிரவு அளித்த விருந்திலும், மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள, தி.மு.க., அமைச்சர்கள் ஒருவர் கூட பங்கேற்கவில்லை. ஒப்புக்கு, தி.மு.க., பார்லி., கடசித் தலைவர் டி.ஆர்.பாலு மட்டும் கலந்து கொண்டார்.
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலுக்கான தொகுதிப்பங்கீடு பேச்சில், தி.மு.க., - காங்கிரஸ் இடையேயான பூசல்கள் பூகம்பமாக வெடித்தது. தி.மு.க., உயர்மட்டக்குழு கூட்டத்தில், காங்கிரசுடன் கூட்டணியை முறித்து கொள்வதாக, கருணாநிதி அறிவித்தார்.இதை, இரு கட்சித் தொண்டர்களும் வரவேற்று, பட்டாசு வெடித்து கொண்டாடினர். ஆனால், இரு தினங்களில், இரு தரப்பிலும் பேச்சு நடத்தி, மீண்டும் கூட்டணி ஏற்பட்டு தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் ஆனது.இதற்கு பின், மத்திய அமைச்சராக இருந்து, "ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீட்டு ஊழலில், கைது செய்யப்பட்ட, தி.மு.க.,வின் ராஜா மற்றும் கருணாநிதி குடும்பத்தாரிடம், கலைஞர், "டிவி' நிர்வாகிகளிடம், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும், சி.பி.ஐ.,யும், அமலாக்கத்துறையும், விசாரணை மூலம், பிடியை இறுக்கியது.ராஜா கைதுக்கு பின், தமிழகத்தில் ஓட்டுப்பதிவு முடிந்ததும், இரண்டாவது குற்றப்பத்திரிகையில், கருணாநிதியின் மகள் கனிமொழியின் பெயர் இடம்பெற்றது.பின், தேர்தல் முடிவுகள் வெளிவந்து, தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி தோல்வியடைந்த நிலையில், கனிமொழியின் ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டதால், அவர், கடந்த, 20ம் தேதி கைது செய்யப்பட்டார்.
திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழியை அவரது தாய் ராஜாத்தி மற்றும் தி.மு.க.,வினர் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். இந்நிலையில், மகள் கனிமொழியை சிறையில் சென்று பார்க்க, கருணாநிதி, இன்று டில்லி செல்கிறார். இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.தி.மு.க., அங்கம் வகிக்கும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின், 3ம் ஆண்டு துவக்க விழா நேற்று நடந்த நிலையில், பிரதமர் நடத்திய விருந்தில் பங்கேற்க, தி.மு.க., தலைவருக்கும் அழைப்பு வந்தது. ஆனால், மகள் கைதானது, தமிழக தேர்தலில் தி.மு.க.,வின் தோல்விக்கு பின் ஏற்பட்ட சம்பவங்கள், கருணாநிதிக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளன.தேர்தல் முடிவுகள் வெளியான பின், ஜெயலலிதாவுடன் தொலைபேசியில் பேசிய சோனியா, தி.மு.க., தலைவர் அல்லது நிர்வாகிகளுடன் பேசவில்லை. தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன், கருணாநிதியை வீடு தேடி வந்து சந்தித்த காங்கிரஸ் தலைவர்கள் யாரும், முடிவு வெளியான பின் சந்திக்கவில்லை.இதனால், காங்கிரசார் மீது கடும் கோபத்தில், தி.மு.க., தலைமை உள்ளது. எனவே தான், பிரதமரின் விருந்தில் கலந்து கொள்வதை கருணாநிதி தவிர்த்தார்.
ஒப்புக்காக, தி.மு.க., பார்லிமென்ட் கட்சித் தலைவர், டி.ஆர்.பாலுவை மட்டும் அனுப்பினார். மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள, தி.மு.க., அமைச்சர்கள் ஆறு பேரும் இந்த விருந்தில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கிக் கொண்டனர்.அதேபோல, "சோனியாவையும் டில்லியில் சந்திக்கும் வாய்ப்பில்லை' என, கருணாநிதி நேற்றே கூறிவிட்டார். ஒவ்வொரு டில்லி பயணத்தின்போதும், தி.மு.க., தலைவர் கருணாநிதி, கூட்டணி கட்சித் தலைவர் சோனியாவை சந்திப்பது வழக்கம். இம்முறை, டில்லியில் தங்கும் போது, காங்கிரஸ் தலைவர்களை கூட அவர் சந்திக்க மாட்டார் என்றே, தி.மு.க., நிர்வாகிகள் கூறுகின்றனர். இதனால், காங்கிரஸ் - தி.மு.க., இடையே, "லடாய்' ஆரம்பமாகி விட்டது என்றே, அரசியல் நோக்கர்கள் கூறுகின்னர்.
கனிமொழியை பார்க்க கருணாநிதி டில்லி பயணம்:""திகார் சிறையில் இருக்கும் என் மகள் கனிமொழி, சரத்குமார், ராஜாவை பார்க்க டில்லி செல்கிறேன்,'' என, முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறினார்.
சென்னையில் தி.மு.க., தலைவர் கருணாநிதி நேற்று அளித்த பேட்டி:
பிரதமர், டில்லியில் அளிக்கும் விருந்தில் தி.மு.க., சார்பில் யார் கலந்து கொள்கின்றனர்?
பார்லிமென்டில் தி.மு.க., குழுத் தலைவராக டி.ஆர்.பாலு இருக்கிறார். பிரதமர் அளிக்கும் விருந்தில், தி.மு.க., சார்பில் அவர் கலந்து கொள்கிறார்.
நீங்கள் நாளை (இன்று) டில்லி செல்வதாகச் செய்தி வந்துள்ளதே?
திகார் சிறையில் இருக்கும் என் மகள் கனிமொழி, சரத்குமார், ராஜா ஆகிய மூன்று பேரையும் பார்ப்பதற்காக நாளைக்கு (இன்று) டில்லி செல்கிறேன்.
டில்லி செல்லும் போது சோனியாவை சந்திக்க வாய்ப்பு இருக்கிறதா?
நாளைய தினம் வாய்ப்பு இருக்காது என்றே நினைக்கிறேன்.
உங்களுக்கும் காங்கிரசுக்கும் இடையே உறவு தற்போது எப்படி இருக்கிறது?
இருவருக்கும் இடையே உறவு இருக்கக் கூடாது என்று நீங்கள் விரும்புவதைப்போல அப்படி எதுவும் இல்லை.இவ்வாறு கருணாநிதி கூறினார்.
No comments:
Post a Comment