அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ -மாணவிகளுக்கும், கல்லூரி மாணவ- மாணவிகளுக்கும் இலவச மடிக்கணினி (லேப் - டாப்) வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதியில் அறிவித்து இருந்தார். அதன்படி வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும் இத் திட்டத்தை அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந் தேதி செயல்படுத்த போவதாக கவர்னர் உரையில் ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்டார்.
முதல் கட்டமாக இந்த ஆண்டு 9 லட்சத்து 12 ஆயிரம் மாணவ -மாணவிகளுக்கு இலவச லேப்-டாப் (மடிக்கணினி) வழங்கப்பட உள்ளதாக அதில் கூறப்பட்டிருந்தது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா செப்டம்பர் 15-ந் தேதி இத் திட்டத்தை தொடங்கி வைத்து சென்னையில் மாணவ-மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகளை வழங்க உள்ளார்.
இதற்காக லேப்-டாப் கொள்முதல் செய்ய அரசு டெண்டர் வெளியிட்டுள்ளது. அடுத்த மாதம் 11-ந் தேதி வரை விருப்பப்படும் நிறுவனங்கள் டெண்டர் அனுப்பலாம். லேப்-டாப் கம்ப்யூட்டரில் ஏற்படும் பிரச்சினைகளை சரி செய்ய தயாரிப்பு நிறுவனம், தாலுகா அளவில் சர்வீஸ் சென்டர் வைத்திருக்க வேண்டும், 3 ஆண்டுகள் வரை இலவச சர்வீஸ் செய்து கொடுக்க வேண்டும் என்பது டெண்டரின் நிபந்தனையாகும். வருகிற 22-ந் தேதி சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்காட் நிறுவனத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் லேப்-டாப் தயாரித்தி கொடுக்க விரும்பும் நிறுவனங்கள் பங்கேற்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது.
அரசு வழங்க இருக்கும் லேப்-டாப்பை விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் அல்லது வினக்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் முறையில் இயக்கலாம். ஸ்டாட்டர் எடிஷன், கேமரா, ஒயர்லெஸ், டி.வி.டி. ரைட்டர், வேர்டு, எக்சல், மற்றும் டேட்டா பேஸ் புரோகிராம் மற்றும் கல்வி தொடர்பான சாப்ட்வேர்கள் அதில் இணைக்கப்பட்டிருக்கும்.
பெரிய அளவிலான ஸ்கிரீன், 2 ஜி.பி. ரேம், 320 ஜி.பி. ஹார்டு டிஸ்க் அதில் இருக்கும். இது தொடர்பாக லேப்- டாப் தயாரிப்பில் ஏற்படும் சந்தேகங்களை எல்காட் அதிகாரிகளிடம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்றும் அரசு அறிவித்துள்ளது.

No comments:
Post a Comment