காலை சுற்றிய கிரகம் கழுத்து மேல் ஆடாமல் போகாது போலிருக்கிறது. கலை வேறு, அரசியல் வேறு என்று கருதுகிற சூழ்நிலை இல்லாத நாடு தமிழ்நாடு மட்டும்தான். இங்கே முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கதை வசனத்தில் படம் எடுப்பவர்களுக்கு அடுத்த ஆட்சியில் முழு நேர ஓய்வு தரப்படும் என்பது நாடறிந்த விஷயம். இந்த இக்கட்டான சூழ்நிலையில்தான் தான் இயக்கி தயாரித்திருக்கும் மம்மட்டியான் படத்தை வெளியிடும் வேலையில் மும்முரமாக இறங்கியிருக்கிறார் தியாகராஜன்.
இவர் இயக்கி சமீபத்தில் வெளிவந்த பொன்னர் சங்கர் படத்தின் கதை வசனம் எழுதியிருந்தவர் கருணாநிதி. பிரசாந்த் ஹீரோ. போதாதா? இந்த படத்தை எப்படிதான் வெளியிடுவார், பார்க்கலாமே என்று காத்திருக்கிறது மொத்த இன்டஸ்ட்ரியும். அதைப்பற்றியெல்லாம் கவலைப்பட்டதாக தெரியவில்லை தியாகராஜன்.
பழைய மம்பட்டியான் படத்தின் ரீமேக்தான் இந்த மம்மட்டியானும். முந்தைய படத்தில் இடம் பெற்ற காட்டுவழி போற பொண்ணே கவலைப்படாதே... என்ற பாடலை இந்த படத்திலும் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆச்சர்யம் என்னவென்றால் இந்த பாடலை பாடியிருப்பவர் ராஜேந்தரின் வாரிசு சிம்பு.
ரிலீஸ் பஞ்சாயத்து ஒருபுறம் இருக்கட்டும். கல்யாணத்திற்கு கழுத்தை நீட்ட தயாராக இருக்கிறார் மீராஜாஸ்மின். பிரசாந்திற்கு ஜோடியாக நடித்திருக்கும் இவரிடம், யம்மாடி.. கொஞ்சநாள் பொறுத்துக்கோ. நாங்க படத்தை ரிலீஸ் செய்தவுடன் எத்தனை கல்யாணம் வேணும்னாலும் பண்ணிக்கோ என்று கூறியிருக்கிறாராம் மம்பட்டியான்.
காட்டுவழி போற பொண்ணை கவலைப்படாமல் இருக்க சொல்வார்கள். கல்யாணத்துக்கு தயாராக இருக்கிற பெண்ணை தடுப்பார்கள். என்னங்கய்யா லாஜிக்

No comments:
Post a Comment