குடியாத்தத்தில் முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் உடனடியாக வெளியேற வேண்டும் என்று பெரும்பாலான தொண்டர்கள் நினைக்கிறார்கள். வேறு கட்சிகளுடன் கூட்டணி என்பதை கட்சி மேலிடம் தெரிவிக்க வேண்டும். கூட்டணி குறித்து கட்சி மேலிடம் எடுக்கும் முடிவை ஏற்போம்.
தலைவர் பதவியில் இருந்து தங்கபாலுவை மாற்ற வேண்டும். கட்சி மேலிடம் யாரை நியமித்தாலும் ஏற்போம். புதிய தலைவர் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அ.தி.மு.க. ஆட்சியின் தொடக்கம் நன்றாக உள்ளது. டெல்லியில் பத்திரிகையாளர் சந்திப்பில் மாநிலத்துக்கு நல்ல திட்டங்களையும், மக்களுக்கான நல்ல காரியங்களையும் அறிவித்துள்ளார். சமச்சீர் கல்வியை நடை முறைப்படுத்துவது தொடர்பாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்டுள்ள நடவடிக்கை பாராட்டுக்குரியது.
கல்வியாளர்களுடன் ஆலோசித்து சமச்சீர் கல்வியை அவர் நடை முறைபடுத்துவார் என்று நம்புகிறேன். தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்ட புதிய தலைமை செயலகத்தை புறக்கணிப்பதாக ஜெயலலிதா மீது தி.மு.க. வினர் புகார் கூறுகிறார்கள். கட்டுமான பணிகள் நிறைவு பெறாத நிலையில் அவசர கோலத்தில் அள்ளி தெளித்த கதையாக அதன் திறப்பு விழா நடந்தது.
பிரதமர் அதை திறந்த போதே திரைப்பட பாணியில் அங்கு அரங்கு அமைக்கப்பட்டதே அதற்கு சான்று. இப்போதைய சூழலில் அங்கு தலைமை செயலகம் செயல்பட அந்த கட்டிடம் உதவாது. அந்த விசயத்தில் கருணாநிதி அடம் பிடிப்பது குழந்தைத்தனமாக உள்ளது.
ஸ்பெக்ட்ரம் வழக்கு சுப்ரீம் கோர்ட்டின் நேரடி கண்காணிப்பில் நடக்கிறது. 2 குற்றப்பத்திரிகைகளை சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ளது. 3-வது குற்றப்பத்திரிகை விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. அந்த வழக்கு விரைவில் முடிந்து குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் சேர்த்துள்ள ஊழல் சொத்துக்களை பறி முதல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment