ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில் சிறப்பாக தேர்தல் பணியாற்றிய அதிமுகவினருக்கு முதல்வர் ஜெயலலிதா பரிசு வழங்கினார்.
இது குறித்து அதிமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
’’ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டதையடுத்து, ஸ்ரீரங்கம் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக அதிமுக பொதுச்செயலரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா திருச்சி வந்துள்ளார்.
ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதி மற்றும் ஒன்றியம் வாரியாக அதிக வாக்குகளைப் பெற்றுக் கொடுத்த முதல் மூன்று வாக்குச் சாவடிகளைச் சேர்ந்த அதிமுக பொறுப்பாளர்களையும், உறுப்பினர்களையும் நேரில் வரவழைத்து, அவர்களுக்கு முறையே ஒரு பவுன், முக்கால் பவுன், அரை பவுன் தங்க மோதிரங்களையும்; உறுப்பினர்களுக்கு கைக் கடிகாரங்களையும் பரிசாக வழங்கி பாராட்டினார்.
இதன்படி, ஸ்ரீரங்கம் பகுதியில் முதலிடத்தை பெற்ற 64/2 எண்ணுடைய வாக்குச் சாவடியின் பொறுப்பாளர் ஆர். லட்சுமிநாராயணன் ஒரு பவுன் தங்க மோதிரத்தையும், இரண்டாவது இடத்தைப் பெற்ற 68/2 எண்ணுடைய வாக்குச் சாவடியின் பொறுப்பாளரும், ஸ்ரீரங்கம் பகுதி வட்ட பாகச் செயலருமான எம்.கே. முத்துகிருஷ்ணன் முக்கால் பவுன் தங்க மோதிரத்தையும்,
மூன்றாவது இடத்தைப் பெற்ற 70/2 எண்ணுடைய வாக்குச் சாவடியின் பொறுப்பாளரும், ஸ்ரீரங்கம் பகுதி 2-வது வட்டச் செயலருமான கா. திருவேங்கடன் அரை பவுன் தங்க மோதிரத்தையும், மேற்படி வாக்குச் சாவடிகளைச் சேர்ந்த இதர உறுப்பினர்கள் கைக்கடிகாரங்களையும் பெற்றுக் கொண்டனர்.
மணிகண்டம் ஒன்றியத்தில் முதலிடத்தை பெற்ற 186 எண்ணுடைய வாக்குச் சாவடியின் பொறுப்பாளரும், தாயனூர் ஊராட்சி அதிமுக செயலருமான கே. இன்பராஜ் ஒரு பவுன் தங்க மோதிரத்தையும், இரண்டாவது இடத்தைப் பெற்ற 155 எண்ணுடைய வாக்குச் சாவடியின் பொறுப்பாளரும், அதவத்தூர் ஊராட்சி கழகச் செயலருமான ஏ. முத்துவீரன் முக்கால் பவுன் தங்க மோதிரத்தையும்,
மூன்றாவது இடத்தைப் பெற்ற 156 எண்ணுடைய வாக்குச் சாவடியின் பொறுப்பாளரும், பள்ளக்காடு கிளைச் செயலருமான பி. திருமூர்த்தி அரை பவுன் தங்க மோதிரத்தையும், மேற்படி வாக்குச் சாவடிகளைச் சேர்ந்த இதர உறுப்பினர்கள் கைக்கடிகாரங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பரிசுப் பொருட்களை பெற்றுக் கொண்ட ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த அதிமுக பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும், முதல்வர் ஜெயலலிதாவுக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment