மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் இணையும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொது செயலாளர் பிரகாஷ் கரத் கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு கூட்டம் கோவை காந்திபுரம் கமலம் துரைசாமி ஹாலில் நேற்று தொடங்கியது. கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வந்த பிரகாஷ் கரத் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் மத்திய மந்திரி தயாநிதி மாறன் தொடர்பும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆகவே அவர் பதவி விலக வேண்டும் என்று ஏற்கனவே நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். அடுத்ததாக இயற்கை எரிவாயு அனுமதி வழங்கியதில் 2 வது ஊழல் அம்பலமாகி உள்ளது.
இதனால் அரசுக்கு பெருந்தொகை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்கு தணிக்கை அறிக்கை மூலம் கூறப்படுகிறது. இதுபோன்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஊழல்களை அம்பலப்படுத்துவதற்காக இடதுசாரி கட்சிகள் இணைந்து விரைவில் டெல்லியில் கூட்டம் நடத்தப்படும்.
மத்திய அரசு உணவு பாதுகாப்பு சட்டத்தை கொண்டுவருவதாக கூறி உள்ளது. இந்த சட்டத்தில் பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் உணவு கிடைக்கும் வகையில் உறுதி செய்யப்பட வேண்டும்.
பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வுதான் பணவீக்க விகிதம் அதிகரிக்க காரணமாக உள்ளது. இதை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் இணையும் என்ற பேச்சுக்கே இடமில்லை. சமீபத்தில் ஐதராபாத்தில் கூடிய எங்கள் கட்சி குழு இதுபற்றி எதுவும் விவாதிக்கவில்லை. எங்களை பொறுத்தவரை இடதுசாரி கட்சிகள் ஒற்றுமையே மிக முக்கியம். ஏற்கனவே நாங்கள் பல விஷயங்கள் மீது ஒன்றிணைந்து போராடி வருகிறோம். இது தொடரும் என்றார்.

No comments:
Post a Comment