பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட 15 மத்திய அமைச்சர்களுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுக்களை கூறியுள்ள அன்னா ஹசாரே குழு,இது தொடர்பாக விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங்,நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி,உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டவர்களின் பெயர்கள் அன்னா குழு தெரிவித்துள்ள புகார் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
இவர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்களை 6 பேர் கொண்ட நீதிபதிகள் விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள அக்குழு,நீதிபதிகளின் பெயர்களையும் தெரிவித்து,இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளது.
இத்தகவலை செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்த ஹசாரே குழு உறுப்பினர்களில் ஒருவரான பிரசாந்த் பூஷண்,2006 முதல் 2009 ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில், விதிமுறைகளுக்கு மாறாக மிகக்குறைந்த விலையில் நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியதோடு, அந்த காலக்கட்டத்தில் நிலக்கரி இலாகாவை தம் வசம் வைத்திருந்தவர் என்ற முறையில் பிரதமர்தான் இதற்கு பொறுப்பாவார் என்று குற்றம்சாட்டினார்.
தற்போதைய நிதியமைச்சரான பிரணாப் முகர்ஜி,பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தபோதுதான்,ஸ்கோர்பென் நீர்மூழ்கி கப்பல் வாங்கும் பேரத்திற்காக 4 சதவிகித கமிஷன் பெறப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ள ஹசாரே குழு, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு மற்றும் வோடாபோன் நிறுவனத்திற்கான அனுமதி வழங்குவதில் நடைபெற்ற ஊழலில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.
ஹசாரே குழு ஊழல் குற்றம்சாட்டியுள்ள அமைச்சர்கள் பட்டியலில் சரத் பவார்,எஸ்.எம்.கிருஷ்ணா,கமல் நாத்,பிரபுல் படேல், விலாஸ்ராவ் தேஷ்முக்,வீர்பத்ர சிங்,கபில் சிபல்,சல்மான் குர்ஷித்,ஜி.கே.வாசன்,மு.க. அழகிரி,பரூக் அப்துல்லா மற்றும் எஸ்.கே. ஷிண்டே ஆகியோரது பெயர்களும் இடம்பெற்றுள்ளது.
இந்த அமைச்சர்கள்தான் லோக்பால் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாக குற்றம்சாட்டியுள்ள பிரசாந்த் பூஷண், இவர்கள் 15 பேர் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால் மீண்டும் ஜூலை 4-ந்தேதி முதல் உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படும் என்றும் பிரதமருக்கு எழுதப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
No comments:
Post a Comment