சீர்காழி அருகே தந்தையும், மகளும் பிளஸ் டூ தேர்வு எழுதினர். அதில் மகள் தேர்ச்சியடைந்துவிட்டார். ஆனால் தந்தை பெயிலாகிவிட்டார்.
நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வேட்டங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து(39). சாலை பணியாளர். அவரது மகள் சுபஸ்ரீதேவி (17). அவர் சீர்காழியில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படித்தார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாரிமுத்துவும், சுபஸ்ரீதேவியும் ஒன்றாக பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் இந்த ஆண்டு அவர்கள் இருவரும் பிளஸ் டூ தேர்வு எழுதினர். இதில் சுபஸ்ரீதேவி 1,200க்கு 869 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்துள்ளார். ஆனால் தந்தை மாரிமுத்து தமிழை தவிர அனைத்து பாடங்களிலும் தோல்வி அடைந்துள்ளார்.
மாரிமுத்துவின் மதிப்பெண் விவரம்,
தமிழ்- 78, ஆங்கிலம்-52, பொருளியல்-16, வணிகவியல்-17, வரலாறு-51, கணக்குப்பதிவியல்-54.
மகள் சுபஸ்ரீதேவி மதிப்பெண் விவரம்,
தமிழ்-174, ஆங்கிலம்-163, இயற்பியல்-147, வேதியியல்-147, உயிரியல்-105, கணிதம்-133.
தனி தேர்வராக எழுதிய மாரிமுத்து கூறுகையில்,
நான் புதுவையில் 9ம் வகுப்பு படித்தேன். ஆனால் 9ம் வகுப்பில் தோல்வி அடைந்தேன். இதையடுத்து தான் சீர்காழிக்கு வந்து மண்பாண்டம் செய்யும் தொழில் செய்தேன். அதன் பிறகு சாலை பணியாளர் வேலை கிடைத்தது.
நான் கஷ்டப்பட்டு படித்து எனது மகளுடன் சேர்ந்து 10ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சியும் பெற்றேன். எனது மகளுடன் சேர்ந்து படிப்பது உற்சாகத்தை தந்தததால் பிளஸ் டூ தேர்வும் எழுதினேன்.
பிளஸ் டூ தேர்வுக்காக வேலை நேரம் போக மீதி நேரத்தில் முழு கவனத்துடன் படித்தேன். ஆனால் என்னால் ஒரு பாடத்தில் மட்டுமே தேர்ச்சி பெற முடிந்தது. என்னைப் போன்று ஏதோ சந்தர்ப்பத்தில் படிக்கும் வாய்ப்பை இழந்தவர்கள் தொடர்ந்து படிக்க வேண்டும். இதை வலியுறித்தவே பிளஸ் டூ தேர்வு எழுதினேன்.
அடுத்த முறை முயற்சி செய்து தேர்ச்சி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. நான் ஒரு பட்டதாரியாக வேண்டும் என்பதே எனது லட்சியம் என்றார்.
No comments:
Post a Comment